முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டமை மற்றும் ஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்டமை தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் உட்பட சமூக செயற்பாட்டாளர்கள் சிலரால் வவுனியாவில் அமைந்துள்ள மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்தியக் காரியாலயத்தில் இந்த முறைப்பாடு கையளிக்கப்பட்டுள்ளது.
குருந்தூர்மலையில் கடந்த 14ஆம் திகதி வழிபாடுகளை மேற்கொள்ள சென்ற தமிழ் மக்களுக்கு காவல்துறை உத்தியோகத்தர் உள்ளிட்ட சிலரால் இடையூறு விளைவிக்கப்பட்டதாகவும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த நாளில் குருந்தூர்மலையில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர் ஒருவரும் காவல்துறையினரால் அச்சுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், குறித்த காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு எதிராகவே மனித உரிமை ஆணைக்குழுவில் இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.