இராணுவத்தின் பிம்பத்தை மீண்டும் கட்டி எழுப்ப இரவில் நடத்திய அராஜகமே காலி முகத்திடல் தாக்குதல்- அருட்தந்தை மா.சத்திவேல்

ஜனாதிபதி சிதைந்த இராணுவத்தின் பிம்பத்தை மீண்டும் கட்டி எழுப்ப இரவில் நடத்திய அராஜகமே காலி முகத்திடல் தாக்குதல் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (23) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘காலி முகத்திடல் போராட்ட குழுவினர் தனது போராட்ட களத்தில் இருந்து வெளியேறுவதற்கான முன் ஆயத்தங்களை செய்து கொண்டிருந்த பின்னணியில் நள்ளிரவில் பெருந்திரளான பொலிஸாரும் இராணுவத்தினரும் காலி முகத்திடலை முற்றுகையிட்டு வன் முறையை பிரசித்து ஊடகவியலாளர் உட்பட பலரை அடித்தும் காயப்படுத்தியும் கைது செய்தும் மேற்கொண்ட அராஜகம் அரச பயங்கரவாதத்தின் கோர முகத்தையும், ஜனாதிபதியான ரணிலின் இராணுவ அதிகாரத்தின் பாதுகாப்பில் ஆட்சி கட்டமைப்பை பலப்படுத்தும் அதிகார வெறியையும் வெளிப்படுத்தி உள்ளது.

இத்தகைய நாகரிகமற்ற செயற்பாடுகள் பொருளாதார ரீதியில் நலிவுற்று வீதிக்கு தள்ளப்பட்டிருக்கும் மக்களை மேலும் வன்முறைக்கு தள்ளும் என்பதால் இதனை வன்மையாக கண்டிப்பதோடு நாட்டில் எந்த பாகத்திலும் இத்தகைய செயற்பாடுகள் தொடர்வதற்கு இடம் அளிக்கக் கூடாது என்பதையும் வலியுறுத்துகின்றோம்.

நாட்டன் தலைநகரில் சமூக ஊடகங்கள் விழித்திருக்க ஊடகவியலாளர்களை தாக்கி இராணுவமும் பொலிசும் நடாத்திய அட்டகாசம் வடபுலத்தில் இதே இராணுவம் எத்தனை கொடுமைகளை புரிந்திருக்கும் என்பதை உள் நாட்டுக்கும் சர்வதேசத்திற்கும் புரிய வைத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

நிலையில் இனப்படு கொலை சூத்திர தாரியான கோத்தாபய ராஜபக்சவை உடனடியாக கைது செய்து சர்வதேச நீதிமன்றில் நிறுத்தப்பட வேண்டும். யுத்த குற்றவியல் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என தெற்கின் சமூகம் குரல் கொடுக்க தம்மை ஆயத்தப்படுத்தி துணிய வேண்டும்.

பல நூற்றுக்கணக்கான இராணுவத்தினரினதும் பொலிசாரினதும் பாதுகாப்பு வேலிகளை தகர்த்தும் பல்வேறு திசைகளில் இருந்து வீசப்பட்ட கண்ணீர் புகை குண்டுகளுக்கு முகம் கொடுத்தும் போராட்டக்காரர்கள் ஜனாதிபதியின் உத்தியோகப் பூர்வ வாசஸ்த்தலத்தையும் பிரதமரின் அலுவலகத்தையும் கைப்பற்றியதை இராணுவத்தின் தோல்வியாக கருதிய ஜனாதிபதி சிதைந்த இராணுவத்தின் பிம்பத்தை மீண்டும் கட்டி எழுப்ப இரவில் நடத்திய அராஜகமே காலி முகத்திடல் தாக்குதல். மக்களின் சக்திக்கு பயந்து இத்தகைய தாக்குதல் இரவில் நடத்தப்பட்டதால் போராட்ட களத்தை கைப்பற்றினாலும் இராணுவத்திற்கும் அரசுக்கும் அது தோல்வியே.

இராணுவத்தின் மீது அதீத நம்பிக்கை வைத்து அவர்கள் மூலம் நாட்டை வழிநடத்த துணிந்த கோத்தாவை ராஜபக்சே இறுதியில் அவர்களின் பாதுகாப்பு வேலிகள் தகர்த்த நிலையில் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி அங்கும் தொடர்ந்திருக்க முடியாது இலங்கைக்கே திரும்பி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ரணில் தனது பதவி அதிகாரத்தை காண்பிக்கவும், ராஜபக்சகளின் குறிப்பாக கோத்தாபய ராஜபக்சவினதும் மொட்டு கட்சியினரதும் ஆதரவை தமதாக்க திட்டமிட்டு நடத்தப்பட்ட வெறியாட்டமே காலிமுகத்திடல் தாக்குதல்.

அதிலும் போராட்டக்காரர்கள் காலி முகத்திடலில் இருந்து சுமுகமாக வெளியேறினால் அது அவர்களுக்கு வெற்றியாகிவிடும் என்பதாலும் யுத்த வெற்றி வீரர்களாக புகழ் சூட்டப்பட்ட இராணுவத்தினரை நிரந்தர தோல்விக்கு தள்ளிவிடும் என்பதையும் சிந்தித்து தமது அற்ப சுகத்திற்காக ஜனாதிபதி காலிமுத் திடல் தாக்குதலை மேற்கொண்டுள்ளார் என்பதுவே உண்மை.

அது மட்டுமல்ல நாடு அடைந்துள்ள பொருளாதார வீழ்ச்சியில் மீள கட்டி எடுக்கும் செயற்பாட்டில் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் போது இராணுவத்தை களத்தில் வைத்திருக்க வேண்டியேற்படும். அதற்கு முன் ஆயத்தமாகவும், இராணுவ மன நிலையை சரி செய்யவும், பயத்தில் மக்களை வைக்கவும் எடுக்கப்பட்ட முயற்சியாகவும் காலிமுகத்திடல் தாக்குதல் நடந்தேறி உள்ளது. சஜித் பிரேமதாச, டலஷ் அழகப்பெரும யார் வந்திருந்தாலும் இதுவே நடந்திருக்கும்.

இந்த அனுபவங்களை தெற்கின் சிங்கள மக்கள் தமதாக்கி வடக்கின் மக்ககளின் அரசியல் நியாயங்களுக்கு குரல் கொடுப்பதோடு, அரசியல் கைதிகளின் விடுதலை, இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணி விடுவிப்பு என்பன தொடர்பாகவும் உரத்து குரல் எழுப்ப வேண்டும். இல்லை எனில் தெற்கு தொடர் தோல்விக்குள்ளேயே பயணிக்க வேண்டி ஏற்படும்.

அதுமட்டுமல்ல மலையகத்திலும் புதிய இராணுவம் முகாம்கள் தோன்றியுள்ளன. அவை விரிவாக்கம் பெறுகின்றன. மலையக மக்களும் இராணுவத்தின் கழுகு பார்வைக்குள் வைக்கப்பட்டுள்ளனர் என்பதை மலையக அரசியல்வாதிகளும் உணர்ந்து பொது வேலை திட்டத்தோடு அவர்களும் செயல்பட வேண்டும்.” என்றுள்ளது.