ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு பிணை- சர்வதேச மன்னிப்புச் சபை வரவேற்பு

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு பிணை

பிரபல சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு பிணை வழங்குவதற்கு நீதிமன்றம் மேற்கொண்ட தீர்மானத்தை வரவேற்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

மேலும் பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்தியமைப்பதற்குத் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் எவையும் எதிர்பார்க்கப்பட்ட பெறுபேற்றைத் தராத நிலையில், அதனை முழுமையாக இல்லாதொழிப்பதுடன் அது வரையில் அச்சட்டத்தின் பிரயோகத்தை இடை நிறுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் புத்தளம் பகுதியிலுள்ள மதரசா ஒன்றில் மாணவர்களுக்கு அடிப்படைவாதத்தை கற்பித்தார் என்ற குற்றச்சாட்டுத் தொடர்பில் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி  பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,   விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவருக்கு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான மேனகா விஜேசுந்தர, நீல் இத்தவெல ஆகியோரால் பிணை வழங்குவதற்கான உத்தரவு    பிறப்பிக்கப்பட்டுள்ளது.