மீண்டும் தாயகம் திரும்பும் தமிழர்கள் ஐ.நா விடம் உதவி கோருகின்றனர்

இந்தியாவில் அகதி முகாம்களில் வாழ்கின்ற இலங்கைத் தமிழர்கள் 146பேர் தாயகம் திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்து மனு கையளித்துள்ளனர் என இந்திய ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இலங்கையில் உள்நாட்டுப் போர் தொடங்கிய கால கட்டத்திலிருந்தே தமிழகத்திற்கு அகதிகளாக இலங்கைத் தமிழர்கள் சென்று கொண்டிருந்தனர்.

இந்நிலையில், போர் நிறைவடைந்து 10 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக சட்டவிரோதமாக இலங்கைக்குத் திரும்பி வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை மேற்குறித்த 146 பேரும் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகளிடமே தாங்கள் தாய் நாட்டிற்கு திரும்புவதற்கான விருப்பு மனுவை கையளித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் இடம்பெற்ற யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்ட பின்னரும் இராமேஸ்வரத்திற்கு செல்லும் அகதிகளின் எண்ணிக்கை குறையவில்லை. இந்நிலையில் ஐ.நா.சபையின் அகதிகள் அமைப்பின் அதிகாரிகள் இராமேஸ்வரம் அருகேயுள்ள மண்டபம் அகதி முகாமில் நேற்று ஆய்வு செய்தனர்.

இதன் போதே 45 குடும்பத்தைச் சேர்ந்த 146பேர் இலங்கைக்கு வருவதற்கு விருப்பம் தெரிவித்து ஐ.நா. சபை அதிகாரிகளிடம் விருப்பு மனு கையளித்துள்ளனர்.

குறித்த அகதி முகாமில் தற்போது 526 குடும்பங்களில் மொத்தம் 1,598 பேர் வசித்து வருவதாகவும் ஐ.நா.சபை புள்ளி விபரம் தெரிவிப்பதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.