புதிய இலங்கையை கட்டியெழுப்புவதற்கான ஒரு முயற்சி

காலிமுகத்திடலில் இடம்பெறும் இளைஞர்களின் போராட்டம் புதிய இலங்கையை கட்டியெழுப்புவதற்கான ஒரு முயற்சியாகும். இளைஞர்கள் தமது அடையாளங்களை மறந்து கை கோர்த்திருப்பது ஒரு சாதனையாகும் என்று கலாநிதி இரா.ரமேஷ் தெரிவித்தார்.

இது குறித்து பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி இரா.ரமேஷ் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

சமகால பொருளாதார நெருக்கடிக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்குமாறும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது அரசாங்கத்தை வீட்டுக்கனுப்பும் நோக்கிலும் காலிமுகத்திடலில் இப்போது இளைஞர்கள் உள்ளிட்ட மத்திய தர வர்க்கத்தினர் இரண்டு வார காலமாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கையின் வரலாற்றில் இச்சமகால போராட்டம் முக்கியத்துவம் மிக்கதாக விளங்குகின்றது. தமக்கு இந்த நாட்டில் ஒரு எதிர்காலம் இல்லை என்று இளைஞர்கள் உணர தலைப்பட்டுள்ளதோடு அரசியல் குறித்த அவநம்பிக்கையும் அவர்கள் மத்தியில் மேலெழுந்துள்ளது.

இந்நிலையில் இதிலிருந்தும் நாட்டை மீட்டெடுப்பதற்காக இளைஞர்கள் அணிதிரண்டு ஜனநாயக பண்புகளைக் தழுவி அதற்கு தொய்வு ஏற்படாத வகையில் போராடி வருகின்றனர். 2019 இல் ஜனரஞ்சகமான தலைவராகக் காணப்பட்ட  கோட்டபாயவை இப்போது வீட்டுக்கு செல்லுமாறு இளைஞர்கள் கோஷமிடுவது ஜனநாயகத்தின் முக்கியமான ஒரு பண்பாகும்.

தலைவர்கள் வாக்குறுதிகளை மீறும்போதும் கொள்கைகளில் இருந்து விலகிச் செல்லும் போதும் அதற்கு எதிராக குரல் கொடுப்பது ஜனநாயகப் பண்பாகும். அது இப்போது நடந்தேறிக் கொண்டிருக்கின்றது. கடந்த காலத்தில் இடம்பெற்ற ஆசிரியர்கள் மற்றும் விவசாயிகளின் போராட்டமும் சமகால போராட்டங்களுக்கு அடித்தளமிட்டது.

அந்த வகையில் இந்தப் போராட்டம் புதிய தேசத்தை உருவாக்குவதற்கான ஒரு முயற்சியாகும். இலங்கைக்கு சுதந்திரம் வேண்டிக்கூட இளைஞர்கள் இந்தளவுக்கு வீதியில் இறங்கி போராடவில்லை. இனவாதம், மதவாதம், மத மற்றும் மொழி ரீதியான பாகுபாடுகள் அல்லது சமத்துவமின்மை, பேரினவாதம், ஊழல், மோசடிகள் போன்ற காரணிகள் இந்நாட்டின் பின்னடைவிற்கு காரணமாகியிருந்தன. ஆட்சியாளர்கள் அரசியல் இலாபத்துக்காக இனவாதத்தையும் மதவாதத்தையும் ஏவிவிட்டு நாட்டு மக்களை பிரித்தாண்டனர்.

இதனை சமகால இளைஞர் சமூகம் நன்றாகவே புரிந்து கொண்டு களமிறங்கியுள்ளமை வரவேற்கத்தக்கதாகும். இந்த வகையில் ராஜபக்ச குடும்பத்தினரை வீட்டுக்கு அனுப்புவது மட்டுமன்றி அவர்கள்  கொள்ளையடித்த பணத்தை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்ற கோரிக்கை முக்கியத்துவம் மிக்கதாகும்.

சமூக எழுச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டிய தலைவர்கள் எமக்கு தேவையாகவுள்ளனர். இதற்கு போராட்டம் வழிவகுக்கும். 20 ஆவது திருத்தத்தின் மூலம் எல்லையற்ற அதிகாரங்கள் ஜனாதிபதியிடம் குவிந்துள்ள நிலையில், இவை நீக்கப்பட வேண்டும். அரசாங்கம் இளைஞர்களின் நியாயமான போராட்டங்களை கொச்சைப்படுத்த முனையுமானால் இதனால் ஏற்படும் பாதக விளைவுகள் அதிகமாகும். இதனை உணர்ந்து சமகால பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினை அரசாங்கம் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றார்.

Tamil News