மூன்று பகுதிகளால் வாகரைப் பிரதேச செயலக நிலங்களைப் பிரித்தெடுக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன – கோவிந்தன் கருணாகரம்

பிரதேச செயலக நிலங்களைப் பிரித்தெடுக்கும் முயற்சி

வாகரைப் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட நிலங்களை மூன்று பகுதிகளால் பிரித்தெடுக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்துள்ளார்.

மேலும் “இந்த நடடிவக்கைக்கு எதிராக தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்ற மாவட்டத்தின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒருமித்துச் செயற்பட வேண்டும். அரசுடன் இணைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பில் எடுக்கும் நடவடிக்கைக்கு பூரண ஆதரவு வழங்கத் தயார்” என்றும் கூறியுள்ளார்.

வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தோணிதாண்டமடு பிரதேசத்தின் ஒரு பகுதி பொலநறுவை மாவட்டம் வெலிகந்தை பிரதேச செயலாளர் பிரிவினுள் இணைக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் வாகரைப் பிரதேச செயலாளருடன் இது தொடர்பில் சந்திப்பினை மேற்கொண்டிருந்தார். இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்து்ளார்.

அத்தோடு“வாகரைப் பிரதேசத்தில் இருந்து மூன்று பகுதியால் பிரதேசங்கள் பிரித்து எடுக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலாவதாக தோணிதாண்டமடு தமிழ் மக்கள் வாழும் பிரதேசத்தின் ஒரு பகுதி தமிழ் மக்களுடன் சேர்த்து வெலிகந்தை பிரதேசத்துடன் சேர்க்கப்பட இருப்பதாகவும், அதே போன்று ஓட்டமாவடி மத்தி பிரதேச செயலகப் பிரிவுடன் புணானை கிழக்கு, கிருமிச்சை, காயான்கேணி, வட்டவான் உள்ளிட்ட சில பிரதேசங்கள் இணைக்கப்படுவதற்கான முயற்சிகளும், மறுபக்கம் வடக்கிலே வெருகல் இரட்டை ஆற்றை ஒட்டிய பிரதேசம் வெருகல் பிரதேச செயலகத்துடன் இணைக்கப்படுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுவதாகவும் அறிகின்றேன்.

மூன்று பக்கத்தினால் வாகரைப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசங்களைப் பிரித்தெடுப்பதற்கான அழுத்தங்களைக் கொடுத்து ஒரு பகுதியையாவது முழுமையாகக் கைப்பற்றக் கூடிய முயற்சியாகவே நான் இதனைக் கருதுகின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Tamil News