ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் மீண்டும் உக்ரைனின் ஆளில்லா விமானம் தாக்குதல்

ரஷ்யாவின் மொஸ்கோ நகரிலுள்ள கட்டடமொன்று இரு  தினங்கள் இடைவெளியில் இன்று இரண்டாவது தடவையாகவும் ட்ரோன்(ஆளில்லா விமானம்) தாக்குதலுக்கு இலக்காகியது.

மொஸ்க்வா சிட்டி கொம்பிளக்ஸ் எனும் கட்டடம் நேற்றுமுன்தினம் உக்ரைனின் ட்ரோன் தாக்குதலுக்குள்ளானது.

இந்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் அக்கட்டடம் ட்ரோன் தாக்குதலுக்கு இலக்கானது என மேயர் சேர்ஜி சோபியானின் தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் பல ட்ரோன்களை ரஷ்ய படையினர் சுட்டுவீழத்தியதாகவும் ஆனால், ஒரு ட்ரோன் மேற்படி கட்டடத்தை தாக்கியதாவும் அவர் குறிப்பிட்டார்.

இக்கட்டத்தின் 21 ஆவது மாடி முகப்பு சேதமடைந்துள்ளதாகவும், இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை எனவும் அவர் கூறினார்.

இத்தாக்குதலுககு உக்ரேன் மீது ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு குற்றம் சுமத்தியுள்ளது. ஆனால், பொதுவாக மொஸ்கோ மீதான ட்ரோன் தாக்குதல் தொடர்பில் உக்ரைன் நேரடியாக கருத்து தெரிவிப்பதில்லை.

எனினும், நேற்றுமுன்தினம் நடந்த தாக்குதலின் பின்னர், யுத்தமானது ரஷ்யா பிராந்தியத்துக்கு திரும்புகிறது என உக்ரைன்  ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.