அவுஸ்திரேலியா: நிரந்தர விசாக்கள் கோரி போராட்டம் நடத்திய அகதிகள், காலாவதியான விசாக்களுடன் ஆயிரக்கணக்கான தமிழர்கள்

அவுஸ்திரேலியாவில் தற்காலிக விசாக்களில் உள்ள அகதிகளுக்கு நிரந்தர பாதுகாப்பு விசாக்களை வழங்குகிறோம் என்ற உறுதியை தொழிற்கட்சி அரசாங்கம் நிறைவேற்றக்கோரி கேன்பரா நகரில் அகதிகள் போராட்டம் நடத்தியிருக்கின்றனர். 

“மாற்றத்தை வேண்டி நாங்கள் இங்கு கூடியிருக்கிறோம். நாங்கள் இந்த சமூகத்தின் அங்கத்தவர்கள் என்பதை அங்கீகரிக்க வேண்டும்,” என இப்போராட்டத்தில் பங்கெடுத்த அகதி மொஸ்தபா ஃபராஜி வலியுறுத்தியிருக்கிறார்.

தற்போதைய நிலையில், அவுஸ்திரேலியாவில் தற்காலிக விசாக்களின் கீழ் 31 ஆயிரம் அகதிகள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் நிரந்தர விசாக்களை பெறுவதன் மூலம் வேலை செய்வதற்கான மற்றும் கல்வி கற்பதற்கான முழுமையான அனுமதி கிடைக்கிறது.

கடந்த மே மாதம் அவுஸ்திரேலிய பாராளுமன்ற தேர்தல் நடந்த போது, தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்தால் தற்காலிக விசாக்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு அகதிகளுக்கு நிரந்தர விசாக்கள் வழங்கப்படும் என்ற உறுதியளிக்கப்பட்டிருந்தது.

அவுஸ்திரேலியாவை பொறுத்தமட்டில் அகதிகளுக்கு என்று மூன்று விதமாக தற்காலிக விசாக்கள் உள்ளன:

தற்காலிக பாதுகாப்பு விசாக்கள், Safe Haven Enterprise விசாக்கள் மற்றும் இணைப்பு விசாக்கள். இதில் தற்காலிக பாதுகாப்பு விசாக்களையும் Safe Haven Enterprise  விசாக்களையும் ஒழிப்பதாக தொழிற்கட்சி உறுதியளித்திருக்கிறது.

அலெக்ஸ் எனும் ஆப்கானிய அகதி இப்போராட்டத்தில் பங்கேற்பதற்காக 14 மணிநேரம் பயணமாகி கேன்பரா நகருக்கு வந்திருக்கிறார்.

தற்காலிக விசா கொள்கை தனது வாழ்க்கை அழித்து விட்டதாக கூறும் அலெக்ஸ், “எனது குடும்பத்தை நல்ல நிலையில் வைத்திருப்பதற்காக நான் கடுமையாக உழைக்கிறேன். ஆனால் 10 ஆண்டுகளாக அவர்களை நான் பிரிந்திருப்பதால் படிப்படியாக கொஞ்சம் கொஞ்சமாக என்னைக் குறித்து நினைப்பதை எனது குடும்பத்தினர் மறந்துவிட்டனர்,” எனத் தெரிவித்திருக்கிறார்.

தற்காலிக பாதுகாப்பு விசாக்களையும்  Safe Haven Enterprise  விசாக்களையும் முடிவுக்கு கொண்டு வருவது என்பது வரவேற்க வேண்டிய முதல்கட்ட நடவடிக்கை என மனித உரிமை செயல்பாட்டாளர்கள் கூறுகின்றனர். ஆனால் அவுஸ்திரேலியாவின் குடிவரவு முறையை மனிதத்தன்மை மிக்கதாக உருவாக்குவதற்கு இன்னும் அதிகமான நடவடிக்கைகள் தேவை எனக் கூறியுள்ளனர்.

“ஆயிரக்கணக்கான தமிழர்கள், ஈரானியர்கள், ஆப்கானியர்கள் காலாவதியான விசாக்களுடன் அவுஸ்திரேலிய சமூகத்தில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு எந்த உதவியும் கிடைப்பதில்லை, சம்பளம் இல்லை, அவர்கள் சட்டத்துக்கு புறம்பானவர்களாக உள்ளனர். அகதிகளுக்கான அமைப்புகளின் மற்றும் அவர்கள் சார்ந்த சமூகங்களின் உதவியைச் சார்ந்தே அவர்கள் வாழ வேண்டிய நிலை உள்ளது,” எனத் தெரிவித்திருக்கிறார் அகதிகள் நல செயல்பாட்டாளரான ஐன் ரிண்டோல்.