எண்ணையுடன் மூழ்கிய கப்பலால் கடல் உயிரினங்கள் அழியும் ஆபத்து

பெருமளவான எண்ணையுடன் கடலில் மூழ்கிய கப்பலை தேடி கண்டறிந்து மீட்கும் நடவடிக்கைகளில் பிரிப்பைன்ஸ் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பிறின்ஸ்சஸ் எம்பிரஸ் என்ற கப்பல் தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் 800,000 லீற்றர் எரிபொருட்களை ஏற்றியவாறு கடலில் காணாமல் போயுள்ளது. தலைநகர் மனீலாவுக்கு அண்மையான கடற்பரப்பில் கடந்த செவ்வாய்கிழமை (28) பயணம் செய்துகொண்டிருந்தபோதே இந்த கப்பலில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு கடலில் மூழ்கியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

கப்பலில் உள்ள எரிபொருட்கள் நீருடன் கலந்தால் பவளப் பாறைகள் உட்பட பெருமளவான கடல் வாழ் உயிரினங்கள் அழிவை சந்திக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

கடலில் எண்ணைப் படலங்கள் மிதப்பதை பிலிப்பைன்ஸ் நாட்டின் கரையோர காவல்படையினர் கண்டறிந்த போதும் அது கப்பலின் இயந்திரத்தில் இருந்து வெளியேறிய எண்ணையாக இருக்கலாம் என அவர்கள் தெரிவித்திருந்தனர். எனினும் கடந்த வியாழக்கிழமை (2) மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் தொழிற்சாலை எண்ணைகளும் கடலில் மிதப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண்ணைப்படலங்கள் 24 சதுர கி.மீ தூரத்திற்கு அவதானிக்கப்பட்டுள்ளன. கப்பல் மூழ்கிய இடம் 400 மீற்றர்கள் ஆழமானது என்பதால் ஆழ்கடல் சுழியோடிகளால் அந்த இடத்தை நெருக்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.