“என்னுடைய உயிர் போகும் வரைக்கும் கணவனைத் தேடிக்கொண்டே இருப்பேன்” உறவைத் தொலைத்த ஒரு அன்னை – பாலநாதன் சதீஸ்

362 Views

உறவைத் தொலைத்த ஒரு அன்னை“என்னுடைய உயிர் போகும் வரைக்கும் கணவனைத் தேடிக்கொண்டே இருப்பேன்” உறவைத் தொலைத்த ஒரு அன்னை: தம் உறவுகளைக் கடந்த இறுதி யுத்தத்திலே  தொலைத்துவிட்டு எங்கே தம் உறவுகள் எனத் தெரியாது, நிம்மதியிழந்து  ஒவ்வொரு நாளும் ஏக்கத்துடன் காணாமல் போன உறவுகள் திரும்பி வந்துவிட மாட்டார்களா என்ற நப்பாசையுடன் எத்தனையோ உறவுகள் வீதிகளிலே இறங்கிப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த இறுதி யுத்தத்தில் எத்தனையோ தமிழ் பேசும் எம் உறவுகள் காணாமல் போயுள்ளனர். கணவன், மகன், மகள், அப்பா என  ஒவ்வொரு உறவுகளையும்  தொலைத்துவிட்டு இரவுபகல் பாராது, கொட்டும் மழையிலும்  தம் உறவுகளை மீட்டெடுக்க இன்று எத்தனையோ சொந்தங்கள்  போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

IMG20211105103341 “என்னுடைய உயிர் போகும் வரைக்கும் கணவனைத் தேடிக்கொண்டே இருப்பேன்” உறவைத் தொலைத்த ஒரு அன்னை - பாலநாதன் சதீஸ்முன்னாள் போராளியான தனது கணவன் கடந்த யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டதை அறிந்தும், எத்தனையோ விதத்தில் கணவனை மீட்டெடுக்கப் போராடியும், கணவனை மீட்டெடுக்க முடியாமல் போராடிக்கொண்டிருக்கும் அந்த  அன்னையின் நிலையினைக்  கண்டுகொள்ள யாருமில்லை இங்கே!

“எனது பெயர் செல்வராசா பத்மினி. நான் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வேணாவில் பகுதியிலே வசித்து வருகின்றேன். எனக்கு மூன்று பிள்ளைகள் இருவர் திருமணம் செய்து விட்டார்கள். எனது கணவர் கணபதிப்பிள்ளை செல்வம். இவரே கடந்த யுத்தத்தில் காணாமல் போனவர். என்ரை கணவரைப் பிரிந்த நாளில் இருந்து இன்றுவரை என்ரை கணவனை மீட்டெடுக்கப் பல பிரச்சினைகளுக்கு மத்தியிலும் போராடிக் கொண்டிருக்கிறன்.

2009.05.18  அன்று என்ரை கணவர் காணாமல் போனவர்.  அவர் முன்னாள் போராளி. யுத்தம் உக்கிரம் அடைந்த நேரம் என்ரை கணவரை மகன் கண்டு கதைச்சவர். அதுக்குப் பிறகு இராணுவத்தினர் தமிழர் பகுதிகளைக் கைப்பற்றினார்கள்.  பிறகு நாங்கள் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்து அவரைக் காணவில்லை எனத்  தேடிக்கொண்டு போன போது, எங்கடை பக்கத்துவீட்டுகாரர்  சொன்னார், உங்கட கணவனைத்  தன்னுடைய மகனுடன் சேர்த்து இராணுவத்தினர் பிடிச்சு வாகனத்துக்குள் ஏற்றி கொண்டு போறாங்கள். முல்லைத்தீவில் இருந்து ஓமந்தைக்குக் கொண்டு சென்றுவிட்டாங்கள் எனக் கூறினார். முல்லைத்தீவில் எங்கோ ஒரு இடத்தில் எங்களைக் கம்பிக் கூட்டில் அடைத்து வைத்திருந்தவர்கள். அதன் பின்னரே பேருந்தைக் கொண்டு வந்து ஏத்தி ஏந்திக்கொண்டு போனார்கள்.

தொலைத்த ஒரு அன்னை1 “என்னுடைய உயிர் போகும் வரைக்கும் கணவனைத் தேடிக்கொண்டே இருப்பேன்” உறவைத் தொலைத்த ஒரு அன்னை - பாலநாதன் சதீஸ்அப்படியே கொண்டு போய் ஓமந்தையில் பேருந்தை நிறுத்தி வைத்தார்கள். ஆனால் யாரையுமே இறங்க விடவில்லை. ஓமந்தை சோதனைச்சாவடியில் ஒலிபெருக்கி மூலம் என்ரை கணவன் பெயர் சொல்லி அறிவிச்சவை. அதனால் கணவரும் வந்துவிட்டார் என நான் அறிந்து கொண்டேன்.

அப்போது நான் என்னுடைய கணவர் நிற்கிறார் என பேருந்தில் இருந்து இறங்கிச் செல்லச் சென்ற போது, இராணுவத்தினர் பேருந்தை விட்டு இறங்க விடவில்லை. அதன் பின்னர் இன்றுவரை கணவரைக் காணவே இல்லை.

அதன் பின்னர் அப்படியே பேருந்து மூலம் எங்களைச் செட்டிக்குளம் ஆனந்தகுமாரசுவாமி முகாமிற்கு அழைத்துச் சென்று அங்கே விட்டார்கள். அந்த முகாமில் 2012ஆம் ஆண்டு எட்டாம் மாதம்  வரை இருந்து, சொந்த ஊரான புதுக்குடியிருப்பு வேணாவிலிற்கு வந்து இருந்தோம்.

தொலைத்த ஒரு அன்னை3 “என்னுடைய உயிர் போகும் வரைக்கும் கணவனைத் தேடிக்கொண்டே இருப்பேன்” உறவைத் தொலைத்த ஒரு அன்னை - பாலநாதன் சதீஸ்புலனாய்வுத் துறையினர் ஆரம்பத்தில் நாங்கள் மீள்குடியமர்த்தப்பட்ட போது வீடு தேடி வருவார்கள். வந்து மாமா எங்கே என்று விசாரிப்பார்கள். அப்போ நான் கூறுவேன் கொண்டு போயிற்றீங்கள், கொண்டு போனது போல கொண்டுவந்து விட்டுடணும் என்று. அப்படி கூறியதன் பின்னர் போயிடுவார்கள். தற்போது வாறதில்லை.

ஜோசப் முகாமிற்கு போய் முறைப்பாட்டை மேற்கொண்டிருந்தோம். அதில் ஒன்றை ஊடகத்திடம் கூறவேண்டும். அரைகுறை சிங்களத்திலும், தமிழிலும் என்னைக் கதை கேட்டார்கள். பின்னர் ஏதோ சிங்களத்தில் எழுதிவிட்டு என்னிடம் கையெழுத்தை வேண்டினார்கள். என்ன எழுதி என்னிடம் கையெழுத்தை வேண்டினார்களோ தெரியாது.

அதனைவிட செஞ்சிலுவைச் சங்கத்திலும், காணாமல் போனோர் தொடர்பான விசாரணைக் குழுக்களிலும் முறைப்பாடுகளை மேற்கொண்டிருக்கிறேன். அதற்குரிய முறைப்பாட்டுப் பிரதிகளும் என்னிடம் உள்ளன.

என்ரை கணவர் காணாமல் போய் பன்னிரண்டு வருடங்களாகியும் என்ரை கணவர் எங்கே இருக்கிறார் என்ற எந்தத் தகவலும் இல்லை. இப்போ கணவருக்கு 65 வயதாகி விட்டது. வயது போன நேரத்திலையும் தனியா எங்கே கஸ்ரப்படுறாரோ தெரியலை.

முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் மேற்கொள்ளப்படும் போராட்டங்கள் என்றாலும் சரி, முல்லைத்தீவுச் சங்கத்தினால் வேறு மாவட்டங்களில் ஒழுங்குபடுத்தப்படும் போராட்டங்களுக்கும் தவறாது செல்கின்றனான்.

ஐ.நாவாக இருந்தாலும், யாராக இருந்தாலும் எனது கணவரைக் கண்டுபிடித்துத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். நான் செத்தால் என்னுடைய மனுசனை தேடுவதற்கோ, போராட்டத்திற்குச் சென்று போராடவோ யாரும் இல்லை.

கணவனை எங்கே கொண்டு போனாங்கள், என்ன செய்தாங்கள் என்று தெரியாது. ஆனால் இன்னும் கணவன் இல்லை என்று முடிவெடுக்கவில்லை. என்றோ ஒருநாள் வருவார் என்று எண்ணியபடி எந்த நேரமும் கணவனுடைய சிந்தனையில் வாழ்ந்து வருகின்றேன். என்னுடைய உயிர் போகும் வரைக்கும் கணவனை மறக்காமல் தேடிக்கொண்டே இருப்பேன்.

இந்த அம்மாவைப் போன்று காணாமல் போனவர்களின் உறவினர்கள் இப்படி எத்தனை பேர் இன்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். இராணுவத்தினரால் தம் காணாமல் போன, கடத்தப்பட்ட, கையளிக்கப்பட்ட உறவுகள் இருக்கிறார்களா இல்லையா எனத்  தெரியாது தம் உறவுகள் மீண்டும் தம்மிடம் வந்துவிட மாட்டார்களா என்ற ஏக்கத்துடன் வடக்கிலும் சரி, கிழக்கிலும் சரி எம் தமிழ்பேசும் உறவுகள் கொட்டும் மழையிலும் தம் நலன் பாராது தம்  சொந்தங்களை மீட்டெடுக்கப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களுக்கான நீதி கிடைக்குமா?  அல்லது இவர்களின் இறுதிக் காலம் வரை வீதியில் தான் போராட வேண்டுமா?

ilakku Weekly Epaper 155 November 07 2021 Ad “என்னுடைய உயிர் போகும் வரைக்கும் கணவனைத் தேடிக்கொண்டே இருப்பேன்” உறவைத் தொலைத்த ஒரு அன்னை - பாலநாதன் சதீஸ்

1 COMMENT

  1. […] “என்னுடைய உயிர் போகும் வரைக்கும் கணவனைத் தேடிக்கொண்டே இருப்பேன்” உறவைத் தொலைத்த ஒரு அன்னை: தம் உறவுகளைக் கடந்த இறுதி யுத்தத்திலே தொலைத்துவிட்டு எங்கே தம் உறவுகள்  […]

Leave a Reply