அவுஸ்திரேலியா- நியூசிலாந்து இடையே அகதிகள் ஒப்பந்தம் ‘கையெழுத்து

172 Views

அகதிகள் ஒப்பந்தம்

பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த அவுஸ்திரேலியா- நியூசிலாந்து இடையேயான அகதிகள் ஒப்பந்தம் ‘கையெழுத்திடப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்று கடல்கடந்த முகாம்களில் தடுத்து வைக்கப்பட்ட அகதிகளை நியூசிலாந்தில் மீள்குடியமர்த்துவதற்கான ஒப்பந்தம் பல ஆண்டுகளுக்குப் பிறகு இறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஆண்டுக்கு 150 அகதிகள் என 3 ஆண்டுகளுக்கு சுமார் 450 அகதிகள் நியூசிலாந்தில் மீள்குடியமர்த்தப்படுவார்கள். முன்னதாக, கடந்த பல ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்புகளில் உள்ள அகதிகளில் 150 பேரை ஆண்டுதோறும் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக நியூசிலாந்து தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது. ஆனால், நியூசிலாந்தின் சலுகையை தொடர்ந்து அவுஸ்திரேலியா கிடப்பிலேயே வைத்திருந்த நிலையில் இப்பொழுது அது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்த ஒப்பந்தம் மூலம் ஆஸ்திரேலிய கடல் கடந்த தடுப்பு மையங்களிலும் குடிவரவுத் தடுப்புகளிலும் அல்லது படகு வழியாக வந்து தற்காலிக விசாவில் காத்திருக்கும் அகதிகளும் நியூசிலாந்தில் மீள்குடியமருவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள் எனக் கூறப்படுகிறது.

முதன் முதலில், கடந்த 2013ம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஜூலியா கில்லர்ட் ஆட்சியின் போது அவுஸ்திரேலியா- நியூசிலாந்து இடையே இப்படியான அகதிகள் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தது. ஆனால், அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த தாராளவாத- தேசிய கூட்டணி ஆட்சி இந்த ஒப்பந்தத்தை பின்பற்ற தயக்கம் காட்டி அதை கிடப்பில் போட்டது. படகு வழியாக தஞ்சமடைந்த அகதிகளை அவ்வாறு நியூசிலாந்தில் மீள்குடியமர்த்தினால் அவர்கள் மீண்டும் அவுஸ்திரேலியாவுக்கு வந்து நிரந்தரமாக குடியமருவார்கள் என்ற கருத்தை அக்கூட்டணி முன்வைத்தது. இந்த சூழலில், அதே கூட்டணி அவுஸ்திரேலியா- நியூசிலாந்து இடையில் அகதிகள் மீள்குடியமர்த்தல் ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது.

கடந்த 2001 முதல் 2007 வரை நடத்தப்பட்ட அவுஸ்திரேலிய கடல் கடந்த தடுப்பில் இருந்த நூற்றுக்கணக்கான அகதிகளை நியூசிலாந்து ஏற்கனவே மீள்குடியேற்றி யுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a Reply