அரச எதிர்ப்பு போராட்டம் என்பது எவருக்கும் எழுதி கொடுக்கப்பட்டதல்ல, எவரும் போராடலாம் -மனோ கணேசன்

347 Views

அரச எதிர்ப்பு போராட்டம்

அரச எதிர்ப்பு போராட்டம் என்பது எவருக்கும் எழுதி கொடுக்கப்பட்டதல்ல. எவரும் போராடலாம்” என தமிழ் முற்போக்கு கூட்டணி கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தனது முகநூல் பக்கத்தில்,

“அரசியல் கட்சிகள் தேவையில்லை என்று இஷ்டப்பட்டால், போராடுங்கள் என நேற்றே நாம் கூறி விட்டோம். ஆனால் போராட்டங்களை திசை திருப்ப அரசு கடும் முயற்சிகளை மேற்கொள்ளும். இது ஒன்றும் ஆச்சரியமில்லை. போராட்டம் என்னவோ அரசுக்கு எதிராக நடத்தப்படுகிறது. ஆனால், போராட்ட கூட்டத்திற்குள் “வேறு நபர்கள்” வருவார்கள். முதற்கட்டமாக “இது, அரசுக்கு மட்டும் எதிரானதல்ல. ஒட்டு மொத்த அரசியலுக்கு எதிரானது” என மாற்றுவார்கள். அப்புறம் “இன, மத அடையாளங்களை” கொண்டு வருவார்கள். இன்று, சிலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களை “தீவிரவாதிகள்” என ஜனாதிபதி ஊடக பிரிவு கூறுகிறது.

நாளை நாலு தமிழ் பேசுபவர்களை பிடித்து விட்டு, “பயங்கரவாதிகள்” என்றும் சொல்லலாம். இதெல்லாம் நடக்கலாம் என “மனசுக்குள் பட்சி” சொல்கிறது. SJB, JVP, UNP மற்றும் TPA எம்பீக்கள் தலைமையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் எவரும் கைதாகவில்லையே. கட்சிகள் நடத்தும் பேரணிகளில், கோஷங்கள் தீர்மானிக்கப்படும். நினைத்த மாதிரி யாரும் கோஷம் எழுப்ப முடியாது. கூடக்குறைய ஒரு ஒழுங்கு இருக்கும். நேற்றைய இரவு போராட்டத்தை முகநூலில் “நேரலை”யில் பரப்பிய சில நண்பர்களை தேடியே காலையில், புலனாய்வு அதிகாரிகள் வந்துள்ளார்கள். இது, எதிர்பார்க்கப்பட்டதே. இந்த இனவாத, மதவாத, இராணுவாத அரசு அப்படி சுலபமாக போய் விடாது.

“திட்டமிட்டு” விரட்ட வேண்டும். திட்டமிடாமல் உணர்ச்சி அலையில் “அள்ளுண்டு” போய் விடக்கூடாது. கோத்தாவை கொண்டு வந்த ஆமதுருக்களையும் இன்று சிங்கள மக்கள் ஏசுகிறார்கள். இது நல்லதே. இதனால் சில ஆமதுருக்கள் வாய் மூடி விட்டார்கள். முறுத்தெட்டுவே, ஓமல்பே போன்றோர் வேறு மாற்று வழி தேடுகிறார்கள். “GotaகோHome” என்றால் எல்லா ராஜபக்சர்களையும் விரட்டுவதுதான்.

விமல், உதய கும்பல் சொல்வது போல, ஒருவரை விரட்டி விட்டு ஏனையோரை அரவணைப்பதல்ல. இவர்கள் ஆட்சி அமைத்ததே, தமிழ்-முஸ்லிம் எதிர்ப்பு; சிங்கள-பெளத்த ஆக்கிரமிப்பு என்ற அடிப்படையில்தான். இன்று, அதிகமாக உணர்ச்சி வசப்பட்டு ஆத்திரத்தில் அரசை திட்டி, விரட்டுபவர்கள், இவர்களுக்கு வாக்களித்தவர்கள்தான்.

கடந்த தேர்தலில் “சஜித், அனுர” ஆகியோருக்கு வாக்களித்தவர்களை விட, “மொட்டுக்கு” வாக்களித்தவர்கள்தான் இன்று அதிக ஏமாற்றம், அதிக ஆத்திரம் அடைந்து உள்ளார்கள். ஆகவே இவர்கள் விரட்டட்டும். தெருவுக்கு வரட்டும். நாம் ஏற்கனவே தெருவில்தான் நிற்கிறோம். அவர்களும் வரட்டும். நாமும் கரங்கோர்ப்போம்..!” எனப் பதிவிட்டுள்ளார்.

Tamil News

Leave a Reply