நான்கு ஆண்டு போராட்டத்துக்குப் பின் தமிழ் அகதி குடும்பத்துக்கு நிரந்தர விசாக்களை வழங்கிய அவுஸ்திரேலியா

192 Views

அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்படும் ஆபத்தில் சிக்கி நான்கு ஆண்டுகள் குடிவரவுத் தடுப்பு காவலில் இருந்த பிரியா- நடேசலிங்கம் எனும் இலங்கைத் தமிழ் அகதி குடும்பத்துக்கு ஆஸ்திரேலியாவின் தொழிற்கட்சி அரசாங்கம் நிரந்தர விசாக்களை வழங்கியுள்ளது. 

கடந்த மே மாதம் அவுஸ்திரேலியாவில் தொழிற்கட்சி தலைமையிலான புதிய அரசாங்கம் ஆட்சி அமைத்த பின்னர், இக்குடும்பத்துக்கு இணைப்பு விசாக்கள் வழங்கப்பட்டு பிலோலா எனும் பகுதியில் வாழ அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், தமிழ் அகதி குடும்பத்தினரை பார்வையிட்ட அவுஸ்திரேலிய உள்துறை அதிகாரிகள் அவர்களுக்கு நிரந்தர விசாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர் என அவுஸ்திரேலியாவின் ஏபிசி ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

“இவ்விவகாரத்தில் உள்துறை அமைச்சர் தலையிட்டு தனது அதிகாரங்களை பயன்படுத்தி இக்குடும்பத்தில் உள்ள நான்கு பேருக்கும் நிரந்தர விசாக்களை கொடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்,” என இக்குடும்பத்தின் விடுதலைக்காக செயல்பட்ட  ஏஞ்சலா ஃபிரடெரிக்ஸ் தெரிவித்திருக்கிறார்.

கடந்த 2012 யில் படகு வழியாக இலங்கையிலிருந்து வெளியேறி அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருந்த நடேசலிங்கமும், 2013 யில் தஞ்சமடைந்திருந்த பிரியாவும் அவுஸ்திரேலியாவில் சந்தித்த பின் திருமணம் செய்து கொண்டனர். தஞ்சக்கோரிக்கையாளர்களான அவர்களுக்கு அவுஸ்திரேலியாவிலேயே இரு பெண் குழந்தைகள் (கோபிகா, தருணிகா) பிறந்தன.

அவுஸ்திரேலியாவின் பிலோலா நகரில் வசித்து வந்த அவர்களின் விசா, கடந்த மார்ச் 2018ல் காலாவதியாகியதாக கைது செய்யப்பட்டு மெல்பேர்ன் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டனர். அவர்களை இலங்கைக்கு நாடுகடத்தும் முயற்சி நீதிமன்ற தலையீட்டால் தடுக்கப்பட்ட போதிலும் நான்கு ஆண்டுகள் குடிவரவுத் தடுப்பில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

“தேர்தலுக்கு முன்னதாக இந்த(தொழிற்கட்சி) அரசாங்கம் ஓர் உறுதியை அளித்திருந்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இக்குடும்பம் பிலோலா பகுதிக்கு திரும்ப அனுமதிப்போம் என்றும் அக்குடும்பத்தின் குடிவரவு நிலையை தீர்ப்போம் என்றும் கூறினோம். அந்த உறுதியை இன்று நிறைவேற்றியுள்ளோம்,” எனக் கூறியுள்ளார் அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் ஆண்ட்ரூ கில்ஸ்.

“தமிழ் அகதி குடும்பத்துக்கு நிரந்தர விசாக்கள் வழங்கப்பட்டமை அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக வந்தால் ஒருபோதும் நிரந்தரமாக குடியமர்த்தப்பட மாட்டார்கள் எனும் கொள்கையை குறைத்து மதிப்பிடும்,” என விமர்சித்திருக்கிறார் தாராளவாத கட்சியைச் சேர்ந்த முன்னாள் உள்துறை அமைச்சர்  கரேன் ஆண்ட்ரூஸ்.

அதே சமயம், அவுஸ்திரேலியாவை வந்தடைய முயலும் அங்கீகரிப்படாத படகுகள் தொடர்ந்து இடைமறிக்கப்பட்டு திருப்பி அனுப்பும் நடவடிக்கை தொடரும் எனக் கூறியிருக்கிறார் அவுஸ்திரேலியாவின் தற்போதைய உள்துறை அமைச்சரான ஆண்ட்ரூ கில்ஸ்.

Leave a Reply