ஈழத்தமிழினப் பகைமை மீளவும் நிறைவேற்று அதிகார பலம் பெற்றுள்ளது | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 192

78 Views

ஆசிரியர் தலையங்கம்-இலக்கு இதழ் 192

ஈழத்தமிழினப் பகைமை
மீளவும் நிறைவேற்று அதிகார பலம் பெற்றுள்ளது

இலங்கைத் தீவின் வரலாற்றில் ஈழத்தமிழர்களைப் பொறுத்த வரை 1977ஆம் ஆண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டு. 1976ஆம் ஆண்டின் ஈழத்தமிழர்களின் தன்னாட்சிப் பிரகடனமான வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கான குடியொப்பத் தேர்தலாக 1977 பொதுத் தேர்தலை ஈழத்தமிழர்கள் முன்னெடுத்து அறுதிப் பெரும்பான்மை வாக்குகளால் அதில் வெற்றியும் பெற்றனர். இந்த 1977ஆம் ஆண்டில் தான், ஜே. ஆர். ஜயவர்த்தனா தனது கிட்டிய உறவினரான 28வயது ரணில் விக்கிரமசிங்காவை இலங்கைப் பாராளுமன்றத்திற்கு உறுப்பினராக நியமித்து, இளைஞர் விவகாரம், மற்றும் தொழில்துறை அமைச்சராகவும், பிரதி வெளிநாட்டு அமைச்சராகவும் அமைச்சரவைத் தகுதியும் அளித்தார். இதன் வழி ஈழத்தமிழ்மக்களைத் தனது குடிகளாகக் கருதாது எவ்வாறு ஜே ஆர் ஒரு அந்நிய நாட்டுப் பகைமை போல் அவர்களின் வரலாற்றுத் தாயகத்தின் மேல் போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் என முழுஅளவிலான யுத்தப் பிரகடனம் செய்தாரோ, அதே வழியில் ஈழத்தமிழினத்தைப் பகைமையாகக் கருதி தனது அரசியலை இன்று வரை முன்னெடுத்து வருபவர் ரணில் விக்கிரமசிங்கா. இவர் இன்று இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாகப் பதவியேற்று நிதி அமைச்சையும் பாதுகாப்பு அமைச்சையும் தன்னிடம் வைத்து, தினேஸ் குணவர்த்தனாவைப் பிரதமராகக் கொண்ட 18 அமைச்சர்களை நியமித்துள்ளமை, ஈழத்தமிழினப்பகைமை மீளவும் நிறைவேற்று அதிகார பலம் பெற்றுள்ளது என்றே வரலாற்று உணர்வின் அடிப்படையில் கருதத் தோன்றுகிறது.

ரணில் விக்கிரமசிங்கா 1970இல் களனித் தொகுதியின் ஐக்கிய தேசியக்கட்சி அமைப்பாளராக 21வயதிலேயே நியமிக்கப்பட்டது முதல் இன்று வரை உரிமைப் போராட்டங்களையும், அரசியல் போராட்டங்களையும் ஒடுக்கும் கலையையே தனது அரசியலின் செல்நெறியாக கொண்டு பயணித்து வருகின்றார். இவர் ஆறு தடவைகள் பிரதமராக இருந்து படைப்பலம், ராஜதந்திரம், அனைத்துலகச் செல்வாக்கு என்னும் முத்தரப்பட்ட பின்புலங்கள் வழியாக ஈழத்தமிழ் மக்களின் போராடும் உரிமைகளை மறுத்த, மனித உரிமைகள் வன்முறையாளராகவே வரலாற்றில் தன்னைப் பதிவு செய்துள்ளார்.

இவர் பதவியேற்பு தொடர்பாக நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்ட கட்டுரையில் இவரை கோட்டாவின் நண்பனெனவும், அரசியலில் நரியெனவும் மிகத்தெளிவாக உலகுக்கு இனங்காட்டியுள்ளது. உலகுக்கு தெரிந்த இந்த உண்மை தெரியாதவர்களாக இவருக்கு வாக்களித்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமையையும், தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்களையும், வீட்டுக்குப் போங்கள் என அரகலிய போராட்டக்குழு பாணியில் தமிழர் தாயகத்திலும் போராட வேண்டிய பொறுப்புள்ளவர்களாக தாயகத்திலும் உலகிலும் வாழும் தமிழர்கள் உள்ளனர்.

மேலும், ஈழத்தமிழர்களைப் பொறுத்த மட்டில் சிங்கள பௌத்த பேரினவாத சிங்கள அரசாங்கங்களின் ஈழத்தமிழின அழிப்பு அரசியல் ஒவ்வொன்றிலும் அதனை நிறைவேற்றுவதற்கான பலமாக ரணில் விக்கிரமசிங்கா இருந்து வந்துள்ளமை வரலாறு. இவரது மேற்குலக அரசியல் சார்பு நிலைகளும், பெரு முதலாளித்துவ பின்முதலாளித்துவ ஆதரவு பொருளாதாரக் கொள்கைகளும், சிறிலங்கா அரசாங்கத்தின் ஈழத்தமிழின அழிப்பு அரசியல் செயற்றிட்டங்கள் குறித்த அனைத்துலக சட்ட விசாரணைகளிலிருந்து சிங்களத் தலைமைகளைக் காக்கும் பாதுகாப்புக் கவசமாக எக்காலத்திலும் விளங்கி வருகிறது. இக்காலத்திலும் கோட்டா உட்பட்ட ராசபக்ச குடும்பத்தினர் மேலான மனித உரிமைகள் ஆணையக விசாரணைகள் மற்றும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற விசாரணைகள் அவர்களை நெருங்காமல் காக்கும் பாதுகாப்புக் கவசமாக இவரே செயற்படுவார் என்ற நம்பிக்கையே கோட்டா இவரிடம் நாட்டின் அதிகாரத்தைக் கையளிக்க வைத்தது. சுருக்கமாகச் சொன்னால் சிறிலங்காவின் 2009ஆம் ஆண்டின் முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்புக் குற்றவாளிகளுக்கு தண்டனை நீதி கிடைக்காமலும் பாதிப்புற்ற மக்களுக்கு பரிகார நீதி கிடைக்காமலும் தடுத்து வரும் மிகப்பலம் பொருந்திய அரசியல் மனிதன் ரணில் விக்கிரமசிங்கா, இன்று நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதி என்னும் அதியுயர் உச்ச அதிகார சக்தியாக தன்னை சிங்கள மக்களின் விருப்பத் தெரிவு இல்லாமல் நரித்தந்திரத்தால் நிலைநிறுத்தியுள்ளார். சிங்கள மக்களையே இனங்காணக் கூடிய அச்சத்துக்கு உள்ளாக்கி, அறவழியில் போராடிய 15 பேரைக் காயப்படுத்தி, 15 பேரைக் கைதாக்கி, பிபிசி ஊடகவியலாளர்கள் உட்பட ஊடகவியலாளர்களைத்தாக்கி கருத்துச் சுதந்திரத்தையும் மறுத்து, போராட்டக்காரர் தங்கியிருந்த கூடாரங்களை நொறுக்கி, ஆட்சியை ஆரம்பித்துள்ளார். இவை ஈழத்தமிழினத்திற்கு மிகப்பாதகமான நிலைகள் உருவாகப்போகிறது என்ற அச்சத்தைப் பலமாக ஏற்படுத்துகிறது. அதிலும் ஜே ஆரின் இரத்த உறவான ரணில் அவருடைய ‘விளையாட்டை உன்சார்பாக விளையாடு ஆனால் சட்டங்களைப் பின்பற்றி விளையாடு’ என்ற தத்துவத்தைக் கரைத்துக் குடித்தவர். இதனால் தான் காலிமுகத்திடல் போராட்டக்காரர்களை நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாகப் பதவியேற்றவுடனேயே அரசவர்த்தமானி அறிவிப்பு மூலம் சட்டப்படி இராணுவத்தை அழைத்து அடித்து நொறுக்கி கைதுகள் செய்து அவர்களுக்கு இனங்காணக்கூடிய அச்சத்தை ஏற்படுத்தி தனது அரசியல் பழிவாங்கலை சட்டத்தின் நடைமுறைப்படுத்தலாக நியாயப்படுத்தியுள்ளார். இதுதான் ரணில். இதுதான் ஜே. ஆரின் மறுபிறப்பு.

ஈழத்தமிழினப்படுகொலையை எவ்வாறு நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கான, நாட்டின் ஒருமைப்பாட்டுக்கான சட்ட நடைமுறைப்படுத்தல் என்று உலகுக்குச் சட்டத்தின் படி விளையாடி நியாயப்படுத்துவதில் சட்ட வல்லுநராக ஜே. ஆர் விளங்கினாரோ, அவர் பாணியில் இன்று ரணிலும், தனது அரசியல் பழிவாங்கல் அதிகாரப் பிரயோகத்தைத் தொடங்கியுள்ளார். இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ரணிலின் மக்கள் போராட்ட ஒடுக்குதல்களும், ஈழத்தமிழின அழிப்பு அரசியல் செயற்பாடுகளும், இலங்கை மக்களையும், ஈழத்தமிழர்களையும் தாக்காது தடுப்பதற்கு, கூட்டு இயங்கு இணைவு குடிமக்கள் அமைப்புக்கள், இலங்கையில் உள்ள குடிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், சிங்கள, ஈழத்தமிழின தேசஇனத்தன்மைகளும் தனித்துவமான இறைமைகளும் சமமாக மதிக்கப்பட்ட நிலையில், இலங்கை முஸ்லீம் மற்றும் மலையக மக்களின் அரசியல் உரிமைகள் உத்தரவாதப்படுத்தப்பட்ட முறையில், உடன் உருவாக்கப்பட வேண்டும். அதற்கு புலம் பதிந்து வாழ் தமிழர்கள் தங்களில் தாங்கள் கூட்டு இயங்கு மனநிலை உள்ளவர்களாக இணைதல் மிக முக்கியம் என்பது இலக்கின் எண்ணம்.

Tamil News

Leave a Reply