லெபனானில் குறைந்தது 70 பேர் பலி; 4000 பேர் காயம், அமோனியம் நைட்ரேட் காரணமா?

368 Views

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 70 பேர் உயிரிழந்துள்ளனர். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பெய்ரூட்டில் துறைமுக பகுதியில் நடந்த வெடிப்பு சம்பவத்தின் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஒரு கிடங்கில் 6 வருடங்களாக வைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகள் இந்த வெடிப்புக்கு காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.

இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள அந்நாட்டு அதிபர் மைக்கேல் ஆன், 2750 டன் அமோனியம் நைட்ரேட்டை பாதுகாப்பற்ற முறையில் வைத்திருந்தது “ஏற்கத்தக்கதல்ல” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வெடிப்பு சம்பவத்தால் பல்வேறு கட்டடங்கள் சேதம் ஆகியுள்ள நிலையில் காயமடைந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து மூன்று நாட்கள் துக்கம் அனுசரித்துள்ள அந்நாட்டு அதிபர் மைக்கேல் அவசரகால நிதியிலிருந்து 100 பில்லியன் லிரா உடனடியாக விடுவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.lebanan லெபனானில் குறைந்தது 70 பேர் பலி; 4000 பேர் காயம், அமோனியம் நைட்ரேட் காரணமா?

வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் உயிரிழந்தோரின் சடலங்கள் கிடப்பதாகவும் அப்பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் சம்பவ இடத்தில் இருந்த பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

இந்த சம்பவத்தை பேரழிவு என்று குறிப்பிட்டுள்ள அந்நாட்டு அதிபர், இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த வெடிப்பால் இடிந்து விழுந்த கட்டடங்களுக்கு அடியில் பலர் சிக்கியிருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்து 240 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிழக்கு மத்திய தரைக்கடலில் இருக்கும் சைப்ரஸ் தீவில் வெடிப்பு சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது.

2005ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ரஃபீக் ஹரீரி கொல்லப்பட்ட வழக்கில் தீர்ப்புகள் வர இருக்கும் நிலையில் இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

அமோனியம் நைட்ரேட்

அமோனியம் நைட்ரேட்டுக்கு பல்வேறு பயன்பாடுகள் இருக்கின்றன. ஆனால் பெரும்பாலும் இது இரண்டு விஷயங்களுக்கு பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. ஒன்று விவசாய உரம், மற்றொன்று வெடிபொருள்.

நெருப்புடன் தொடர்பு கொள்ளும்போது அமோனியம் நைட்ரேட் வெடிபொருளாக மாறுகிறது. அப்படி வெடிக்கும் போது நைட்ரஜன் ஆக்சைடு மற்றும் அமோனியா வாயு உள்ளிட்ட நச்சு வாயுக்களை இது வெளியிடும்.

எரிபொருளாக மாறும் தன்மை கொண்டதால் அமோனியம் நைட்ரேட்டை எவ்வாறு வைக்க வேண்டும் அல்லது சேமிக்க வேண்டும் என்பது குறித்து கடுமையான விதிகள் உள்ளன. அதில் முக்கியமானது அதனை சேமித்து வைக்கும் கிடங்கு தீப்பற்றிக் கொள்ளாத வகையில் இருக்க வேண்டும்.

Leave a Reply