வடக்கு கிழக்கில் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு உடனடித் தீர்வு வேண்டும்-அன்ரனி யேசுதாஸ்

WhatsApp Image 2021 07 03 at 10.59.52 PM வடக்கு கிழக்கில் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு உடனடித் தீர்வு வேண்டும்-அன்ரனி யேசுதாஸ்

உள்ளூர் மீனவர்களுக்கு கொடுக்க வேண்டிய சலுகைகளையும் அதற்கான உரிமைகளையும் மறுத்து இன்னொரு நாட்டு பிரஜைக்கு கொடுப்பதென்பது நாட்டை வேறொரு திசைக்கு திருப்புவதோடு மட்டுமல்லாமல் நாட்டில் உள்ள மக்களை அடிமைத்தனமான ஒரு வாழ்க்கை நிலைக்கு கொண்டுசெல்லும் முயற்சியாகவே தான் கருதுவதாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினுடைய வடக்கு கிழக்கு இணைப்பாளர் அன்ரனி யேசுதாஸ் தெரிவித்துள்ளார்.

சீனர்களின் கடல் அட்டை பிடிப்பு மற்றும்  தென்னிலங்கை மீனவர்கள் தமிழர் பிரதேசங்களில் வாடி அமைத்து மீன்பிடியில் ஈடுபடுவதனால் தமிழ் மீனவர்கள் எவ்வாறான பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது என்பது தொடர்பில் இலக்கு இணைய சேவைக்கு  வழங்கிய பிரத்தியேக செவ்வியில் அன்ரனி யேசுதாஸ் மேலும் கூறுகையில்,

“நீங்கள் குறிப்பிட்ட இவ்வாறான அத்துமீறிய நடவடிக்கைகளில் உள்ள முக்கியமான பிரச்சனை என்னவென்றால், சீனப் பிரஜைகளுக்கு எங்களுடைய நாட்டு கடற்பரப்புக்குள் அட்டை வளர்ப்பு மற்றும் வேறு தொழில்களை மேற்கொள்வதற்கான அனுமதி வழங்குதல் என்பது முக்கியமான பிரச்சினையாக காணப்படுகின்றது.

அதாவது தற்போது கிளிநொச்சி மாவட்டத்தில் கௌதாரிமுனை பிரதேசங்களில் சீன பிரஜைகள் அட்டை வளர்ப்பில் ஈடுபடுவது என்பது அப்பிரதேசங்களில் உள்ள உள்ளூர் மக்களுக்கு ஒரு பெரிய அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தற்பொழுது தென்னிலங்கையில் பரவலாக  சீன மயமாக்கல் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக வடபகுதியும் தற்போது சீன மயமாதலுக்கு உள்ளாகி வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது.

இதனடிப்படையில் பிரதேசங்களில் வாழுகின்ற மக்கள் அந்தந்த வளங்களை பயன்படுத்துவதற்கான உரிமை இருக்க வேண்டும்.  விவசாயத்துறையாக இருக்கலாம். மீனவத்துறையாக இருக்கலாம். யார் அதிகமாக அந்த பகுதிகளில் வாழ்கின்றார்களோ,  அந்த வளங்களோடு இணைந்து வாழ்கின்ற மக்கள் குறித்த வளங்களை அனுபவிக்கவும் அதனை முகாமைத்துவப்படுத்தவும் அதை ஆட்சிப்படுத்துவதற்குமான உரிமை அவர்களுக்கு இருக்கின்றது.

அவ்வாறு உரிமை இருக்கின்றவிடத்தில் அந்த மக்களிடம் எந்த விதமான கலந்துரையாடலும் எந்த விதமான ஆலோசனைகளும் செய்யாமல் வெளிநாட்டு செயற்றிட்டம் ஒன்றிற்கு அட்டை தொழில் வளர்ப்பை மேற்கொள்ள அனுமதி அளித்திருக்கிறதென்பது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை,  அந்த இழப்புக்களோடு வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்களை சமூக-பொருளாதார கலாசாரத்தில் மட்டுமல்ல அவர்களுக்கு இருக்கின்ற உரிமையிலும் கை வைத்திருக்கிறார்கள் என்ற ரீதியில் தான் நாங்கள் இந்த விடயத்தை பார்க்கின்றோம். இது மிகவும் கண்டிக்கத்தக்க ஒரு விடயமாகும்.

எந்த அடிப்படையில் இந்த முயற்சியை மேற்கொண்டார்கள்,  எந்த அடிப்படையில்  அவர்களுக்கு அந்த உரிமையை வழங்கினார்கள் என்பது ஒரு கேள்விக்குறியாக இருக்கின்றது.

உள்ளூர் மீனவர்களுக்கு கொடுக்க வேண்டிய சலுகைகளையும் அதற்கான உரிமைளையும் மறுத்து இன்னொரு நாட்டு பிரஜைக்கு கொடுப்பதென்பது நாட்டை வேறொரு திசைக்கு திருப்புவதோடு மட்டுமல்லாமல் நாட்டில் உள்ள மக்களை அடிமைத்தனமான ஒரு வாழ்க்கை நிலைக்கு கொண்டுசெல்லும் முயற்சியாகவே நாங்கள் இதனை கருதுகின்றோம்.

எங்களுக்கு இதில் சந்தேகமும் இருக்கின்றது. இது  அரசாங்கத்தின் திட்டமிட்ட நடவடிக்கையாக மறைமுகமாக இந்த மக்களை அடக்கி ஆள்வதற்கு முயற்சியாக இருக்கலாம் என நாங்கள் கருதுகின்றோம்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தென்னிலங்கையில் இருந்து வருகின்ற மீனவர்களால் ஏற்படுகின்ற பிரச்சனைகள் தொடர்பாக நிரந்தரமான தீர்வு ஒன்றினை பெற்றுத்தர வேண்டும் என நாங்கள் கோரியிருக்கின்றோம். பிரதேச வாழ் மக்களுக்கு சுதந்திரமாக தங்களுடைய தொழில்களை மேற்கொள்வதற்கு,  தங்களுடைய வருமானத்தை பெற்றுக் கொள்வதற்குமான அனைத்து வழிகளையும்  முடக்கும் ஒரு முயற்சியாகவே  தென்னிலங்கை மீனவர்களின் செயற்பாடு இங்கு உள்ளது.

ஏற்கனவே சட்ட விரோதமான மீன்பிடி முறைகள் பயன்படுத்தபடுகிறது,  அதிகமான படகுகள் தொழிலில் ஈடுபடுவதனால் பிரதேச வாழ் மீனவர்கள் தங்களுடைய தொழிலை மேற்கொள்ள முடியாமல் இருக்கிறது.  இவ்வாறான அத்துமீறிய நடவடிக்கைகள்  தமிழ் மீனவர்களையும் அவர்களுடைய எதிர்காலத்தையும் பாதிக்கின்றது.

ஆகவே இந்த பிரச்சனை தொடர்பாக பொறுப்பு மிக்கவர்கள் விசேடமாக கடற்றொழில்  அமைச்சு அது சார்ந்தவர்கள் இதற்கு ஒரு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல்  ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு மேலும் அவர்களை வறுமைக்கோட்டின் கீழ் கொண்டு செல்லும் செயற்பாடாகவே இது அமையும்.

ஆகவே இந்த பிரச்சனை தொடர்பாக அரசு சாதகமான ஒரு முடிவினை எடுக்க வேண்டும்.  அதற்கான அழுத்தங்களை நாங்கள் கொடுக்க வேண்டியிருக்கிறது. இந்த கொரோனா நோய் நிலைமையில் மக்களால் போராட முடியாத சூழ்நிலை காணப்பட்டாலும் ஏதோ ஒரு வழியில் இதற்கான எதிர்ப்புகளை மீனவர்கள் சார்ந்து முன்னெடுக்க வேண்டும் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்றார்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 137

ilakku Weekly Epaper 137 July 04 2021 வடக்கு கிழக்கில் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு உடனடித் தீர்வு வேண்டும்-அன்ரனி யேசுதாஸ்