இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளுக்கு சிறந்த எதிர்காலம் உருவாக்கப்படும் : ஜனாதிபதி உறுதி

“இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் எமது நாட்டு பிரஜைகள். அவர்களுக்கும் சிறந்த எதிர்காலம் உண்டு. அவர்களுக்கு சிறந்த வாழ்க்கையை வழங்கும் பொறுப்பை அரசாங்கம் என்ற அடிப்படையில் நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம்” என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டு பண்டாரவளை பூனாகலை கபரகலை மலை நிலச்சரிவினால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத்திட்டம் இன்று (28) மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

“யுத்தகாலத்தில் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தவர்கள் தாய்நாட்டுக்கு திரும்பும் போது கடந்த காலங்களில் பல சிக்கல்களுக்கு முகங்கொடுத்தார்கள்.

அந்த சகல தடைகளையும் நீக்குவதற்கு அமைச்சரவை ஊடாக தீர்மானம் எடுத்துள்ளேன்.

அதற்குரிய ஒத்துழைப்புக்களை வழங்க குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் சகல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

“இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் எமது நாட்டுப் பிரஜைகள். அவர்களுக்கும் சிறந்த எதிர்காலம் உண்டு. இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் சிறந்த வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் வழங்க வேண்டும்.

அவர்களுக்கு சிறந்த வாழ்க்கையை வழங்கும் பொறுப்பை அரசாங்கம் என்ற அடிப்படையில் நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம்” என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.