வடமராட்சி பிரதேச சபை உறுப்பினர்களை அவமதித்த அதிகாரிக்கு பிணை

வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களை சபை மண்டபத்திலிருந்து வெளியேறுமாறு கூறி அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட வருமான வரி பரிசோதகருக்கு, தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான 4 சரீரப் பிணைகளில் செல்ல பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மாதம் பிரதேச சபை அமர்வு நடைபெற்றுக் கொண்டிருந்த போது, சபை மண்டபத்திற்குள் சென்ற குறித்த வருமான வரி பரிசோதகர், அங்கு அமர்ந்திருந்த உறுப்பினர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டு, அவர்களை வெளியேறுமாறு கூறி அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக உறுப்பினர்களால் நெல்லியடி காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்த முறைப்பாடு தொடர்பான வழக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, நீண்ட விவாதத்திற்குப் பிறகு நீதவான் இந்த பிணை உத்தரவைப் பிறப்பித்தார்.

அதேவேளை, குறித்த அதிகாரியை பிணையில் எடுப்பதற்காக பிரதேச சபையின் 4 உத்தியோகத்தர்கள் கடமை நேரத்திலேயே சீருடையுடன் நீதிமன்றத்திற்குச் சென்றதாகவும், இதனால் அவர்கள் தமது கடமைகளை துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் சபை உறுப்பினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இருப்பினும், இது குறித்து விளக்கமளித்த சபை செயலாளர், அந்த அதிகாரி கடமையிலிருந்த போதே பிரச்சினை ஏற்பட்டதால் அவர் சீருடையில் செல்ல அனுமதிக்கப்பட்டார் என்றும், அவரை பிணையில் எடுக்கச் சென்ற ஊழியர்கள் முறையான விடுமுறை எடுத்தே சென்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.