ரஷ்யப் படையில் இலங்கை இராணுவத்தினா் போரிடுகின்றாா்களா? கேள்வி எழுப்பிய துாதுவா்

உக்ரேனுக்கு எதிரான ரஷ்ய இராணுவ நடவடிக்கைகளில் இலங்கையைச் சேர்ந்த சில முன்னாள் இராணுவ வீரர்கள் இணைந்துள்ளனர் என்ற செய்திகளுக்கு மத்தியில், மொஸ்கோவிலுள்ள இலங்கைத் தூதுவர் பேராசிரியர் ஜனிதா லியனகே, ரஷ்ய இராணுவத்திடம் அவர்கள் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தார்.

இது தொடர்பான ஊடக அறிக்கைகள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “அங்கு யாராவது அவ்வாறு இருப்பார்களாயின் ரஷ்ய இராணுவத்திடம் அத்தகைய விவரங்களை நான் கேட்டுள்ளேன்” என்று அவர் கூறினார்.

இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கேர்ணல் நளின் ஹேரத் கருத்துக் தெரிவிக்கையில், “​​சில முன்னாள் இலங்கை இராணுவத்தினா் ரஷ்யப் படையில் சட்டத்திற்குப் புறம்பாகச் சேர்ந்திருக்கலாம் எனத் தெரிவித்தார். இவ்வாறான சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடும் ஆபத்துக்கள் குறித்து படையினருக்கு விளக்கமளிக்க அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

“அவர்கள் லாபகரமான சலுகைகள் மூலம் ஈர்க்கப்பட்டிருக்கலாம். அவர்களில் யாராவது சண்டையில் இறந்தால் இழப்பீட்டுக்கு என்ன உத்தரவாதம்?” என்றும் அவர் கேள்வி எழுப்பினாா்.

உக்ரேன் படையில் பணியாற்றிய இலங்கைப் படையினா் சிலா் ஏற்கனவே கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளிவந்திருந்தன. அதிக சம்பளத்தைப் பெற்றுக்கொள்வதை நோக்கமாகக் கொண்டே இவா்கள் இவ்வாறு ரஷ்ய மற்றும் உக்ரேன் படைகளில் இணைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.