பாதுகாப்பான சிறைகளுக்கு மாற்றுமாறு அநுராதபுரம் கைதிகள் கோரிக்கை ; கஜேந்திரகுமார் நேரில் சென்று ஆராய்வு

பாதுகாப்பான சிறை
வடக்கு – கிழக்கில் உள்ள பாதுகாப்பான சிறைச்சாலைகளுக்கு தம்மை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தம்மிடம் அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

அநுராதபுரம் சிறைச்சாலைக்கு நேற்று சென்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (தலைவர்), செல்வராஜா கஜேந்திரன்(பொதுச்செயலாளர்) , சட்டத்தரணி காண்டீபன் உள்ளிட்ட குழுவினர் தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடிய பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தனர். இதன்போதே கஜேந்திரகுமார் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 12 ஆம் திகதி நடைபெற்ற சம்பவத்திற்கு பின் காலையில் சிறைச்சாலைக்குச் சென்று தமிழ் அரசியல் கைதிகளை சந்திக்க முயன்றோம். ஆரம்பத்தில் எமக்கு அனுமதி கிடைக்கவில்லை. சிறை இராஜாங்க அமைச்சின் அனுமதி இல்லாமல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி வழங்க முடியாது எனக் கூறியிருந்தார்கள்.

அதன் பின் நாங்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளருக்குத் தொடர்பு எடுத்து பேசினோம். ஆனால், அது தோல்வியடைந்தது. சில மணித்தியாலங்களின் பின் இராஜாங்க அமைச்சின் செயலாளர் தொடர்பை ஏற்படுத்தி அனுமதி வழங்க முடியும்; நீங்கள் விரும்பினால் பார்க்க முடியும் எனத் தெரிவித்தார்.

அதன்பின் மதியம் 12.30 இற்கு மீண்டும் சிறைச்சாலைக்குச் சென்று அரசியல் கைதிகளைச் சந்திக்க கூடியதாக இருந்தது. இதன்போது உள்ளே சென்று தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. 10 அரசியல் கைதிகள் அநுராதபுரம் சிறையில் இருக்கும் நிலையில் இரண்டு கைதிகளை மட்டுமே சந்திக்கக் கூடியதாக இருந்தது.

நாங்கள் அவர்களிடம் விசாரணைகள் இடம்பெறுகின்றபோது அதனைக் கவனிக்க வேண்டும். இந்த விடயம் கணிசமான அளவுக்கு சர்வதேச மட்டத்தில் எடுபட்டுள்ளது. சிறைச்சாலை நிர்வாகத்தில் நாம் தீர்வை எதிர்பார்க்க முடியாது. அவர்களது சூழல், ஆட்சி- யாளர்களுக்கு அடிபணிந்து இருக்கக் கூடிய நிலையை உள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் கூடுதலாக கைதிகளின் வாக்குமூலத்தில்தான் தங்கியுள்ளது. அதனால் உண்மைகளை முழுமையாகப் பதிவு செய்ய வேண்டும் என்பதை எதிர்பார்கின்றோம் என கைதிகளிடம் கூறினோம். இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு உறுப்பினர்கள் நேற்றுமுன்தினம் சிறைச்சாலைக்கு சென்று 8 பேரிடம் வாக்கு மூலம் பெற்றனர் என்று இதன்போது அவர்கள் கூறினார்கள்.

10 அரசியல் கைதிகள் இருக்கும் நிலையில் 8 பேரின் வாக்குமூலமே பெறப்பட்டுள்ளது. இதுவரை அது மட்டுமே நடைபெற்றது என எமக்குக் கூறப்பட்டது. தமிழ் அரசியல் கைதிகள் உருக்கமாக அவசரமான ஒரு கோரிக்கையை எமக்கு விட்டனர். யாழ்ப்பாணம் சிறைச்சாலை அல்லது வடக்கு – கிழக்கு பகுதிகளில் உள்ள விசேடமாக தமது வீடுகளுக்கு அண்மையில் உள்ள சிறைச்சாலைக்கு தமது பாதுகாப்புக் கருதி தங்களை மாற்ற வேண்டும் எனக் கோரினர்.

அந்தக் கோரிக்கையை நாம் அரசிடம் முன்வைப்போம். அத்துடன் அவர்களது விடுதலை தொர்பில் இந்த அரசுக்கும் சர்வதேசத்துக்கும் அழுத்தம் கொடுப்போம் என்பதையும் அவர்களிடம் குறிப்பிட்டுள்ளோம் எனத் தெரிவித்தார்.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021