மயிலத்தமடுவில் மேய்ச்சலுக்காகச் சென்ற பசுக்கள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் திரும்பியுள்ளதாக பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
காயத்துக்குள்ளாகிய பசுக்கள் நேற்றிரவு(14) மேய்ச்சலுக்காக சென்ற நிலையில் இன்று (15) காயங்களுடன் திரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினை மிக நீண்டகாலமாக நிரந்தரத் தீர்வின்றி தொடர்கதையாகவே நகர்ந்து கொண்டிருக்கின்றது.
இதனால் அப்பகுதியில் தொடர்ச்சியாக கால்நடைகளை வளர்த்து வரும் பண்ணையாளர்கள் மிகுந்த சிரமத்தின் மத்தியிலும், அச்சத்தின் மத்தியிலும் அவர்களது வாழ்வாதாரமாகவுள்ள கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.
கடந்த 3 தினங்களுக்கு முன்னர் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவினர், சட்டத்தரணிகள், மனித உரிமை ஆர்வல்கள், அரச உயரதிகாரிகள் உள்ளிட்ட பலரும் அப்பகுதிக்கு நேரடி விஜயம் செய்து நிலைமையை பார்வையிட்டனர்.
பண்ணையாளர்களிடமும் நிலைமை குறித்து கேட்டறிந்திருந்தனர்.
இந்நிலையில் நேற்றிரவு (14) மேய்ச்சலுக்காகச் சென்ற பசுக்கள் இன்று (15) காலை துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் திரும்பி வந்துள்ளதாக பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே அதிகாரிகள் என்னதான் செய்தாலும், எவ்வாறுதான் கதைத்தாலும், தமது மேய்ச்சல்தரைப் பகுதியில் அத்துமீறி வெளி மாவட்டங்களிலிருந்து வந்து சட்டவிரோதமான முறையில் நிலப்பகுதியை ஆக்கிரமிப்புச் செய்து பயிற்செய்கையில் ஈடுபடுவதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
“நாங்கள் வாழ்வதா? எமது கால்நடைவளர்ப்பு வாழ்வாதாரத்தை மேற்கொள்வதா? என தெரியாதுள்ளதாக” அப்பகுதி கால்நடை வளர்ப்பாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதேவேளை இந்த விடயம் தொடர்பில் மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் அண்மையில் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.



