பாக்கு நீரிணையை ஒரே நேரத்தில் நீந்திக் கடந்து ஏழு பேர் சாதனை

பாக்கு நீரிணையை ஒரே நேரத்தில் நீந்திக் கடந்து ஏழு பேர் சாதனை ! |  Virakesari.lk

தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான பாக்கு நீரிணையை  10 மணித்தியாலங்கள் 45 நிமிடங்களில் 7  நீச்சல் வீர, வீராங்கனைகள் ஒரே நேரத்தில் நீந்தி சாதனை படைத்தனர்.

குறித்த சாதனையை இந்தியாவில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள திறந்த நீர் நீச்சல் அறக்கட்டளையைச் சேர்ந்த, பிரசாந்த் ராஜண்ணா, ராஜசேகர் துபரஹள்ளி, ஜெயப்பிரகாஷ் முனியல் பாய், அஜத் அஞ்சனப்பா ஆகிய  நான்கு நீச்சல் வீரர்கள், சுமா ராவ், சிவரஞ்சனி கிருஷ்ணமூர்த்தி,  மஞ்சரி சாவ்ச்சாரியா ஆகிய  மூன்று நீச்சல் வீராங்கனைகளும்  செய்துள்ளார்கள்.

பயிற்சி பெற்ற 7 பேரும் இலங்கையிலுள்ள தலைமன்னாரிலிருந்து  தனுஷ்கோடிக்கு வரையிலும் உள்ள சுமார் 30 கி.மீ தொலைவிலான பாக்கு நீரிணை கடற்பரப்பினை நீந்தி கடப்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை, இலங்கை தூதரகம் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சகத்திற்கு அனுமதி கோரியிருந்தனர்.

இந்திய-இலங்கை இரு நாட்டு அனுமதியும் கிடைத்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ராமேஸ்வரம் மீன்பிடி இறங்கு தளத்திலிருந்து இரண்டு படகுகளில் தங்கள் நீச்சல் பயிற்சியாளர் சுஜேத்தா தேப் பர்மன் தலைமையில் மீனவர்கள் உள்ளிட்ட 16 பேர் கொண்ட குழுவினர் இலங்கை தலைமன்னாரை வந்தடைந்தனர்.

தலைமன்னாரிலிருந்து நேற்று  (13) அதிகாலை 5 மணிக்கு கடலில் குதித்து நீந்த தொடங்கிய 7 பேரும்  நேற்று மாலை 3.45 மணி அளவில் (10 மணி நேரம் 45 நிமிடங்களில் நீந்தி) தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியை சென்றடைந்தனர்.

நீந்தி சாதனை படைத்தவர்களை இந்திய சுங்கத்துறை, மரைன் காவல்துறையினர், சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் அரிச்சல்முனையில் வரவேற்றனர்.

இதற்கு முன்னதாக தலைமன்னார், தனுஷ்கோடி இடையிலான பாக்கு நீரிணை கடற்பகுதியை 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம்  தேனியைச் சேர்ந்த ஆர். ஜெய் ஜஸ்வந்த் தனது 10 வயதிலும், 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம்  மும்பையைச் சேர்ந்த ஜியா ராய் என்ற ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி உள்ளிட்ட சிலர் குறைந்த வயதுகளில் நீந்தி நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.