வடக்கு – கிழக்கில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள், தாக்குதலுக்கு உள்ளான ஊடக நிறுவனங்கள் தொடர்பான விசாரணைகளை உடன் ஆரம்பிப்பது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் யாழ். ஊடக அமையத்தினருக்கும் இடையில் சந்திப்பு ஒன்றை விரைவில் ஏற்பாடு செய்வதாக பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் உறுதியளித்தார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் யாழ். ஊடக அமையத்திற்கு சென்று ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இதன்போது வடக்கு கிழக்கில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்க வேண்டும் என்று யாழ். ஊடக அமையத்தினரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதன்போது பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கருத்து தெரிவிக்கையில், தங்களது அரசாங்கம் தெற்கு ஊடகவியலாளர்கள் வடக்கு ஊடகவியலாளர்கள் என்ற பிரிவினையோடு நோக்குவதில்லை என்றும் கடந்தகால ஆட்சியாளர்கள் போல் தாங்கள் செயற்படப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.
எவரும் நினைத்துகூட பார்க்க முடியாத தீர்ப்புக்கள் தங்கள் ஆட்சியில் வந்துகொண்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் தங்களுடைய காலத்தில் நீதியை நிச்சயம் பெற்றுக் கொடுப்போம் என்றும் அதற்கான கால அவகாசத்தை தர வேண்டும் என்றும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்
மேலும் ஊடகவியலாளர்களின் கோரிக்கைகள் அடங்கிய ஒன்றும் இதன் போது வழங்கப்பட்டுள்ளது.



