ஊடகவியலாளர் சமுதிதவின் வீட்டின் மீதான தாக்குதல்-சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

189 Views
சமுதிதவின் வீட்டின் மீதான தாக்குதல்


ஊடகவியலாளர் சமுதிதவின் வீட்டின் மீதான தாக்குதல், வெட்கமற்ற மற்றும் பாரதூரமான சம்பவம் எனக் கருதும் சுதந்திர ஊடக இயக்கம், இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறது.

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவிற்கு இதற்கு முன்னரும் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள சுதந்திர ஊடக இயக்கம், அவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அதிகாரிகளின் பொறுப்பு எனவும் வலியுறுத்தியுள்ளது.
பல தடவைகள் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டதாகத் ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரம தெரிவித்துள்ளார். தாக்குதல் மேற்கொள்ளவந்த இனந்தெரியாத நபர்கள் சமுதிதவின் வீடு அமைந்துள்ள வீட்டு வளாகத்தின் பாதுகாப்பு அதிகாரியின் தலையில் துப்பாக்கியை வைத்து அவரை மிரட்டியுள்ளனர்.
மக்கள் செறிந்து வாழும் இப்பகுதியில் வெள்ளை வானில் வந்த நான்கு ஆயுததாரிகள் இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இது போன்ற பிரதேசங்களில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்படுவது சாதாரண விடயம் என்பதனால் இலங்கை காவல்துறை இது தொடர்பில் கரிசனை செலுத்துமாயின் விரைவாக விசாரணை நடத்தி குறித்த இனம்தெரியாத குண்டர்களைக் கைது செய்து சட்டத்தை அமுல்படுத்த முடியும் எனச் சுதந்திர ஊடக இயக்கம் நம்புகிறது.

இதேவேளை, கடந்த சில நாட்களுக்கு முன்னர், கறுப்பு ஜனவரி நினைவேந்தலின் போது, பல தசாப்தங்களாகப் படுகொலை செய்யப்பட்ட அல்லது பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குமாறு தமது அமைப்பு உட்பட ஊடக சமூகம் கோரிக்கை விடுத்ததாகச் சுதந்திர ஊடக இயக்கம் இங்கு சுட்டிக்காட்டியுள்ளது.

சட்ட பலவீனங்கள் மற்றும் அரசியல் செல்வாக்கு காரணமாக அனேகமாக அனைத்து சம்பவங்களுக்கும் பொறுப்பானவர்கள் தண்டனையிலிருந்து விலக்கு பெற்றுள்ள நிலையில், சமுதித தொடர்பான சம்பவமும்  அந்தப் பட்டியலில் மற்றுமொரு புதிய இலக்கமாகவே காணப்படும் என சுதந்திர ஊடக இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
கறுப்பு ஜனவரியை நினைவுகூர்ந்து, கடந்த தசாப்தங்களில் படுகொலை செய்யப்பட்ட மற்றும் தாக்குதல் உட்பட பல்வேறு வகையான இடையூறுகளுக்கு ஆளான ஊடகவியலாளர்களுக்கு நீதியை நிலைநாட்டக் கோரிய ஒரு வாரத்திற்குள் ஆயுதமேந்திய குண்டர்களின் இத்தகைய அச்சுறுத்தல் செயற்பாடானது “ஊடகங்களுக்கு எதிரான கண்ணுக்குப் புலப்படாத சக்தி கொண்ட இருண்ட நிழல்கள்” தொடர்ந்து சுதந்திரமாக உலாவுகிறது என்பதற்கான தெளிவான  காரணியாகும் என்பதுடன் சட்ட அமுலாக்க கட்டமைப்புகளில் காணப்படும் பலவீனத்தால் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்படும் சம்பவங்களின் பட்டியலில் இந்தச் சம்பவத்தையும் சேர்ப்பதற்குப் பதிலாக, ‘அரசியல் பலம்கொண்ட தண்டனையின்மை’ க்கு முற்றுப்புள்ளி வைத்து, இச்சம்பவம்குறித்து விரிவான விசாரணை நடத்தி அந்த இனம்தெரியா குண்டர்கள் யார் என்பதனை நாட்டிற்கு வெளிப்படுத்துமாறு பொறுப்புள்ள அனைவரையும் சுதந்திர ஊடக இயக்கம் கேட்டுக்கொள்கிறது.

Tamil News

Leave a Reply