அவுஸ்திரேலியாவின் கடல்கடந்த தடுப்பு முகாம்களிலிருந்து அழைத்து செல்லப்பட்ட அகதிகளை சிறைவைப்பதற்கு அவுஸ்திரேலிய அரசு குடிவரவுத் தடுப்பு முகாம்களாக விடுதிகளை பயன்படுத்தியது. இவ்வாறு தடுத்து வைக்கப்பட்ட அகதிகள் கடுமையான மனநல, உடல்நல பாதிப்புகளுக்கு ஆளாகியதாக அவுஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணையம் கண்டறிந்துள்ளது.
அண்மையில் மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், மக்களை (அகதிகளை) சிறைவைப்பதற்காக விடுதிகளை பயன்படுத்துவது கடைசி நடவடிக்கையாக இல்லாமல் அவுஸ்திரேலிய குடிவரவு கட்டமைப்பின் வழக்கமான அங்கமாகிவிட்டது எனக் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2022ல் அவுஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணையம் செய்த கள ஆய்வுகளின் படி, விடுதி தடுப்பில் அதிகபட்சமாக ஒருவர் 634 நாட்கள் (சுமார் 2 ஆண்டுகள்) வைக்கப்பட்டிருந்திருக்கிறார். சராசரியாக தடுப்பு காலம் 69 நாட்களாக உள்ளது.
“விடுதிகள் மக்களை சிறைப்படுத்துவதற்கான இடமாக வடிவமைக்கப்படவில்லை. ஒரு நபரின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கான வசதிகள் விடுதிகளைில் இல்லை,” என மனித உரிமைகள் ஆணையாளர் லொரானி பின்லே கூறியிருக்கிறார்.
தடுத்து வைக்கப்பட்டவர்களிடையே சலிப்பு, தனிமை, விரக்தி மற்றும் அக்கறையின்மை ஆகியவை உள்ளது என தடுப்பு விடுதிகளில் ஆய்வை மேற்கொண்ட மொன்ஷ் பல்கலைக்கழகத்தின் உளவியல் துறை தலைவரான பேராசிரியர் சுரேஷ் சுந்தரம் கண்டறிந்திருக்கிறார்.