கூட்டமைப்பு காலாவதியாகிவிட்டது – தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசன் பேட்டி

யுத்தத்திற்குப் பின்னரான நிலைமாறு கால அரசியலில் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்கினேஸ்வரன் தமிழ் மக்கள் மத்தியில் தவிர்க்க முடியாத ஒரு தலைவராக இருப்பார் என்று தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரும் வடமாகாண முன்னாள் அமைச்சருமான பொ.ஐங்கரநேசன் இலக்கு மின்னிதழுக்கு வழங்கிய பேட்டியில்; இவ்வாறு தெரிவித்தார். பேட்டியின் இறுதிப்பகுதி வருமாறு,

கேள்வி:- விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் யுத்தத்தின் ஈற்றில் சரணடைய வில்லை என்று இராணுவத்தினர் கூறுகின்றமையை எப்படிப் பார்க்கின்றீர்கள்?

பதில்:- பொறுப்புக் கூறவேண்டிய அரசாங்கத் தரப்பே காணாமலாக்கப் பட்டவர்கள் என்று எவருமே இல்லை, அவர்கள் எல்லோரும் வெளிநாடுகளுக்குப் போய்விட்டவர்கள் என்று பொய்சொல்லும்போது, யுத்த விதிகளை மீறி யுத்தத்தின்போது பிடிபட்டவர்களையும், யுத்தத்தின் பின்பு சரணடைந்தவர்களையும் கொன்றொழித்த இராணுவம் உண்மையைப் பேசும் என்று நாம் எவ்வாறு எதிர்பார்க்கமுடியும்? தமது கணவன்மார்களையும், பிள்ளைகளையும் படையினரிடம் ஒப்படைத்த அவர்களது உறவினர்கள் இப்போதும் உயிருள்ள சாட்சியங்களாக இந்த மண்ணில்தான் இருக்கின்றார்கள்.

கேள்வி:- யுத்தத்தின்போது சரணடைந்து காணாமல்போனவர்கள் உட்பட காணாமல் ஆக்கப்பட்டவர்கள்  குறித்து அடுத்தகட்டமாக எவ்விதமான நடவடிக்கைகளை  எடுக்க முடியும்?

பதில்:- யுத்தம் முடிந்து பத்து வருடங்களாகக் காணாமல் ஆக்கப்பட்டவர்களைத்தேடி அவர்களின் உறவினர்கள் கண்ணீரும் கம்பலையுமாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். உணவுத்தவிர்ப்புப் போராட்டம் உட்பட எல்லாவிதமான போராட்டங்களையும் நிகழ்த்திப் பார்த்துவிட்டார்கள். எல்லாத்தரப்பு அரசியல்வாதிகளின் கால்களில்கூட விழுந்து மன்றாடியும் பார்த்துவிட்டார்கள. இதுவரைக்கும்  பொறுப்பான பதில் எவர்களிடமிருந்தும் கிடைக்கவில்லை. மன்னிப்போம் மறப்போம் என்று அரசு அசட்டை செய்கிறது. இனி இவர்களால் முன்னெடுப்பதற்கு வேறு போராட்டங்கள் எவையும் இல்லை. பார்ப்பதற்கு வேறு அரசியல்வாதிகளும் இல்லை. காணாமல் போனோருக்கான அலுவலகமும் தீர்வைப் பெற்றுத் தருவதாக இல்லை.

30/1 தீர்மானத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்து, உண்மையை வெளிக் கொணர வைத்து அரசாங்கத்திடம் இருந்து உரிய பரிகாரத்தைப் பெற்றுக்கொடுக்க எமது தலைவர்கள் தவறிவிட்டார்கள். தென்னிலங் கைப் பாராளுமன்ற அரசியல் நெருக்கடிகளின்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்குத் தமிழ் இனம்சார்ந்து எவ்விதபேரத்தையும் முன்வைக்காமல் ஆதரவளித்த எமது தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறைந்தபட்சம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர் பாகவும் சிறையில் வாடுகின்ற அரசியல் கைதிகள் தொடர் பாகவும் பேரம் பேசியிருக்க முடியும். ஆனால் இவர்கள் அடுத்த தேர்தலில் தாங்கள் வெல்ல வேண்டும் என்பதில் மாத்திரம் குறியாக இருந்து கம்பெர லியாவை மாத்திரம் வாங்கி வந்திருக்கிறார்கள்.

கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான அணியன்று அவசியம் என்பது குறித்து தங்களின் நிலைப்பாடு என்ன?

IMG 0993 copy கூட்டமைப்பு காலாவதியாகிவிட்டது - தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசன் பேட்டிபதில்:- தமிழ்த் தேசிய கூட்டமைப்பு காலாவதியாகிவிட்டது. யுத்ததிற்குப் பின்னர்; தமிழ் இனம் சார்ந்து அரசியலை முன்னெடுக்கத் தவறிவிட்டது. விடுதலை அரசியல்  தேர்தல் அரசியல் போன்று இன்னகாலத்துக்குள் முடியுமென்று தீர்மானிக்க முடியாதது. இது தொடர் அஞ்சலோட்டம் போன்றது. முள்ளிவாய்க்காலில் எமது தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆயுத அலகு தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், அஞ்சலோட்டம் போன்று சனநாயக ரீதியாகப் போராட்டத்தை அடுத்தகட்டத்துக்கு முன்னெடுத்திருக்கவேண்டிய கடப்பாடு தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு இருந்தது. விடுதலைப் புலிகளே தங்களை உருவாக்கினார்கள் என்று சொல்லிக்கொள்ளும் கூட்டமைப்பு அந்தப் பணியிலிருந்து விலகிச்சென்றது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் விடுதலைப்புலிகள் இழைத்திருக்கக் கூடிய தவறுகளை அரசாங்கத்தின் போர்க் குற்றங்களுடன் சமப்படுத்தி சர்வதேச அரங்கில் அரசாங்கத்தைப் பிணையெடுத்தார்கள். அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதல் விடுதலைப்புலிகள் உட்பட உலகெங்கிலும் உள்ள தேசிய இனங்களின் விடுதலைக்காக போராடுகின்ற  அமைப்புகளுக்கு பாதகமாக அமைந்தது. அதே போன்று சித்திரையில் இடம்பெற்ற இஸ்லாமியப் பயங்கரவாதிகளின் ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தை சனநாயக ரீதியில் முன்னெடுப்பதற்குத் தடங்கல்களை ஏற்படுத்தியுள்ளது.

2009 இற்கு பின்னர், பத்து வருட காலத்துக்குத் தேவையற்ற விதத்தில் காலநீடிப்பை வழங்கித் தமிழ் மக்களுடைய இனப் பிரச்சினைக்கான தீர்வைப் பின்தள்ளியதுதான் தமிழ்க் கூட்டமைப்பு செய்த ஒரே சாதனை. மேற்குலகின் நலன்களுக்காக சனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா ஆகியோரின் வலிந்து ஓட்டுப் போடப்பட்ட  ஆட்சி அதிக காலம் நீடிக்காது என்பது சாதாரண பாமரமக்களுக்கும் தெரியும்.ஆனால், இவர்கள்  எந்தவித நிபந்தனையும் விதிக்காது ஆதரவு வழங்கி வந்துள்ளனர்.  கடைசியில், அரசாங்கம் நினைப்பது போன்றே அபிவிருத்தியினால் தமிழ் மக்களின் இனப்பிரச்சினையைத் தீர்த்து வைக்கலாம். என்ற நிலைக்குக் கீழ் இறங்கி கம்பெரலியாத் திட்டத்துடன் ஒழுங்கை ஒழுங்கையாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். இனப்பிரச்சினை தோற்றம் பெற்றதற்கான அரசியற் காரணிகள் இன்னமும் தீர்க்கப்படாமல் நீடித்திருக்கும் நிலையில் யுத்தத்திற்குப் பின்னரான தமிழ் அரசியலை முன்னெடுப்பதற்குத் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கான மாற்று ஒன்று அவசியமாகும்.

கேள்வி:- யுத்தத்திற்கு பின்னரான தமிழ் அரசியலை முன்னெடுக்க வடக்கின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் பொருத் தமானவர்  என்று நீங்கள் கருதுகின்றீர்களா?

பதில்:- விக்னேஸ்வரன் அவர்கள் அவரது அரசியல் எதிரிகளால் அரசியல் தெரியாதவர், நிர்வாகம் தெரியாதவர், மாகாண சபையின் ஐந்து வருட பதவிக்காலத்தையும் வீணாக்கியவர்; என்று கடுமையாக விமர்சிக்கப் படுகிறார். பொதுமக்களால் நேர்மையானவர், உண்மைகளை இடித்து ரைப்பவர், தமிழினம் சார்ந்து ஆணித்தரமாகப் பேசுபவர் என்று கருதப் படுகிறார். நான் ஐந்து வருடகாலம் மாகாணச பையின் உறுப்பினராக இருந்தவன் என்ற வகையில் இவர் எவ்வாறு அவரது பணிகளைச் செய்யவிடாது மாகாண சபைக்குரிய அதிகாரங்களைக் காட்டி அரசாங்கத் தரப்பாலும், அரசியல் காழ்ப்பால் உட்கட்சித் தரப்பாலும் தடுக்கப்பட்டார் என்பதை நான் நன்கு அறிவேன்.

wick and kajan 1 கூட்டமைப்பு காலாவதியாகிவிட்டது - தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசன் பேட்டிஅவர் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பாகத் தீவிரமான கருத்துகளை தெரிவித்து வந்தமையும், மாகாணசபையில்  தமிழின அழிப்புப் பிரேரணையை நிறைவேற்றியமையும், எங்கே இவர் மக்கள் மத்தியில் தங்களை மிஞ்சிப் பெரும் செல்வாக்கு பெற்று உயர்ந்து விடுவாரோ என்று தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் எழுந்த அச்சமும் இவர் பணிகளுக்கு இடையூறாக அமைந்தன. என்னைப் பொறுத்தவரையில் இவர் யுத்தத்திற்குப் பின்னரான நிலைமாறு கால அரசியலில் தமிழ் மக்கள் மத்தியில் தவிர்க்க முடியாத ஒரு தலைவராக இருப்பார்.

நேர்காணலின் முதலாவது பகுதியை வாசிக்க பின்வரும் இணைப்பை அழுத்தவும்:

எமது தேசிய சூழலை நல்லாட்சி செய்யும் அதிகாரம் எங்களிடமே இருக்க வேண்டும்(நேர்காணல் -1) – ஐங்கரநேசன்