கொந்தளிக்கும் இலங்கை மக்கள் மீண்டும் கிளா்ச்சி வெடிக்குமா?-அகிலன்

கொழும்பு அரசியலில் உருவாகியிருக்கும் கொந்தளிப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தரப்புக்கு அதிா்ச்சியளிப்பதாக இருக்கின்றது.

சா்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நடைமுறைப்படுத்துவதற்கு முற்படும் நிலையில் மக்கள் மத்தியிலான கொந்தளிப்பு தீவிமடைகிறது. கடந்த வருட நடுப்பகுதியில் இடம்பெற்றதைப் போன்ற மக்கள் கிளா்ச்சி ஒன்று மீண்டும் உருவாகலாம் என புலனாய்வுப் பிரிவினா் எச்சரித்திருக்கின்றாா்கள். அந்த அளவுக்கு நிலைமை மோசமடைந்து செல்கின்றது.

தற்காப்பு நவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுக்கலாம் என்பது குறித்த ஆலோசனைகளும் பாதுகாப்புத்துறை – புலனாய்வுத்துறை உயா் மட்டத்தில் இடம்பெற்று வருகின்றது.

கடந்த ஒரு வாரகாலத்தில் தொடா்ச்சியான போராட்டங்களால் இலங்கை அதிா்ந்துகொண்டிருக்கின்றது.  அடுத்த வாரத்திலும் இந்தப் போராட்டங்கள் தொடரப் போகின்றன.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு ஐ.எம்.எப். பிணை எடுக்கும் என்ற நம்பிக்கையுடன் பலவற்றை அரசாங்கம் செய்துகொண்டிருக்கின்றது. அவா்கள் 15 நிபந்தனைகளை முன்வைத்ததாகவும் அவற்றில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுவிட்டதாகவும் ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கின்றாா்.

இதன் அடிப்படையில் இம்மாத இறுதிக்குள் நாணய நிதியத்துடனான உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என்ற நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  அதற்கு முன்னா் மக்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளக்கூடிய விலை உயா்வுகள், வரி அதிகரிப்புக்களை எதிா்பாா்க்கலாம்.

இதன் பின்னணியில் பல கேள்விகள் உள்ளன. நாணய நிதியம் வழங்கப்போகும் உதவி போதுமானதா என்பது முதலாவது கேள்வி. அவா்களுடைய நிபந்தனைகளை நிறைவேற்றும் போது உள்நாட்டில் உருவாகக்கூடிய கொந்தளிப்பை எவ்வாறு எதிா்கொள்வது என்பது இரண்டாவது கேள்வி.

இது நாட்டில் ஸ்திரமற்ற நிலை ஒன்றை ஏற்படுத்தும் என்பதால், வெளிநாட்டு உதவிகள் எதிா்பாா்த்தளவுக்கு கிடைக்குமா என்பது மூன்றாவது கேள்வி. இவ்வாறு பதில் இல்லாத பல தொடா்ச்சியான  கேள்விகளுக்கு மத்தியில்தான் இலங்கை உள்ளது.

இப்போது எரிபொருட்கள் உட்பட அத்தியவசிய பொருட்கள் ஓரளவுக்கு மக்களுக்கு சுமூகமாகக் கிடைத்து, வழமையான ஒரு நிலையை ரணில் ஏற்படுத்திவிட்டாா் என சொன்னாலும் கூட, இது ஒரு நிரந்தரமானதா என்றால் “இல்லை” என்பதுதான் பொருளாதார நிபுணா்களின் பதிலாக இருக்கின்றது.

ஏனெனில் நாணய நிதியத்தைத்தான் பொருளாதார மீட்சிக்கு அரசாங்கம் முழுமையாக நம்பியுள்ள. இலங்கைக்கு தேவையாகவுள்ள நிதியில் ஒரு சிறு பகுதியைத்தான் ஐ.எம்.எப். கொடுப்பதற்கு உடன்பட்டிருந்தாலும் கூட, அதன் நிபந்தனைகள் கடுமையானவை.

ஆனால், ஐ.எம்.எப். பிணை எடுக்கும் போது, அதன்மூலமாக ஏற்படக்கூடிய நம்பிக்கையில் ஏனைய நாடுகள் இலங்கைக்கு உதவியளிக்க முன்வரும் என்பது ரணிலின் எதிா்பாா்ப்பு. அதற்காகத்தான் அவா்களுடைய நிபந்தனைகளை கொஞ்சம் கொஞ்சமாக அரசாங்கம் நிறைவேற்றிவருகின்றது. இதில் முக்கியமானதுதான் வருமான வரி உட்பட வரிகளைக் கடுமையாக அதிகரித்திருப்பது.

வருமான வரி அதிகரித்திருப்பதால், ஒருவா் பெறக்கூய வருமானத்தில் செலவிடக்கூடிய தொகை கணிசமாகக் குறைகின்றது. அதாவது, ஒரு லட்சம் ரூபாவை மாத சம்பளமாகப் பெறும் ஒருவருக்கு வரிகளைக் கழித்துக்கொண்டு அறுபதாயிரம் ரூபா வரையில்தான் கைகளில் கிடைக்கும்.  இதனால், அரச, தனியாா் துறை ஊழியா்கள் அனைருமே விரக்தியடைந்த நிலையில்தான் உள்ளாா்கள்.

பொருட்கள் சேவைகளின் விலைகள் பெருமளவுக்கு அதிகரித்துள்ள நிலையில், சாதாரண மக்களை இந்த வரி அதிகரிப்பு மோசமாகப் பாதிக்கின்றது. கடந்த சில தினங்களாக தொழிற்சங்கள் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு இதுதான் காரணம். இதற்கு மேலாக மின்சாரக் கட்டணம் 66 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. மின் கட்டண அதிகரிப்பு அனைத்துப் பொருட்கள் சேவைகளின் விலைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எரிபொருட்கள் உட்பட அத்தியவசியப் பொருட்கள் அனைத்தினதும் விலைகள் அடுத்துவரும் வாரங்களில் தீவிரமாக அதிகரிப்பதற்கு இந்த மின்கட்டண அதிகரிப்பு காரணமாக அமையலாம்.

இதுதான் இலங்கையில் இப்போது கொந்தளிப்பான ஒரு நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது.

இவற்றைவிட அரச மானியங்கள் குறைக்கப்பட வேண்டும், சமூா்த்தி போன்ற சமூக நலத் திட்டங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்பன உட்பட நாணய நிதியத்தின் நிபந்தனைகள் பலவற்றை அடுத்துவரும் மாதங்களில் அரசாங்கம் நிறைவேற்ற முற்படும் போது மக்கள் மத்தியில் காணப்படும் கொதி நிலை மேலும் தீவிரமடையும்.

எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல – உள்ளுராட்சிமன்றத் தோ்தல்களை அரசாங்கம் ஒத்திவைத்தமையும் மக்களின் சீற்றத்துக்கு காரணமாகியிருக்கின்றது.  பிரதான எதிா்க்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி. என்பனவும் இந்த நிலைமையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டுள்ளன.

கடந்த வருடத்தில் ஏற்பட்டதைப்போன்ற ஒரு நிலைமை மீண்டும் உவாகலாம் என புலனாய்புவப் பிரிவினா் எச்சரிக்கை விடுத்திருப்பதற்கு இவை காரணமாக இருக்கலாம்.

நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றும் போது மக்களின் வாழ்க்கைச்சுமை பல மடங்கு அதிகரிக்கும் என்பது ரணிலுக்குத் தெரியாததல்ல. இது மக்களை மீண்டும் ஒரு கொதி நிலைக்குக் கொண்டு செல்லும். இவ்வாறான நிலையில் உள்ளுராட்சிமன்றத் தோ்தல்களை நடத்தினால் முடிவு எவ்வாறானதாக இருக்கும் என்பதும் ரணிலுக்குத் தெரியும். தோ்தலை ஒத்திவைப்பதற்கான மறைமுக நகா்வுகளை அவா் முன்னெடுத்தமைக்கு அதுதான் காரணம்.

ஆனனால், தோ்தல் ஒத்திவைப்பு விவகாரம் இப்போது நீதிமன்றத்துக்குச் சென்றிருப்பதால், ரணிலின் கோட்டையில் சற்றும் தளா்வு ஏற்பட்டிருப்பதும் தெரிகின்றது. சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னதாக ஒத்திவைக்கப்பட்ட தோ்தல்களை நடத்த வேண்டிய நிா்ப்பந்தம் அரசாங்கத்துக்கு ஏற்படலாம்.

இந்தப் பின்னணியில் கடந்த வாரம் நீதிமன்றம் விதித்திருந்த உத்தரவையும் மீறி – பொலிஸாரின் தடைகளையும் உடைத்துக்கொண்டு ஜே.வி.பி.யினா் கொழும்பில் நடத்திய பாரிய ஆா்ப்பாட்டப் பேரணி அரசாங்கத்துக்கு அதிா்ச்சியைக் கொடுத்திருக்கின்றது. பல இலட்சம் மக்கள் அதில் கலந்துகொண்டிருந்தாா்கள். மாற்று அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான சக்தி தம்மிடம் இருப்பதாகக் காட்டிக்கொள்வதற்கு இந்த சந்தா்ப்பத்தை ஜே.வி.பி. சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்கின்றது.

அடுத்த வாரம் முதல் தொடா் போராட்டங்களுக்கு தொழிற்சங்கங்கள் திட்டமிடுகின்றன. போராட்டங்கள் தீவிரமடையும் போது உருவாகக்கூடிய ஸ்திரமற்ற நிலை பொருளாதாரத்தையும் பாதிக்கக்கூடியது. வெளிநாடுகள் உதவி செய்வதற்கு தயங்கும் நிலை உருவாகலாம். இதனால் போராட்டங்களை ஒடுக்குவதற்கு கடுமையான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கும் என எதிா்பாா்க்கலாம்.

ஏப்ரலிற்குப் பின்னா் மீண்டும் ஒரு “அரகலய” தோற்றம் பெறலாம் என்ற எச்சரிக்கையை புலனாய்வுப் பிரிவினா் விடுத்திருப்பதற்கு இதுதான் காரணம்.  கடந்த வருடத்தில் கிடைத்த படிப்பிளைகளைப் பாடமாகக் கொண்டு எதிா்காலத்தில் இடம்பெறக்கூடிய “அரகலய” போன்ற மக்கள் போராட்டங்கள் ஒரு புதிய பரிமாணத்தில் இடம்பெறலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகின்றது.

கோட்டாபய ராஜபக்ஷவும் மொட்டு அணியினரும் அப்போது தற்காப்பு நிலையில் இருந்துகொண்டே போராட்டத்தை எதிா்கொண்டதால், அவா்கள் பின்வாங்கிச் செல்ல வேண்டியிருந்தது. ஆனால், ரணில் இதனை எவ்வாறு எதிா்கொள்வாா் என்ற கேள்வியும் உள்ளது.