பனாமா கப்பலுக்குள் பிடிபட்ட இலங்கையர்களுக்கு பிணை

கொழும்பு துறைமுகத்தில் நங்குரமிடப்பட்டிருந்த பனாமா நாட்டு கப்பலுக்குள் இரகசியமான முறையில் பிரவேசித்து சட்டவிரோதமாக அமெரிக்கா செல்ல முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நால்வருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலி பிரதம நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டபோது இந்த உத்தறவு பிறபிக்கப்பட்டுள்ளது. இதன்போது சந்தேக நபர்கள் ஒவ்வொருவரும் தலா 5 இலட்சம் ரூபாவுக்கு நிகரான இரண்டு சரீரப்பிணைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சந்தேக நபர்கள் நாட்டில் இருந்து சட்டவிரோதமாக வெளியேறுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டவர்களை உடனடியாக கைது செய்யுமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த மாதம் 24ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த  சரக்கு கப்பலுக்குள் நான்கு இளைஞர்கள் இரகசியமாக நுழைந்து அங்கிருந்த கொள்கலன் பெட்டிகளுக்கு அருகில் மறைந்துக் கொண்டதுடன் கப்பல் சூயஸ் கால்வாய் ஊடாக சென்று கொண்டிருந்த வேளையில் குறித்த இளைஞர்கள் மறைவிடத்தை விட்டு வெளியே வந்து கப்பலின் கேப்டனை சந்தித்து தாம் சூயஸ் கால்வாய் அருகே கப்பலை விட்டு இறங்கி அமெரிக்கா செல்வதாக கூறியுள்ளனர்.

இருப்பினும் பிறிதொரு கப்பலின் மூலம் குறித்த குழுவினர்  இலங்கை பாதுகாப்பு  படையினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கமைவாக காலி துறைமுகத்தை அண்மித்த எல்லையில் உள்ள  குடிவரவு அதிகாரிகளிடம் இளைஞர்கள ஒப்படைக்கப்பட்டு கடற்படையின் கப்பல் மூலம் காலி துறைமுகத்தில் உள்ள குடிவரவு அலுவலகத்திற்கு

அழைத்து வரப்பட்ட இளைஞர்கள் குழுவிடம் அதிகாரிகள் நீண்ட வாக்குமூலங்களை பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம்,  சுன்னாகம், வல்வெட்டித்துறை மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 25 முதல் 32 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர்.

சந்தேக நபர்கள்  விசாரணைகளின் பின்னர் காலி துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு காலி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில்  18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இதேவேளை சம்பவம் தொடர்பில் குடிவரவு திணைக்கள அதிகாரிகள் விரிவான விசாரணைகளை ஆரம்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply