கைவிடப்பட்டது கைதிகளின் போராட்டம்

மஹர மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில் மரண தண்டனை கைதிகளால் ஐந்து நாட்களாக மேற்கொள்ளப்பட்ட உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று புதன்கிழமை கைவிடப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப்பேச்சாளர், சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

மஹர மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில் சிறைவைக்கப்பட்டுள்ள மரண தண்டனை கைதிகள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையை ஆயுள்தண்டனையாக அறிவிக்குமாறு வலியுறுத்தி உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த 24ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் ஐந்து நாட்களாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்ததுடன், இன்று புதன்கிழமையுடன் அது கைவிடப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் சுமார் 200க்கும் அதிகமான மரண தண்டனை கைதிகள் கலந்துக் கொண்டிருந்ததுடன்,  வெலிக்கடை சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட கைதுதிகள் அனைவரும் கூறையின் மேல் ஏறியிருந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

கைதிகளின் இந்த கோரிக்கை தொடர்பில் 5 மட்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்ததுடன், அது தொடர்பில் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் மற்றும் சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளரும் கைதிகளுக்கு தெளிவுபடுத்தியிருந்தனர். எனினும் கைதிகள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் மற்றும் சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளர் மீண்டும் கைதிகளுடன் கலந்துரையாடியதுடன் அவர்களது கோரிக்கை தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கைதிகளுக்கு விளக்கியிருந்தனர். இதையடுத்து கைதிகள் தங்களது போராட்டத்தை கைவிட தீர்மாணித்துள்ளனர்.

இலங்கையில் கடந்த பூரணை தினத்தை முன்னிட்டு, 94 கைதிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பில் கொலை சம்பவமொன்று தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவும் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இதையடுத்து மரண தண்டனை கைதிகள் தங்களது தண்டனையை குறைக்குமாறு கோரிக்கை விடுத்து உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.