ஆப்கானிஸ்தானின் மேற்கு நகரமான ஹராட்டில் உள்ள பொது மருத்துவமனைகளில் பெண் நோயாளிகள், அவர்களை கவனித்துக்கொள்பவர்கள் மற்றும் பெண் பணியாளர்கள் புர்கா அணிந்து வர வேண்டும் என தாலிபன் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக, எல்லைகளற்ற மருத்துவர்கள் (MSF) எனும் லாப நோக்கற்ற சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த கட்டுப்பாடுகள் நவம்பர் 5 முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக MSF தெரிவித்துள்ளது.
“பெண்களின் வாழ்க்கை மற்றும் சுகாதார உதவிகளை அவர்கள் பெறுவது இந்த கட்டுப்பாடுகளால் மேலும் தடுக்கப்படும்,” என MSF-ன் ஆப்கானிஸ்தானின் திட்ட மேலாளர் சாரா சேட்யூ பிபிசியிடம் தெரிவித்தார். “அவசர மருத்துவ உதவி தேவைப்படுபவர்களும்” இதனால் பாதிக்கப்படுவார்கள் என அவர் தெரிவித்தார்.
தாலிபன் அரசின் செய்தித் தொடர்பாளர் இதை மறுத்துள்ளார். இந்த கட்டுப்பாடுகளின் ஆபத்துகள் குறித்து குரல் எழுந்த நிலையில், அவற்றில் சில தளர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹராட் பிராந்திய மருத்துவமனைகளில் குழந்தைகள் மருத்துவத்திற்கு உதவிசெய்துவரும் MSF, இந்த கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்த சில நாட்களில் அவசர உதவி தேவைப்படும் நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவது 28% குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.



