வீசா இன்றி நாட்டிற்குள் வர முயற்சிக்கும் இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலியா எச்சரிக்கை

288 Views

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் செல்லுபடியாகும் வீசா இன்றி அவுஸ்திரேலியா வர முயற்சிப்பவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் அவுஸ்திரேலியா எச்சரித்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் எல்லை காவல் தளபதி ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ், அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தபோதே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

சட்டவிரோதமாக மீன்பிடித்தல், கடற்கொள்ளையர், பயங்கரவாதம் மற்றும் மக்கள் கடத்தல் போன்ற நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கு இலங்கையுடன் இணைந்து பணியாற்றுவதற்கான உறுதிப்பாட்டின் நிமித்தமே இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டதாக ஜஸ்டின் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையும் அவுஸ்திரேலியாவும் சட்டவிரோதமாக எல்லைகளை கடக்க முயற்சிக்கும் எந்தவொரு படகையும் தடுப்பதற்கும், இடையூறு செய்வதற்கும், இடைமறித்து திருப்பி அனுப்புவதற்கும், கூட்டுப்பொறுப்பை கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2022 மே மாதம் முதல், அவுஸ்திரேலியாவிற்கு ஒழுங்கற்ற கடல்சார் குடியேற்ற முயற்சியில் ஈடுபட்டிருந்த சுமார் 9ஆயிரம் இலங்கையர்கள், அவுஸ்திரேலிய அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply