‘அனைவரையும் இணைந்து செயல்பட அழைக்கிறேன்’-பாராளுமன்றத்தில் ரணில் உரை

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றினார்.

அதில்,“அனைவரையும் இணைந்து செயல்பட அழைக்கிறேன். சர்வகட்சி அரசாங்கம் தொடர்பாக நான் கலந்துரையாடல்களை தொடங்கி இருக்கிறேன். சர்வகட்சி அரசாங்கம் என்பது ஒரு கட்சியாக செயல்படுவது அல்ல.

அனைவரும் இணைந்து செயல்படுகின்ற ஒரு அரசாங்கம் ஆகும். இதன் மூலம் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும். சர்வகட்சி அரசாங்கத்தின் அவசியத்தை நான் மீண்டும் மீண்டும் நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன. மேலும் பிரச்சினைகள் வெகு விரைவில் தீர்க்கப்படும் அதேவேளை எமக்கு இந்தியா வழங்கிய உதவிக்கு நாம் நன்றி செலுத்துகிறோம். இன்று எரிபொருள் எமக்கு பெரும் பிரச்சினையாக இருக்கிறது. அதனை தீர்ப்பதற்றக்காக நாம் நடவடிக்கைகளை முன்னெடுக்கிறோம்.

இலங்கையை கட்டியெழுப்ப நீண்ட கால தீர்வுத் திட்டம் தேவைப்படுகிறது. பொருளாதாரத்தை ஸ்திர நிலைக்கு கொண்டு வர வேண்டும். எதிர்காலத்தில் நாம் செய்ய இருக்கும் காரியங்களை இனிவரும் காலங்களில் நாடாளுமன்றத்தில் அறிவிப்போம்.

IMF உதவிகளை பெற்று இம்மாதம் முடிவதற்கு முதல் உதவிகளை பெற்றுகொள்வோம். இலங்கையின் வரலாற்றின் படி மீண்டும் அனைத்து நாடுகளுக்கும் அரிசி ஏற்றுமதியாளராக நாம் மாறுவோம். பொருளாதார பிரச்சினைகளினால் வியாபாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் மக்களுக்கு வேலைவாய்ப்புக்கள் இல்லாமல் போயுள்ளன.

ரூபாவின் பெறுமதியும் விழுந்துள்ளது. இதேவேளை சுற்றுலாப்பயணிகள் இந்த மாதத்தில் இலங்கைக்கு வருவார்கள். மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்படுவதுடன், அரசாங்க வீடுகளில் வாழ்பவர்களுக்கு வீட்டிற்கான உறுதிப்பத்திரம் வழங்கப்படும்.

முன்னைய அரசாங்கம் திருகோணமலை எரிபொருள் சேமிப்பு கிடங்குகளை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய முற்பட்டபோது பலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவற்றை இந்தியாவுக்கு விற்பனை செய்வதாக தெரிவித்து அந்த திட்டத்தை கைவிடுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர்.

அன்று அந்த அபிவிருத்தி நடவடிக்கை இடம்பெற்றிருக்குமானால் இன்று எரிபொருள் வரிசைகள் இருந்திருக்காது.

மேலும், சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவைகளை ஆரம்பிக்கும் போதும் அப்போதைய எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை இட்டன. இதனூடாக பல மரணங்கள் நிகழும் எனவும் குறிப்பிட்டனர். ஆனால் நாங்கள் அதை தைரியமாக முன்னெடுத்தோம். அதனூடாக இன்று பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

எனவே, நல்ல திட்டங்கள் முன்னெடுக்கும் போது அவற்றை வரவேற்க வேண்டியது நம் அனைவரினதும் பொறுப்பாகும்.“ எனக் குறிப்பிட்டார்.