சாட் நாட்டில் இராணுவம் சரமாரி சூடு: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பலி

சாட் நாட்டின் இரு மிகப்பெரிய நகரங்களில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் சூடு நடத்தியதில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

தலைநகர் ஜமேனாவில் 30 பேர் கொல்லப்பட்டதாக சாட் அரச பேச்சாளர் அசீஸ் மஹமட் சலேஹ் தெரிவித்துள்ளார். எனினும் கடந்த வியாழக்கிழமை இந்தப் பேரணியை ஏற்பாடு செய்தவர்கள் 40 பேர் உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

சாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரான மவுன்டோவில் மேலும் 32 பேர் கொல்லப்பட்டுள்ளனர். எனினும் உயிரிழப்பு 60க்கு மேல் இருப்பதாக பெயர் குறிப்பிடாத அந்த நகரின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தையும் மீறி முன்னேறியதை அடுத்தே பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

அதிகாரத்தை கையளிப்பதாக இராணுவம் உறுதி அளித்த திகதியை ஒட்டியே ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியில் இறங்கி இருந்தனர். எனினும் அந்தத் திகதி மேலும் இரு ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இராணுவ முன்னரங்கு பகுதிக்கு விஜயம் செய்த நாட்டின் நீண்டகால ஜனாதிபதி இத்ரிஸ் டெபி கடந்த 2021 ஏப்ரலில் போர்முனையில் கொல்லப்பட்டதை தொடர்ந்தே நாட்டில் அரசியல் பிரச்சினை உச்சம் பெற்றுள்ளது.

கொல்லப்பட்ட ஜனாதிபதியின் 38 வயது மகனை இராணுவம் இடைக்கால ஜனாதிபதியாக நியமித்தமை குறிப்பிடத்தக்கது.