கண்டி: மண்ணெண்ணெய் வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்தவர் உயிரிழப்பு

வரிசையில் காத்திருந்தவர் உயிரிழப்பு

மண்ணெண்ணெய் வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்தவர் உயிரிழப்பு

கண்டியில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்த ஒருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

மயங்கி வீழ்ந்தவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காவல்துதுறையினர் தெரிவித்துள்ளனர். எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது அவர் உயிரிழந்திருந்ததாக தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

வத்தேகம – உடதலவின்ன பகுதியை சேர்ந்த 71 வயதுடையவர் உயிரிழந்ததாக  தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருள் பற்றாக்குறையினால் பொதுமக்கள் எதிர்நோக்கியுள்ள துன்பம் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. எனினும், நெருக்கடிக்கான தீர்வு இதுவரை பெற்றுக் கொடுக்கப்படவில்லை.

இன்று காலை திருக்கோணமலை பிரதான காவல் நிலையத்திற்கு அண்மையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்கலன்களில் எரிபொருள் வழங்க மறுத்தமை காரணமாக அமைதியின்மை ஏற்பட்டது.

இந்நிலையில், எரிபொருள் வாங்க வந்தவர்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  பின்னர் ஒருவருக்கு 2000 ரூபா வீதம் டீசல் வழங்கப்பட்டதாக  கூறப்படுகின்றது.

அம்பாறை – ஆலையடிவேம்பு பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் அமைதியின்மை நிலவியுள்ளது.

கம்பளை – கண்டி பிரதான வீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று அதிகாலை முதல் மக்கள் எரிபொருளுக்காக காத்திருந்தனர். யாழ்ப்பாணம் – சிறுபிட்டி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய்க்காக மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.

Tamil News