யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு -ரிசாத் பதியுதீன்

யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு அமைக்க அனுமதிக்க வேண்டுமென அமைச்சர் ரிசாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார்.

எனினும், அது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

யாழ் மாவட்ட அபிவிருத்தி திட்டங்கள் குறித்த மீளாய்வுக்குழு கூட்டம் நேற்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இதில் கருத்து தெரிவித்த ரிசாத் பதியுதீன், யாழ்ப்பாணத்தில் 1,500 குடும்பங்கள் மீள்குடியேறியுள்ள போதும், அவர்களில் 200 குடும்பங்களிற்கு மட்டுமே வீட்டுத் திட்டம் வழங்கப்பட்டுள்ளதாகவும், காணி உள்ளவர்களிற்கு காணிகளில் வீடமைப்பதுடன், காணியற்றவர்களிற்கு அடுக்கு மாடி வீட்டுத்திட்டத்தை அமைக்க வேண்டுமென குறிப்பிட்டார்.

இதன்போது மாவட்ட செயலக அதிகாரிகள் கருத்து தெரிவித்தபோது, 1,500 பேர் மீளக்குடியமர பதிவு மேற்கொண்டிருந்தபோதும், அவர்களில் 507 பேர் மட்டுமே மீளக்குடியமர்ந்ததாக தெரிவித்தனர்.

அவர்களில் 207 பேருக்கு வீடுகள் வழங்கப்பட்டதாகவும், எஞ்சியவர்களிற்கு காணியில்லாததால் வீடு வழங்கவில்லையென்றும் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த ரிசாத், யாழ்ப்பாணம் பொம்மைவெளியில் ஏழரை ஏக்கர் நிலத்தை முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் கொள்வனவு செய்து, முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்திற்காக வழங்கியுள்ளதாகவும், அதில் அடுக்குமாடி குடியிருப்பை அமைக்கலாம் என்றார். அதற்கு தனக்கு, நீண்டகாலமாக இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்ற அமைச்சே பணம் ஒதுக்கும் என்றும் தெரிவித்தார்.

எனினும், யாழ் முதல்வர் அதை சூசகமாக ஆட்சேபித்தார். அதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபைதான அனுமதி வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டதுடன், யாழ் நகர மையத்தில் சுற்றுலா தேவைகளிற்காக நிலம் தேவையென்றார்.

இதேவேளை, நேற்று இரவு அமைச்சர் ரிசாத் பதியுதீன் தனது முகப்புத்தகத்தில், அடுக்கு மாடி குடியிருப்பிற்கு அபிவிருத்தி கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

கடந்த வருடம் பிரதமர் ரணில் யாழ் வந்த சமயத்தில், இந்த வீட்டு திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அப்போது, ரிசாத் பதியுதீனுடன் முஸ்லிம் மக்களை சந்தித்த யாழ் முதல்வர் ஆர்னல்ட், அதில் அடுக்குமாடி குடியிருப்பு அமைக்கப்படும் என உறுதியளித்தார்.

பொம்மைவெளியில் கொள்வனவு செய்யப்பட்ட காணி, ரிசாத் பதியுதீனின் பின்னணியில் கொள்வனவு செய்யப்பட்டதாக விமர்சனம் எழுந்தது. அந்த காணி, உறுதியில் சிக்கலுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வண்ணார் பண்ணை சிவன் கோவிலுக்கும் அந்த காணி உரியது, வேறு சிலருக்கும் காணியில் பங்குண்டு என தெரிவித்து அண்மையில் அந்த காணிக்குள் அத்துமீறி நுழைந்தனர்.

இந்த நடவடிக்கைக்கு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.