இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ளவேண்டும்-கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

“இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ளவேண்டும்“  என தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அமெரிக்கத்தூதுவருடன் கலந்துரையாடிய போது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்த்தேசிய கட்சிகளின் தலைவர்களுக்கும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்குக்கும் இடையிலான சந்திப்பொன்று தூதுவரின் அழைப்பின்பேரில் நேற்று திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்கு தூதுவர் இல்லத்தில் நடைபெற்றது.

சுமார் இருமணிநேரம் வரை நீடித்த இச்சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான புளொட் சார்பில் அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தனும், ரெலோ சார்பில் அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் சார்பில் கட்சித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரனும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் கலந்துகொண்டிருந்தனர்.

இச்சந்திப்பின் தொடக்கத்தில் கருத்து வெளியிட்ட அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், இவ்வார இறுதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை முக்கியத்துவம் வாய்ந்ததாக நோக்கப்படும் பின்னணியில், மேலோட்டமாகப் பார்க்கையில் அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் வேறுபட்ட நிலைப்பாடுகளைக் கொண்டிருப்பதுபோல் தெரிவதாகவும், எனவே இதுபற்றிக் கேட்டறிவதற்காகவே அனைத்துத்தரப்பினருக்கும் ஒருமித்து  அழைப்புவிடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அவருக்குப் பதிலளித்த தமிழ்த்தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள், தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்த தமது நிலைப்பாடுகள் தொடர்பில் விளக்கமளித்துள்ளனர். அதன்படி முதலில் கருத்து வெளியிட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ‘தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்படும் விடயங்களையும், தேர்தல் பிரசாரத்தின்போது தமிழ்மக்களிடம் கூறப்படும் விடயங்களையும் அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில் ஏனைய கட்சிகளின் நிலைப்பாடுகளுக்கும் எமது நிலைப்பாட்டுக்கும் இடையில் பெருமளவான வித்தியாசங்கள் ஏதுமில்லை.

ஆனால் தேர்தல் முடிவடைந்த பின்னர் அவர்களது நிலைப்பாட்டுக்கும் எமது நிலைப்பாட்டுக்கும் இடையில் பாரிய வித்தியாசம் காணப்படுகின்றது. அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தம் என்பது ஒற்றையாட்சிக்கட்டமைப்பின் கீழுள்ள ஒரு விடயம்.

எனவே, அதனை அடிப்படையாகக்கொண்டு தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வைக் கோரவோ அல்லது பேச்சுவார்த்தை நடத்தவோ முடியாது. எனவே இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாக இருக்கின்றது’ என்று விளக்கமளித்துள்ளார்.