வடக்கு மாகாணத்தில் உள்ள ஊழல் அதிகாரிகளால் இடமாற்றச் சபையை மீறி ஆசிரிய இடமாற்றம் வழங்கப்பட்டமையை கண்டித்து இன்று (15) கொட்டும் மழையிலும் ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால் இலங்கை ஆசிரியர் சங்கத்தால் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் தீபன் திலீசன் கருத்து தெரிவிக்கையில், வட மாகாண கல்வியை திட்டமிட்டு அழிக்கும் முயற்சியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் இணைந்து ஊழல் கல்வி அதிகாரிகளும் ஈடுபட்டு வருவதாக சாடினார்.
இடமாற்றச் சபையை மீறி தங்களது கட்சிகளுக்கு சார்பானவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு சார்பானவர்களை யாழ்ப்பாணத்திலே தொடர்ச்சியாக தங்க வைத்துவிட்டு கஷ்டப் பிரதேசங்களில் ஆசிரிய சேவையை செய்த ஆசிரியர்களை மீண்டும் வெளிமாவட்டத்துக்கு அனுப்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
யாழ். தீவகம் மற்றும் மருதங்கேணி பிரதேசங்களில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் சேவையாற்றிய ஆசிரியர்களை திட்டமிட்ட முறையில் சேவையின் தேவை கருதிய இடமாற்றம் என்ற போர்வையில் பழிவாங்குகின்றனர்.
வடக்கு கல்வியில் ஊழல் புரிந்த பல அதிகாரிகள் தமது பதவிகளை தக்க வைத்துக்கொள்வதற்கும் உயர் பதவிகளை அடைவதற்காகவும் தேசிய மக்கள் சக்திக்கு பின்னால் இந்த முறைகேடான இடமாற்றத்தை மேற்கொண்டுள்ளனர்.
இந்த இடமாற்றத்தில் பல குறைபாடுகள் இருக்கிறது என வட மாகாண ஆளுநருக்கு எழுத்து மூலம் ஆசிரியர் சங்கம் தெரியப்படுத்தியும் அவரும் தேசிய மக்கள் சக்தியின் நிகழ்ச்சி நிரலை மேற்கொள்வதற்காக இந்த இடமாற்றத்தை மேற்கொள்வதற்கு உறுதுணையாக இருக்கிறார் என்று சங்கத்தின் செயலாளர் தீபன் திலீசன் தெரிவித்துள்ளார்.



