மலையகம்:புறக்கணிப்பு கூடாது-  துரைசாமி நடராஜா

மலையகம்: ஒடுக்கப்பட்ட சமூகம்-துரைசாமி நடராஜா | June 15, 2023

இலங்கையர்களின் பொருளாதார நெருக்கடி அண்மைக்காலமாக உக்கிரமடைந்துள்ள நிலையில் மலையக மக்கள் இதனால் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றமை தெரிந்த விடயமாகும்.எனவே இதனை கருத்தில் கொண்டு இம்மக்களின் பொருளாதார மேம்பாடு கருதி நிவாரண உதவிகளை அரசாங்கம் விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன.என்றபோதும் இதன் சாதக விளைவுகள் குறைவாகவே காணப்படுகின்றன.இதனிடையே உலக வங்கியின் நிதியுதவியுடன் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படவுள்ள “அஸ்வெசும” நிவாரணத் திட்டத்தில் பெருந்தோட்ட மக்களை உரியவாறு உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மலையக அரசியல்வாதிகள் வலியுறுத்தி வருகின்றனர்.   

இலங்கை அண்மைக்காலமாக பல்வேறு சவால்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றது.கடன்சுமை நாட்டின் குரல்வளையை நெரித்துவரும்  நிலையில் இதிலிருந்தும் மீள்வதற்கு இலங்கை பகீரதப் பிரயத்தனத்தை மேற்கொண்டு வருகின்றது.சர்வதேச நாணய நிதியம் மற்றும் சில உலக நாடுகள் இலங்கைக்கு பொருளாதார ரீதியான உதவிகளை வழங்கி கைதூக்கி விடுவதற்கு முயன்று வருகின்றன.என்றபோதும் இலங்கையின் நிலைமைகள் அவ்வளவு விரைவாக சீரடைவதாக இல்லை.நாட்டின் பொருளாதார நெருக்கடி பல்வேறு தாக்க விளைவுகளையும் மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.உணவுக்கான  போராட்டத்துக்கு மத்தியில் பிள்ளைகளின் செலவுகளை சமாளிக்க முடியாமல்  பெற்றோர் பலர் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

பாடசாலைகளில் மாணவர்களின் இடைவிலகல்  கடந்த காலங்களைக் காட்டிலும் அதிகரித்து காணப்படுவதாக கல்வித் தரப்பினர் கருத்து தெரிவிக்கின்றனர்.நாட்டில் உள நோயாளர்களின் தொகை 30 வீதத்தால் அதிகரித்துள்ளது.மேலும் மருந்துக் கொள்வனவுகளும் அதிகரித்துள்ளன.இளைஞர் யுவதிகளிடையே விரக்தியான ஒரு போக்கு காணப்படுகின்றது.இந்நாட்டில் இருப்பதில் பயனில்லை என்று சில இளைஞர்கள் வெளிநாட்டிற்கு செல்வதற்கும் தலைப்பட்டுள்ளனர்.வேலை வாய்ப்புக்களும் மந்தமடைந்துள்ளன.பொருளாதார சிக்கலால் குடும்ப உறவுகளிலும் விரிசல் நிலை ஏற்பட்டு வருகின்றது.கோபமடையும் சந்தர்ப்பங்கள் மக்களிடையே அதிகமாக காணப்படும் நிலையில் கோபத்தை வெளிப்படுத்த இவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நேரொத்த நடவடிக்கைகள்

ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடுமிடத்து மலையக சமூகத்தினர் பெரும்பாலான துறைகளில்  மிகவும் பின்னடைவான நிலைமைகளைக் கொண்டுள்ளனர் என்பது யாவரும் அறிந்த விடயமாகும்.அத்தோடு அவர்கள்  பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கும்  உள்ளாகி வருகின்றனர்.இலங்கையில் அடிமைத்துவத்தின் சமகால வடிவங்கள் பல்பரிமாணம் உடையவையாகக் காணப்படுகின்றன.குறிப்பாக சுமார் 200 வருடங்களுக்கு முன்னர் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் கீழ் பெருந்தோட்டங்களில் பணிபுரிவதற்காக இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட மலையகத் தமிழர்கள் நாளாந்தம் பல்வேறு வடிவங்களிலான ஒடுக்குமுறைகளுக்கும் முகங்கொடுத்து வருகின்றனர் என்று ஏற்கனவே ஐக்கியநாடுகள் சபையின் அறிக்கையாளர் சுட்டிக்காட்டி இருந்தமையும் இங்கு நோக்கத்தக்கதாகும்.

மலையக மக்களின் பின்தங்கிய வெளிப்பாடுகள் அதிகமுள்ள நிலையில் இதனைச் சீர்செய்வதற்கு விசேட ஏற்பாடுகள் அல்லது நேரொத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது புத்திஜீவிகளின் கருத்தாகவுள்ளது.இந்தியா சுதந்திமடைந்ததன் பின்னர் டாக்டர் அம்பேத்கர் தலைமையில் புதிய அரசியல் யாப்பு தயாரிக்கப்பட்டது.இந்த யாப்பினூடாக பின்தங்கிய மக்களை சமத்துவ நிலைக்கு கொண்டு வரக்கூடிய விதிகள் உள்ளீர்க்கப்பட்டன.சாதி அடிப்படையில் பின்தள்ளப்பட்ட மக்களுக்கும் மலைவாழ் (பழங்குடிகள்) மக்களுக்கும் இத்தகைய யாப்பு விதிகள் தோள்கொடுத்தன.அத்தோடு  “இந்தியா ஒரு இறைமையுள்ள, சமதர்ம, மதச்சார்பற்ற, சனநாயகக் குடியரசாகும்.இது நாட்டின் சகல பிரசைகளின் நீதியையும் சுதந்திரத்தையும் சமத்துவம் மற்றும் தோழமையையும் பாதுகாக்கும் ” என்று யாப்பு ஐக்கியத்துக்கும் வலுசேர்த்தது.

ஐக்கிய அமெரிக்கா சுதந்திர பிரகடனம் செய்து யாப்பையும் உரிமைகள் பட்டத்தையும் பிரகடனப்படுத்தியபோது வரலாற்று ரீதியாக அடிமைத்தனத்துக்கு ஆளாகியிருந்த கறுப்பின மக்களுக்கு இத்தகைய விசேட விதிகள் அறிமுகமாகின.இத்தகைய ஏற்பாடுகளே நேரொத்த நடவடிக்கைகள் எனப்படுகின்றன.இன்று உலகளாவிய ரீதியில் பல நாடுகள் இத்தகைய ஏற்பாடுகளை தங்கள் நாட்டு யாப்புகளில் சேர்த்துக் கொண்டுள்ளன.பிரித்தானியா, பிரேசில்,கனடா, ஜேர்மனி, ஜப்பான், தென்னாபிரிக்கா போன்ற நாடுகளும் இதனை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளன என்று முன்னால் இந்து கலாசார அமைச்சர் பி.பி.தேவராஜ் தனது கட்டுரையொன்றில் வலியுறுத்தியுள்ளார்.பின்தங்கிய மக்களின் அபிவிருத்தி கருதி வழங்கப்படும் நேரொத்த நடவடிக்கைகள் அம்மக்கள் சகல துறைகளிலும் குறித்த இலக்கினை அடையும் வரை வழங்கப்படுதல் வேண்டும் என்றும் சிலர் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறெனினும் இலங்கையைப் பொறுத்தவரையில் மலையக மக்கள் பின்தங்கிய வெளிப்பாடுகளைக் கொண்டிருந்தபோதும் யாப்பு ரீதியாக அவர்களுக்கான நேரொத்த நடவடிக்கைகள் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது தெரிந்ததேயாகும்.இதேவேளை அரசாங்கம் தேசிய ரீதியில் முன்னெடுக்கும் வறுமை ஒழிப்பு , சுகாதார, கல்வி மற்றும் தொழில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் உள்ளிட்ட அனைத்திலும் மலையக மக்கள் பின்தள்ளப்பட்டு வருவதையே அவதானிக்க முடிகின்றது.இம்மக்களுக்கான வீடமைப்பு நிலைமைகளிலும் இந்த நிலையே தொடர்ந்து கொண்டிருக்கின்றது.வெறுமனே இம்மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக தேர்தல் விஞ்ஞாபனங்களிலும், வரவு செலவு திட்ட முன்மொழிவுகளிலும் கவர்ச்சியான வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றதே தவிர ஆனபயன் எதுவுமில்லை.

இலங்கையில் வறுமை நிலையை நோக்குகையில் பெருந்தோட்ட வறுமை நிலையே அதிகமாக காணப்படுகின்றது.1990/91 இல் 20.5, 1995/96 இல் 38.4, 2002 இல் 30.0, 2006/07 இல் 32.0, 2009/10 இல் 9.2 என்றவாறு வறுமை வீதம் அமைந்திருந்தது.இப்புள்ளிவிபரங்களின் நம்பகத்தன்மை தொடர்பில் சந்தேகம் வெளியிட்டிருந்த சிலர் இவ்வீதங்கள் இன்னும் அதிகமிருக்கலாம் என்றும் தெரிவித்திருந்தனர்.சிசு மரண வீதம், போஷணைக்குறைபாடு, வயதுக்கேற்ற நிறையின்மை போன்ற பல நிலைமைகள் மலையகத்தில் அதிகமுள்ளன.இந்நிலையில் வறுமை நிவாரணங்களை பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை மலையக மக்களுக்குள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

அநீதியான செயல்

 இந்நிலையில் இலங்கையில் அமுல்படுத்தப்படும் ஜனசவிய, சமுர்த்தி உள்ளிட்ட வறுமை ஒழிப்பு திட்டங்களில் மலையக மக்கள் உரியவாறு உள்ளீர்க்கப்படவில்லை என்பது கசப்பான உண்மையாகும். கொரோனா காலத்தில் நாட்டின் சகல துறைகளும் ஸ்தம்பித்த நிலையில் பெருந்தோட்ட தேயிலைத் தொழிற்றுறை மட்டுமே இயங்கி நாட்டின் அபிவிருத்திக்கு பங்காற்றியது.இக்காலத்தில் கூட அரச அல்லது தனியார் உதவிகள் மலையக மக்களுக்கு உரியவாறு கிடைக்கவில்லை.பெரும் சிரமங்களுக்கு மத்தியிலேயே அவர்கள் தமது ஜீவனோபாயத்தை கொண்டு நடாத்தினார்.ஆனாலும் கிராமப்புற மக்களுக்கு பல தரப்பினரிடமிருந்தும் உதவிகள் குவிந்தவண்ணமிருந்தன.இந்நிலையில் அரசாங்கத்தின் வறுமை ஒழிப்பு வேலைத்திட்டங்களில் இனியும் மலையக மக்கள் புறக்கணிக்கப்படலாகாது என்ற கருத்தினை மலையக அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.

இதனடிப்படையில் உலக வங்கியின் நிதியுதவியுடன் அரசாங்கத்தால் ” அஸ்வெசும ” நிவாரணத்திட்டம் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளது.இத்திட்டத்தில் வறுமையில் அல்லல்படும் மலையக மக்கள் உள்ளீர்க்கப்பட வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் இடம்பெற்று வருகின்றன.மேலும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் தொடர்பான தகவல்கள் முறையாக சேகரிக்கப்படவில்லை என்றும், தகவல்களை சேகரிக்க சென்றவர்களில் அநேகமானவர்கள் எந்தவிதமான அனுபவமும் இல்லாதவர்கள்.

அவர்களுக்கு பயனாளிகளை தெரிவுசெய்யும் நடைமுறை தெரியவில்லை என்றும் விமர்சனங்கள் இருந்து வருகின்றன.இது உண்மையாயின் இதன்மூலம் பாதிக்கப்படுபவர்கள் பெருந்தோட்ட மக்களேயாவர்.இது ஒரு அநீதியான செயலாகும் என்பதை கருத்தில் கொண்டு உரிய பயனாளிகளை தெரிவு செய்வதில் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.பயனாளிகள் தெரிவின்போது தொழிற்சங்க ஆதிக்கம் செல்வாக்கு செலுத்துமானால் அது உரிய பயனாளிகளைத் தெரிவு செய்வதில் இடையூறுகளை ஏற்படுத்தும் என்பதையும் மறுப்பதற்கில்லை.எனவே பயனாளிகள் தெரிவானது சுதந்திரமாக இடம்பெறுதல் மிகவும் அவசியமாகும்.

இதனிடையே பயனாளிகள் தெரிவில் குளறுபடிகள் காணப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமான்,முன்னர் இந்தக் குறைபாடுகள் இருந்திருக்கலாம்.பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வேலை உள்ளது.ஊழியர் சேமலாப மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி கிடைக்கின்றன எனக்கூறி கிராம அதிகாரிகளால் அவர்கள் ஒதுக்கப்பட்டிருக்கலாம்.அப்போதும் நாம் தற்காலிக தீர்வுகளை பெற்றுக் கொடுத்தோம்.இம்முறை அதிகாரிகள் நேரில் சென்று தகவல்களை திரட்டினர்.

எவருக்கும் பாகுபாடு காட்டப்பட மாட்டாது.உதவிக் கொடுப்பனவை பெறுவதற்கு தகுதியான அனைவருக்கும் அது நிச்சயம் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளதோடு இது குறித்து நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தொழிலாளர்கள் பொருளாதார நெருக்கடியால் விழிபிதுங்கி போயுள்ள நிலையில் அரசின் நிவாரணங்களாவது உரியவாறு அவர்களை சென்றடைய அரசியல் தொழிற்சங்க பேதங்களை மறந்து அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.இதைவிடுத்து தொடர்ச்சியாக மலையக மக்கள் நிவாரண உதவிகளை  வழங்காது புறக்கணிக்கப்படுகையில் அது பாதக  விளைவுகள் பலவற்றுக்கும் வித்திடும்.  என்பதை.  மறுக்க முடியாது.