அரசியல் இலாபங்களுக்காக மக்களின் பிரச்சனைகள்  மழுங்கடிக்கப்படுகின்றன – கலாநிதி இங்கர்சால் 

91 Views

‘இலங்கையில் பொருளாதாரம் உள்ளிட்ட சகலதுறைசார் நெருக்கடி நிலைகள் அதிகரித்துள்ளன.இதற்கான தீர்வினை ஜனாதிபதி ரணில் பெற்றுக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றபோதும் இது இலகுவான காரியமல்ல.அத்தோடு அரசியல் காய் நகர்த்தல்களுக்கு மத்தியில் மக்களின் பிரச்சனைகள் மழுங்கடிக்கப் பட்டு வருவதும் வருந்தத்தக்க விடயமாகும்’ என்று கல்விமாணிப் பாடநெறியின் விரிவுரையாளர் கலாநிதி எம்.எஸ்.இங்கர்சால் தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

‘இலங்கையின் நிலைமைகள் நாளுக்கு நாள் கவலையளிக்கின்றன. அத்தியாவசியப் பொருட்களுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடுகள் நிலவுகின்ற நிலையில் விலைவாசி அதிகரிப்பு மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது.

எரிபொருள், எரிவாயு கொள்வனவிற்காக மக்கள் வரிசைகளில் வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கின்றனர்.எனினும் பாராளுமன்றத்தில் மக்களின் பிரச்சனைகள் எந்தளவுக்கு எதிரொலிக்கின்றன.இதற்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதில் அரசியல்வாதிகளின் கரிசனை எந்தளவிற்குள்ளது என்பதெல்லாம் கேள்விக்குறியாகியுள்ளது.

அரசியல் காய்நகர்த்தல்களுக்கும், இருப்பை உறுதி செய்வதற்கும் மத்தியில் மக்களின் பிரச்சனைகள் மழுங்கடிக்கப்பட்டு வருவது வருந்தத்தக்க விடயமாகும்.இது பாரிய பின்விளைவுகளுக்கும் வித்திடுவதாகவே அமையும் என்பதனை மறுப்பதற்கில்லை.

நாட்டின் சமகால நெருக்கடிகளுக்கும் மத்தியில் மக்கள் எழுச்சி காரணமாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய நாட்டை விட்டு தப்பியோடியுள்ளார். உலகநாடுகள் அவரை புறக்கணித்துவரும் நிலையில் உலகம் சுற்றும் வாலிபனாக அவர் வலம்வந்து கொண்டிருக்கின்றார்.

இதனிடையே நாட்டின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இப்போது பாராளுமன்றத்தினால் தெரிவாகியுள்ளார். எனினும் மக்கள் ஆணை இவருக்கு இல்லாமை தொடர்பில் விசனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.ஜனாதிபதி ரணில் அரசியல் சாணக்கியம் மிக்கவர்.

பொறுமையுடன் சவால்களை கையாளுபவர்.சர்வதேச நாடுகள் பலவற்றினதும் செல்வாக்கு அவருக்குள்ளது.என்றபோதும் நாட்டின் பொருளாதார பின்னடைவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கும் அவரால் உடனடியாக தீர்வினைப் பெற்றுக் கொடுக்க முடியுமா? என்பது கேள்விக்குறியேயாகும். ஜனாதிபதி பதவியேற்றகையோடு காலிமுகத்திடல் இளைஞர் போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கைகள் விரிவுபடுத்தப் பட்டுள்ளமை தொடர்பில் விசனம் முன்வைக்கப்படுகின்றது. இத்தகைய செயற்பாடுகள் நாட்டின் ஐக்கியத்துக்கு இடையூறாக அமையும் என்பதே உண்மையாகும்.

நாட்டில் ஜனநாயகத்தையும் ஊழலற்ற அரசியல் கலாசாரத்தையும் கட்டியெழுப்புவதில் இளைஞர்களின் வகிபாகம் அதிகமானதாகக் காணப்படுகின்றது.எனவே அவர்களின் கருத்துக்களுக்கு செவிசாய்க்க வேண்டிய தேவை மேலெழுந்திருக்கின்றது என்பதனை சகலரும் புரிந்து கொள்ள வேண்டும்.

இதேவேளை நாட்டின் சமகால நெருக்கடிகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்காவிடில் நாட்டில் முரண்பாடுகள் வலுப்பெறுவதோடு நாட்டின் வங்குரோத்து நிலையும் அதிகரிக்கும். இதனை கருத்தில் கொண்டு அரசியல் மற்றும் கட்சி பேதங்களை மறந்து அனைவரும் நாட்டில்  அபிவிருத்தியையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பும் நோக்கில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். மேலும் தூரநோக்கற்ற, இனவாத முன்னெடுப்புக்களால் நிலைமை மேலும் மோசமடையும்” என்றார்.

Leave a Reply