தமிழர்களுக்கு வாக்களிப்பதன் அவசியத்தினை உணர்த்தும் தேர்தல்- க.அகரன்

270 Views

கொரோனா தொற்று மீண்டும் அபாயத்தினை ஏற்படுத்தும் நிலையில் சிறீலங்கா அரசு பாராளுமன்ற தேர்தலையும் நடத்திவிட வேண்டும் என கங்கணம் கட்டி நிற்கும் சூழலில் எதுவும் நடந்து விடக்கூடிய நிலை காணப்படுகின்றது.

தபால் மூலமான வாக்களிப்பு இடம்பெற்று வரும் நிலையில் ராஜாங்கனையில் தபால் மூல வாக்களிப்புக்கான திகதி பிற்போடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மருத்துவர் சங்கத்தின் அறிவுரைகளையும் மீறி பாடசாலைகளை திறந்து இன்று மாணவர்கள் மத்தியில் தொற்றை ஏற்படுத்தி மீண்டும் பாடசாலைகளை மூடும் துர்ப்பாக்கிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேர்தலும் எதிர்வரும் நாட்களில் இலங்கையில் காணப்படப்போகும் கொரோனா தொற்றின் வேகத்தினையும் அதன் தாக்கத்தினையும் பொறுத்தே தீர்மானிக்கப்படப் போகின்றது என்பது உண்மை.

எனினும் சிறீலங்கா அரசாங்கத்தினை பொறுத்தவரையில், இந்த தேர்தலை தமக்கான அலையொன்று இருக்கும் போதே நடத்திவிட வேண்டும் என்ற அவாவில் உள்ளனர். இதற்காக அவர்கள் எத்தனை விலை கொடுக்கவும் இருந்த நிலையில் தற்போது கொரோனாவோடு போட்டி போடுவார்களா, இல்லையேல் தேர்தல் பிற்போடப்படுமா என்ற கேள்விக்கு மத்தியில் தேர்தல் களமும் சூடுபிடித்துள்ளது.

தமிழர் பிரதேசங்கள் எங்கும் தேர்தல் பிரசாரங்கள் வழமைக்கு மாறாக ஒருவரை ஒருவர் நேரடியாக கூட்டிக் காட்டி பிரசாரம் செய்வதும், தமது கட்சிக்குள்ளேயே சக வேட்பாளரை தாக்கிப் பேசும் அநாகரீக பிரசார யுக்தி கையாளப்பட்டு வருகின்றது.

விருப்பு வாக்குமுறை தேர்தல் என்பதனால், யார் மக்கள் பிரதிநிதியாகுவது என்ற போட்டி காணப்பட்டாலும், தற்போதைய பிரசார யுக்தி அதி பயங்கரமானது என்பது மறுப்பதற்கில்லை.Gotabaya Rajapaksa 3 தமிழர்களுக்கு வாக்களிப்பதன் அவசியத்தினை உணர்த்தும் தேர்தல்- க.அகரன்

இந்நிலையில் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் சகவேட்பாளர்கள் சிலரே தமது கட்சியின் ஒரு சில வேட்பாளர்களை மக்கள் மத்தியில் இருந்து துடைத்தெறிந்துவிட வேண்டும் என கங்கணம் கட்டி நிற்கின்றனர்.

இதன் ஓர் வெளிப்பாடாகவே தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட மகளிர் அணி செயலாளரான விமலேஸ்வரியின் கருத்துக்கள் அண்மைய நாட்களாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தமிழரசுக் கட்சிக்கு கனடா ஆதரவாளர்களால் வழங்கப்பட்ட சுமார் 21 கோடி ரூபா நிதிக்கு என்ன நடந்தது என்ற கேள்வியாகும்.

வடக்கு கிழக்கில் தேர்தல் களத்தில் உள்ள சுயேட்சைகள் முதற்கொண்டு அரசியல் கட்சிகள் அனைத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்த கூடியதாக பிரசாரம் செய்து வருகின்றனரோ, அதற்கு மேலாக அக்கட்சியின் மகளிர் அணி செயலாளாரின் கருத்து பாரதூரமானதாக அமைந்துள்ளது.

விமலேஸ்வரி யார் என்ற கேள்வி எழலாம். இளைஞர் சேவைகள் மன்றத்தின் வவுனியா பிராந்திய உதவி பணிப்பாளராக இருந்து பின்னர் மாகாண பணிப்பாளராக கடமையாற்றிய ஆளுமை மிக்க பெண். அரசியலானாலும் சரி சமூக விடயங்களானாலும் சரி துணிந்து கருத்துக்களை முன்வைக்கும் பெண் என்ற கருத்துள்ளது.

எனினும் இவர் கடந்த காலங்களில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட கீதாஞ்சலியுடன் நெருங்கிய தொடர்புடையவரென்பதுடன், தேர்தல் பிரசாரங்களிலும் பலம் கண்ட சம்பவங்களும் உள்ளது. அதற்குமப்பால் நாமல் ராஜபக்சவினால் இளைஞர் சேவைகள் மன்றத்தின் மூலம் ஆரம்பிக்கப்பட்ட நீலம் படையணியின் செயற்பாடுகளிலும் ஓய்வு பெற்றதன் பின்னரும் கூட நெருங்கி செயற்பட்டிருக்கின்றார்.

இவ்வாறான நிலையில் விமலேஸ்வரியின் கருத்துக்கள் எந்த பின்புலத்தில் இருந்து தேர்தல் காலத்தில் வெளிப்படுத்தப்பட்டது என்ற சந்தேகம் எழச் செய்வது யதார்த்தமே.

தனி ஒரு வேட்பாளராக சுமந்திரனை தாக்குவதாக நினைத்து அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு, இன்று தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என தம்மை அடையாளப்படுத்திய தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கே  பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு என புலம்பெயர் தேசத்தில் இருந்து வரும் நிதிகளுக்கு என்ன நடக்கின்றது என்ற கேள்வி அவர்களின் பங்காளி கட்சிகளுக்கு எழாவிட்டாலும், அல்லது தமிழரசுக் கட்சியிடம் கேட்க வேண்டும் என தோன்றாது விட்டாலும் கூட தமிழ் மக்கள் மத்தியில் இந்த நிதி தொடர்பான சந்தேகம் காணப்பட்டிருந்தது.625.500.560.350.160.300.053.800.900.160.90 24 தமிழர்களுக்கு வாக்களிப்பதன் அவசியத்தினை உணர்த்தும் தேர்தல்- க.அகரன்

ஏனெனில், புலம்பெயர் தேசத்தில் இருந்து கூட்டமைப்புக்கான நிதி அனுசரணை அதிகளவில் உள்ளதாக கருத்து நிலவிவரும் நிலையிலேயே விமலேஸ்வரியின் கருத்து புரளியை கிளப்பி விட்டுள்ளது.

இதுபோன்று வன்னி தேர்தல் தொகுதியிலும் தமிழ் மக்களின் இருப்பு என்பது கேள்விக்குட்படுத்தப்படும் வகையிலான சிங்கள குடியேற்றங்கள் இடம்பெற்று வரும் நிலையில் பல சுயேட்சைகளும் அரசியல் கட்சிகளும் களத்தில் உள்ளது.

6 ஆசனங்களை கொண்ட வன்னி தேர்தல் தொகுதியில் 405 வேட்பளார்கள் களத்தில் உள்ளனர். எனவே வாக்கு சிதறல் என்பது அதிகளவாகவே இடம்பெறும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் பிரதிநிதித்துவத்தை எவ்வாறு தக்க வைத்துக் கொள்ளப் போகின்றனர் என்ற ஐயப்பாடு காணப்படுகின்றது.

வன்னி நிலப்பரப்போடு எவ்வித தொடர்புமற்ற பல சிங்கள வேட்பாளர்கள் பொதுஜன பெரமுனவுடன் களமிறங்கியுள்ளனர். அதற்குமப்பால் பாரிய நிதி வளத்துடன் சுயேட்சையாகவும் தென்பகுதியில் இருந்து சிங்கள வர்த்கரொருவர் களமிறங்கியுள்ளார். இவர்களுடன் தமிழ் பிரதிநிதிகளும் வேட்பாளர்களாக களத்தில் உள்ளதுடன் தமிழ் மக்கள் சிலரும் இவ்வாறான வேட்பாளர்களுக்காக வாக்கு பெறும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 3 பாராளுமன்ற தேர்தலில் சிங்கள பிரதிநிதித்துவம் இன்றி காணப்பட்ட வன்னி தேர்தல் தொகுதியில் இம்முறை ஒருவரையாவது கொண்டு வந்துவிட வேண்டும் என சிங்கள மக்கள் மட்டுமன்றி அரசாங்கமும் எண்ணியுள்ளது.

இது வன்னிப் பிரதேசத்தினை உள்ளடக்கிய வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டத்தினை உள்ளடக்கிய பிரதேசங்களில் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வதற்கு இலகுவாக அமையும் என கரிசனை கொண்டுள்ளனர்.

ஆகவே இவ்வாறான தேர்தல் சூழலில் வன்னி தேர்தல் மாவட்டம் பாரிய இனப்பரம்பலை மாற்றியமைக்கும் களமாக மாறப் போவதை தமிழர்கள் உணரத்தலைப்படவேண்டும்.

இச் சூழலிலேயே பிரதான தமிழ் கட்சிகளின் வாக்குகளை உடைத்து தமிழ் பிரதிநிதித்துவத்தினை இல்லாதொழிக்கும் செயற்பாட்டில் பல தமிழர்களும் புதிய புதிய பெயர்களை கொண்ட கட்சிகளில் அறிமுகமாகி போட்டியிடுகின்றனர்.

கடந்த காலங்களில் சுதந்திரக் கட்சியிலும், பொதுஜன பெரமுனவிலும் போட்டியிட்ட பல தமிழ் வேட்பாளர்கள் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று வீணடித்த நிலையில் தற்போது தம்மை தமிழர்கள், தமிழ் மக்களை மட்டும் கொண்ட கட்சி என்ற கோசத்துடன் இனவாதத்தினை கிளப்பிய நிலையில் வன்னி தேர்தல் தொகுதியில் களமிறங்கியுள்ளமையானது, தமிழ் மக்களின் வாக்குகளை மீண்டும் வீணடிப்பதற்கேயன்றி பிரதிநிதித்துவத்தினை உருவாக்குவதற்காக இல்லை என்பதே யதார்த்தம்.

இதற்குமப்பால் தமிழ் அரசியல் களத்தில் வாக்கு சிதறல் என்பது தவிர்க்க முடியாத நிலையில் தமக்கான பிரதிநிதித்துவத்தினை ஆளுமையுள்ளதாகவும் அறிவார்ந்ததுமாகவும் தெரிவு செய்யும் சந்தர்ப்பத்தை  தவறவிடும் வாய்ப்புக்கள் உள்ளது.

கடந்த காலங்களில் தமிழ் கட்சிகளின் ஒற்றுமையை வலியுறுத்திய போதிலும் அது சாத்தியப்படாத நிலையில் இன்று பல கட்சிகளாக தேர்தலை முகம் கொடுத்துள்ள தமிழர்கள் தற்போது தமது வாக்கு சிதறல்களால் தமது பிரதிநிதித்துவத்தினையும் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை பெரும் துயரமே.

தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வாக்களிப்பு வீதம் குறைந்து செல்லும் என அவதானிக்கப்பட்டுள்ள நிலையில், வாக்களிப்பில் இருந்து தமிழ் வாக்காளர்கள் விலகுவதானது ஆரோக்கியமற்ற செயற்பாடாக இருக்கும் என்பதனை உணரத்தலைப்பட வேண்டும்.

ஆகவே தமிழ் வேட்பாளர்களை பொறுத்தவரையில் தமது தேர்தல் பிரசாரப் பணியில் முக்கிய பங்காக மக்களை வாக்களிப்பு செய்ய தூண்டுவது முக்கியமானதாக உள்ளது.

அதிகளவான வாக்களிப்பு இடம்பெறுமாயின் பிரதிநிதித்துவ இழப்பை தவிர்ப்பதற்கும் வழிவகுக்கும் என்பதும் மறுப்பதற்கில்லை. எனவே தமிழ் மக்கள் வாக்களிப்பு வீதத்தினை தமது தொகுதிகளில் அதிகரிப்பதனூடாகவே தமக்கான சிறந்த பிரதிநிதித்துவத்தினை பெற வாய்ப்பாக அமையும்.

இவ்வாறான நிலையில் யாழ். மாவட்டத்தில் எவ்வாறு உட்கட்சி மோதல்களுக்கு மத்தியில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளதோ அதே போன்றே வன்னி தேர்தல் தொகுதியிலும் உட்கட்சி வெட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இளம் வேட்பாளராக டெலோவினால் களமிறக்கப்பட்ட வேட்பாளரொருவர் அக் கட்சியினால் ஓரங்கட்டப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. டெலோவிற்கு வன்னி தேர்தல் தொகுதியில் 3 ஆசனங்கள் கூட்டமைப்பிற்குள் ஒதுக்கப்பட்ட நிலையில் கட்சியின் தலைவரான செல்வம் அடைக்கலநாதன், முன்னள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ. மயூரன் ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.13620022 1390636297616646 634053744597128789 n தமிழர்களுக்கு வாக்களிப்பதன் அவசியத்தினை உணர்த்தும் தேர்தல்- க.அகரன்

இதில் மயூரன் இளம் வேட்பாளராக உள்ள போதிலும் அக்கட்சியின் பிரசாரங்களில் அவர் ஒதுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு காணப்படுகின்றது. அக்கட்சியினர் இது விருப்பு வாக்கு தேர்தல் என்ற முறையில் அவ்வாறுதான் இருக்கும் என தெரிவித்து வருகின்றனர்.

எனவே தமது கட்சிக்குள்ளேயே ஒருவரை ஒருவர் வீழ்த்தி போட்டியிடும் இந்த தேர்தல் முறைக்குள் தமிழ் பிரதிநிதித்துவத்தினை எவ்வாறு காப்பது என்ற கேள்வியும் அதிகமாகவே காணப்படுகின்றது.

எனவே வாக்களார்கள் தீர்க்கமானதும் திடமானதுமான முடிவினை எடுக்கும் பட்சத்திலேயே இம்முறை தமிழ் மக்கள் தமது இருப்பை திடமாக வைத்துக் கொள்ள வழிவகை செய்யும் என்பது மறுப்பதற்கில்லை.

வேட்பாளர் ப. சத்தியலிங்கத்தின் கருத்து

கடந்த காலங்களில் பெரமுனவின் பங்காளிகளாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாதவர்கள் தற்போது தாம் தனி தமிழ் கட்சி என்ற போலி முகமூடியை போட்டு மக்களிடம் வாக்கு கேட்கிறார்கள் என வன்னி மாவட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் வைத்திய கலாநிதி ப. சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வவுனியா அரச விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற இளையோர் சந்திப்பு ஒன்றின் போது இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பாக கருத்து தெரிவித்த போது;

வன்னி தேர்தல் தொகுதி என்பது முக்கியமானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த காலத்தில் வெற்றிலை சின்னத்திலும் வெவ்வேறு சின்னத்திலும் போட்டியிட்டவர்கள் தற்போது தாங்கள் தமிழர்கள், நாங்கள் தமிழ் கட்சியிலே போட்டியிடுகின்றோம், எங்களுடைய வேட்பாளர்களும் தமிழர்தான் என்கின்ற பிரச்சாரத்தை முன்னெடுத்து தங்களை தமிழர்களாக காட்டி வாக்களியுங்கள் என்று கேட்கிறார்கள்.

அப்படி கேட்பவர்கள் இந்த பொதுஐன பெரமுன என்று சொல்லப்படுகின்ற மொட்டு கட்சியினுடைய சகோதர, சகோதரி வேட்பாளர்கள் அல்லது அந்த கட்சிகள் பொதுஐன பெரமுனையுடைய பங்காளி கட்சிகள் அல்லது கூட்டாளி கட்சிகள். அவர்கள் தமிழ் பெயர்களில் கேட்பதற்கு காரணம் கடந்த காலங்களிலே எங்களுடைய மக்கள் அரசாங்க கட்சிக்கு கணிசமான வாக்குகளை கொடுக்கவில்லை. ஆகவே அவர்கள் தமிழ் கட்சி என்ற அந்த முகமூடியோடு இப்போது வந்து மக்கள் முன் நிற்கிறார்கள்.

அவர்களுக்கு தெரியும் தங்களுக்கு ஒரு ஆசனம்கூட கிடைக்காது என்று. அவ்வாறு தெரிந்தும் ஏன் நிக்கிறார்கள் என்றால், தமிழ் பிரதிநிதிகளை குறைப்பதாகவும் எங்களுடைய வாக்குகளை சிதறடிக்கப்படவேண்டும் என்பதற்காகவுமேயாகும். இவ்வாறு செல்வம் அடைக்கலநாதன் இதர கட்சிகளிலும் கேட்பவர்கள் 15000 தொடக்கம் 20000 வாக்குகளை சிதறடிப்பார்களேயானால் நாங்கள் தமிழ் பிரதிநிதி ஒருவரை  இழந்து விடுவோம்.Guru Kanda Rajamaha Vihara which was built on the site of a Hindu temple. A military camp is located opposite the new Buddhist தமிழர்களுக்கு வாக்களிப்பதன் அவசியத்தினை உணர்த்தும் தேர்தல்- க.அகரன்

வன்னி தேர்தல் தொகுதி என்பது இப்போது சிங்கள மக்களை கொண்டு வந்து குடியேற்றி இனப்பரம்பலை மாற்றுகின்ற ஒரு பிரதேசமாக அவர்களால் அவதானிக்கப்பட்டு வருகின்றது. எனவே நாம் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கூட்டமைப்பை பலப்படுத்துவதனூடாகவே நாம் எமது இருப்பை பலப்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவித்தார்.

Leave a Reply