மகிந்த ராஜபக்ஸ மகனின் திருமணத்தில் கலந்து கொண்ட இந்திய சர்ச்சைக்குரிய அரசியல்வாதி

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஸவின் மூத்த மகனான நாமல் திஸநாயக்கவின் திருமணம் கடந்த 12ஆம் திகதி நடைபெற்றது. இவரின் திருமண வரவேற்பில், பாஜகவின் மூத்த தலைவரும், இந்தியாவில் சர்ச்சைகளை ஏற்படுத்தும் அரசியல்வாதியுமான சுப்பிரமணிய சுவாமி கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்வில் இவர் கலந்து கொண்ட புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

நாமலின் திருமணம் கொழும்பு வீரகெட்டியாவில் நடைபெற்றது. ராஜபக்ஸவின் அரசியல் வாரிசாகக் கருதப்படும் நாமலுக்கும் பிரபல தொழிலதிபர் மகளுக்கும் கடந்த 12ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

இத்திருமணத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட யாருக்கும் ராஜபக்ஸ அழைப்பு விடுக்கவில்லை. தனது நெருங்கிய சொந்தங்களை மட்டும் அழைத்து திருமண நிகழ்வை நடத்தியிருந்தார்.

இதனையடுத்து, பிரமாண்டமான திருமண வரவேற்பு நிகழ்வு நடத்தப்பட்டது. இதில் கலந்து கொள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அத்துடன் தனது நண்பரான பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமிக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து கொழும்பு சென்ற சுப்பிரமணியசுவாமி ராஜபக்ஸவின் மகனின் திருமண வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டார்.

சுப்பிரமணிய சுவாமி இந்தியாவில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் தமிழ் மக்களுக்கு எதிராகவும் பல சர்ச்சைகளைக் கிளப்பி அவர்களை இக்கட்டான நிலைக்கு தள்ளுவதில் முன்னிற்பவராவார்.

1991இல் நடைபெற்ற ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக ஈழத் தமிழர்களை விசாரணைக்கு உட்படுத்தவும் அவர்கள் மீது அரசின் சந்தேகத்தைக் கூட்டவும் இவரின் பேச்சே காரணமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அன்று தொட்டு இன்று வரை ஈழத்தமிழரின் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், அதில் இவர் மூக்கை நுழைத்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றார்.

நாமலின் திருமண நிகழ்வில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.