2020ம் ஆண்டு சனாதிபதி தேர்தல் – இந்தச் சூழ்நிலையை தமிழர்கள் எவ்வாறு தமக்குச் சாதகமாக்கலாம்? – அரசியல் ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன்

2020ம் ஆண்டு இலங்கை சனாதிபதி தேர்தலில் யார் யார் வேட்பாளர்களாகப் போட்டியிட உள்ளனர் என்கிற விடயம் இன்று அனைத்துலக பிரச்சினையாக உள்ளது என இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரா குறிப்பிட்டுள்ளார். இதனால் பொது எதிரணியின் சனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்சவை களமிறக்கினால் கட்சிக்குள் பிளவு ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் முன்னாள் அமைச்சரும் சட்டநிபுணரும் பொதுசன முன்னணியின் தவிசாளருமான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் கோத்தபாயவின் மேல் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும் இதுவரை குற்றவாளியாகக் காணப்படாததினாலும் கோத்தபாய சுயமாகவே அமெரிக்கப் பிரகாவுரிமையையும் நீக்கியுள்ளதாலும் அவர் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்க எந்தத் தடையுமில்லை என வீரகேசரிக்கு அளித்த செவ்வியில் கூறியுள்ளார்.

கோத்தபாய அமெரிக்க பிரசையாக இருந்த காலத்திலேயே இலங்கைப் பிரசையாகவும் நாட்டிலிருந்து பாரிய சேவை ஆற்றியுள்ளார் எனப் பாராட்டியும் உள்ளார்.சனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றவுடன் பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தல் நடத்தவுள்ளதாகவும் பேராசிரியர் பீரிஸ் கூறியுள்ளார். தற்போதைய அரசாங்கம் முன் எடுத்த எந்த விடயத்தையும் தாம் கவனத்தில் எடுக்கப் போவதில்லை எனவும் புதிய சிந்தனை, புதிய ஆரம்பம் என்பதற்காகவே மக்கள் தமக்கு ஆணை தருகிறார்கள் எனவும் பேராசிரியர் பீரிஸ் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

நிறைவேற்று அதிகார முறைமையை ஒழிப்பதா அல்லது மறுசீரமைவுகளைச் செய்வதா என்பதும்  மக்களின் தீர்மானத்திற்கு அமைவாகவே தாங்கள் மேற்கொள்வார்கள் எனக் கூறிய பீரிஸ் அவர்கள் “மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் மனித உரிமை மீறல்கள் போர்க்குற்றச் சாட்டுக்கள் இடம்பெற்றமைக்கான சான்றுகள் வெளிப்படுத்தப்பட்டு ஜெனிவா தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் மீண்டும் ராஜபக்ச தரப்பினர் ஆட்சிக்கு வந்தால் நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேருமல்லவா? என்று கேட்கப்பட்ட  கேள்விக்கு “ இவ்வாறான முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதும் இதுவரையில் எவையும் நிரூபிக்கப்படவில்லை. மனித உரிமைகளின் பெயரில் செயற்படும் நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் கிடைக்கிறது.

உதாரணமாக யஸ்மின் சுக்கா முன்னெடுக்கும் செயற்திட்டத்திற்கு பெரும் தொகை நிதி கிடைக்கிறது. இதனால் அந்தத் திட்டத்தை உயிர்ப்புடன் வைத்து தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டியுள்ளது. அதற்காக அவர்கள் பல விடயங்களைச் செய்வார்கள்” எனப்பதில் அளித்துள்ளமை சனாதிபதி தேர்தலின் பின்னர் எந்த அளவுக்கு மனித உரிமை மீறல்கள் போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்து பொதுசன ஐக்கிய முன்னணி அலட்சியமாக நடந்து கொள்வார்கள் என்பதற்கு எதிர்வு கூறியுள்ளது.

மௌபிம ஜனதா கட்சி, இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி, தமிழ் ஐக்கிய சுதந்திர முன்னணி, ஈழவர் ஜனநாயக முன்னணி, முஸ்லிம் உலமாகட்சி, லிபரல் கட்சி, நவசிஹல உறுமய, ஜனநாயக தேசிய ஒன்றியம், ஐக்கிய லங்கா மகாகட்சி, பூமி புத்ரா கட்சி ஆகிய பத்துக்கட்சிகள் பொதுசன பெரமுனவில் இணைந்துள்ளன. ஆகஸ்ட் 11இல் முன்னாள் சனாதிபதியும் இந்நாள் எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ச பொதுசன முன்னணியின் உத்தியோக பூர்வமான தலைமையை ஏற்றுக் கொண்டு சனாதிபதி தேர்தலுக்கான பொதுசன முன்னணியின் சனாதிபதி வேட்பாளரையும் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடவே ஐக்கிய தேசியக்கட்சியும் மற்றைய சிங்களக் கட்சிகளும் தேர்தல் இணைப்புக்களை ஏற்படுத்துவதிலும் வெற்றி பெறக் கூடிய வேட்பாளர்களை இனங்காண்பதிலும் படுவேகமாக ஈடுபட்டுள்ளன.

Karu Ranil Sajith 2020ம் ஆண்டு சனாதிபதி தேர்தல் - இந்தச் சூழ்நிலையை தமிழர்கள் எவ்வாறு தமக்குச் சாதகமாக்கலாம்? - அரசியல் ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன்ஆயினும் எல்லாச் சிங்களக் கட்சிகளுமே பொதுத்தன்மையாக 2020 இலங்கை சனாதிபதி தேர்தல் களத்தை வழமை போல் சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு பேரெழுச்சி கொடுக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளன. அதே வேனை சனாதிபதியின் பதவிக்காலத்தை நீடித்து சிங்களபௌத்த பேரினவாதத்தை மேலும் பலப்படுத்திய பின்னர் கூட்டாகத் தேர்தல்களம் காணலாமென்ற முயற்சிகளும் தொடர்ந்து நடைபெறுகின்றன.

சிங்கள பௌத்த பேரினவாதிகள்  1949 இல் இலங்கையின் பொருளாதாரத்தை உறுதிப்படுத்தி உலகச் சந்தையில் இலங்கை என்றொரு நாட்டிற்கு பொருளாதார முக்கியத்துவம் அளித்த மலையகத் தமிழர்களின் குடியுரிமையைப் பறித்து இலங்கைப் பாராளுமன்றத்தில் சட்டவாக்க அதிகாரத்தைத் தமதாக்கக் கூடிய வகையில் பாரா­ளுமன்றச் சிங்களப் பிரதிநிதித்துவத்தைப் பெருக்கிக் கொண்டனர்.  இதனை எதிர்த்து மலையகத் தமிழர்கள் மேற்கொண்ட சனநாயகப் போராட்டங்களை அலட்சியப்படுத்தி தமிழர்களின் சனநாயக வழிப்போராட்டங்களை கவனத்தில் எடுக்காத அரசியல் தந்திரோபாயத்தைத் சிங்கள அரசியலாகவே தொடக்கி வைத்தனர். தொடர்ந்து  1956இல் சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டு வந்து அனைத்துத்  தமிழர்களும் அரசகட்டமைப்புக்குள் தொழில் செய்யும் உரிமையைப் பறித்து அரசின் நிர்வாகத்தைச் சிங்கள மயப்படுத்தினர். இதற்கு எதிராக அமைதிவழியில் தமிழர்கள் தொடங்கிய சனநாயகப் போராட்டங்களை வன்முறைப்படுத்தி நாட்டில் குழப்பநிலையைத் தோற்றுவித்து அதனைப் பயன்படுத்தி 150 தமிழர்களுக்கு மேல் திட்டமிட்ட முறையில் இனஅழிப்புச் செய்துதமிழர்களை இனங்காணக் கூடிய அச்சத்துக்குள்ளாக்கி கிழக்கில் தமிழர்களின் நிலங்களை வன்முறையில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கும் போக்கைத் தொடக்கி வைத்து நில வளமும் நீர் வளமும் கொண்ட தமிழர் தாயகத்தின் கிழக்கு மாகாணத்தை அதிலும் குறிப்பாகத் தமிழர் தாயகத்தின் பெருநிலப்பரப்பான திருக்கோவில் அம்பாறை மாவட்டத்தைச் சிங்களக் குடியிருப்பாக்கி கையகப்படுத்தி  அதன் விரிவாக்கமாகத் தமிழர் தாயகத்தின் முக்கிய துறைமுக நகரமான திருகோணமலை வரை சிங்களக் குடியேற்றங்களை குறுகிய காலத்தில் பல்லாயிரக்கணக்கில் பெருக்கினர்.

இந்தத் தமிழின அழிப்புத் திட்டத்தின் தொடர்ச்சியாக, கொழும்பை மையப்படுத்தி தமிழர்களின் வடக்கு கிழக்குக்கு வெளியே இருந்த வாழ்வாதாரங்களை பறித்தெடுக்கும் நோக்கிலும் தமிழின அழிப்பைத் திட்டமிட்ட முறையில் சிங்கள அரசுக்களின் அரசியல் தந்திரோபாயம் ஆக்கும் போக்கிலும் 1958இல் நடாத்திய பெருமளவிலான தமிழினப்படுகொலைகள் இலங்கைத் தமிழினத்தினை அச்சப்படுத்தி அவர்களின் அரசியல் பணிவைப் பெறும் தந்திரோபாயத்தை இலங்கை அரசுகள் தொடர வைத்தன.

1965ம் ஆண்டு முதல் 1970ம் ஆண்டு வரை தமிழர்களின் உயர்கல்வியை மறுக்கும் அல்லது குறைக்கும் வகையில் பல்கலைக்கழக அனுமதிக்கான தரப்படுத்தல் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு தமிழ் இளம் தலைமுறையினரின் வளர்ச்சிகள் தடுக்கப்பட்டன. இதனை எதிர்த்து சனநாயகவழிகளில் போராடத் தொடங்கிய அரசியல் விழிப்புணர்வு பெற்ற தமிழர்களை காரணமின்றிக் கைது செய்தும் விசாரணையின்றித் தடுத்து வைத்துச் சித்திரவதை செய்தும் காவல்துறையினரை இராணுவத்தினராக மாற்றிப் பகைநாடொன்றில் ஊடுருவி அழிப்பது போல அப்பாவித் தமிழ் இளைஞர்களைக் கொன்றழித்தும் காணாமல் போகச் செய்தும் 1970கள் முதல் 1978 வரை வகைதொகையற்ற மனித அவலங்களை ஏற்படுத்தித் தமிழ் மக்களின் நாளாந்த வாழ்வை திட்டமிட்ட வகையில் முடக்கத் தொடங்கினர். சிங்களம் மட்டும் சட்டத்தினால் பாதிக்கப்பட்ட திரு கோடீஸ்வரன் அவர்கள் சோல்பரி அரசியல் அமைப்பின் மூலம் தமிழர்களின் இறைமையை இலங்கைப் பாராளுமன்ற ஒற்றையாட்சிக்கு உட்படுத்திய பொழுது பிரித்தானிய அரசு வழங்கிய 29(2) அரசியலமைப்புப் பாதுகாப்புக்கு கீழ் பிரித்தானியப் பிரிவிக்கவுன்சிலுக்கு மேன்முறையீடு செய்தார். அதனை ஏற்று பிரித்தானிய அதி உயர் நீதிமன்றமான பிரிவிக் கவுன்சில் சிங்களம் மட்டும் சட்டத்தை இலங்கைப் பாராளுமன்றம் மறுபரிசீலனை செய்யுமாறு பணித்து அவருக்கு அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்ட காலத்திற்கான சம்பளத்துடன் மீளவும் வேலை வழங்குமாறு நீதி வழங்கியது.

61sathyagraha 2020ம் ஆண்டு சனாதிபதி தேர்தல் - இந்தச் சூழ்நிலையை தமிழர்கள் எவ்வாறு தமக்குச் சாதகமாக்கலாம்? - அரசியல் ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன்இதனை ஏற்க மறுத்து சிங்கள பௌத்த பேரினவாதம் தன்னைச் சிறிலங்காக் குடியரசு என தமிழர்களின் பாராளுமன்றப் பிரதிநிதிகள் பங்கேற்காத பாராளுமன்றத்திற்கு புறம்பான அரசியல் நிர்ணய சபை மூலம் 22.05.1972 இல் பிரகடனப்படுத்தி இலங்கைத் தமிழர்கள் மேலான் ஆக்கிரமிப்பு அரசை நிறுவிக் கொண்டது. இவற்றை சனநாயக வழிகளில் எதிர்த்த தமிழ் அரசியல் தலைமையாளரான எஸ்.ஜே. வி செல்வநாயகம் அவர்கள் தனது காங்கேசன்துறைப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை விட்டு விலகி அடையாளக் குடியப்பம் நடாத்துவித்து 1975இல் அதில் ஒன்பதினாயிரத்திற்கும் அதிகமான மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்று பாராளுமன்றத்துக்கு வந்து தமிழர்கள் கால் நூற்றாண்டாக ஒற்றையாட்சிப் பாராளுமன்ற முறைமையில் தாங்கள் பிரித்தானியர்களிடம் இழந்த அரசியல் உரிமைகளை மீளப்பெற எடுத்த முயற்சிகள் முடியாமல் போனமையால் இனி தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானிக்கும் சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்தித் தங்களின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக உலகுக்கு அறிவித்து  தமிழர்களின் உள்ளக சுயநிர்ண உரிமையை வாபஸ்பெற்று தமிழர்களின் வெளியக சுயநிர்ணய உரிமையை உலகுக்கு வெளிப்படுத்தினார்.

நாடற்ற தேசஇனமாக இலங்கைத் தமிழ் மக்கள் மாற்றப்பட்ட நிலையில் சிங்கள அரசாங்கம் தமிழர்களின் தாயகத்தை சனநாயகவழிகளில் ஏற்க மறுத்தால் வேறு எந்த வழிகளிலும் அதனை அடைவோம் என்ற தேர்தல் அறிக்கையுடன்  1977 தேர்தலை தங்கள் தாயகத்தை மீட்டெடுத்து மக்களாட்சியை நிலைப்படுத்துவதற்கான குடியப்பமாகத் தமிழர்கள் அறிவித்து அதில் வெற்றியும் பெற்றனர். இந்த அரசியல் மாற்றங்களை ஆயுதபடைபலம் கொண்டு சிங்களப் பேரினவாத அரசு அழித்தொழித்த காலகட்டத்தில் தமிழ் மக்கள் குறிப்பாக தமிழ் இளம் சமுதாயம் 1970 முதல் 1978 வரை உயிர் உடமைகள் பாதுகாப்புக்காக ஆயுத எதிர்ப்பை வெளிப்படுத்தக் கூடிய மக்கள் போராட்ட இயக்கங்களாக மாறி 1978இல் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினைத் தமிழர்களின் பாதுகாப்புக்கான தலைமை இயக்கமாகக் கொண்டு தமிழர்கள் வாழவேண்டிய வரலாற்றைச் சிங்கள அரசுக்கள் உருவாக்கின.

இந்தச் சூழலில்தான் 1958இல்தொடக்கப்பட்ட தமிழின அழிப்பின் வெள்ளிவிழாவாக 1983இல்  இலங்கையில் சிறிலங்கா அரசின் ஆதரவுடன் சிங்கள பௌத்த பேரினவாதிகள் 2000க்கும் மேற்பட்ட தமிழர்களை இனஅழிப்புக்கு உள்ளாக்கி வடக்கு கிழக்குக்கு வெளியே வாழ்ந்த தமிழர்களின் மேலான இனத்துடைப்பு முயற்சிகள்வழியாக பல மில்லியன் மதிப்புள்ள பொருள்இழப்புக்களையும் தமிழர்களுக்கு ஏற்படுத்தி அவர்களின் தொழில் செய்யும் உரிமையினை மறுத்து அவர்களை வடக்கு கிழக்குக்கு விரட்டியடித்து வடக்கு கிழக்குதான் தமிழர்களின் தாயகம் என்பதை  வெளிப்படுத்திக் கொண்டனர். கொடிய தமிழின அழிப்பு நடந்து கொண்டிருந்த நேரத்தில்தான் இலங்கையின் சனாதிபதியாக இருந்த ஜே. ஆர். ஜெயவர்த்தனா 1983 இனஅழிப்பின் பொழுது பிரித்தானிய ஊடகவியலாளர் இயன்போர்ட்டிற்கு “நான் யாழ்ப்பாண மக்களின் (தமிழர்) கருத்துக் குறித்து கவலை அடையவில்லை. நாங்கள் அவர்கள் குறித்துச் சிந்திக்க முடியாது.

அவர்களின் வாழ்க்கை அவர்களின் கருத்து குறித்துக் கவலைப்பட முடியாது. வடக்கின் மீது நாங்கள் எவ்வளவு அழுத்தங்களைக் கொடுக்கின்றோமோ அந்த அளவுக்குச் சிங்கள மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். நான் தமிழ் மக்களைப் பட்டினி போட்டால் சிங்கள மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்” என்றார். இதுவே அன்று தொட்டு இன்று வரை சிங்களத் தலைமைகளின் தொடர்ச்சியான நிலைப்பாடாக உள்ளது என்பதற்கு இன்று பொதுசன முன்னணியின் தவிசாளரான பேராசிரியர் ஜி எல் பீரிஸ் இன்று தமிழர்களுக்காகக் குரல் எழுப்பும் உலகின் மனச்சாட்சியுள்ள மனித உரிமை ஆர்வலர்கள் குறித்த வீரசேகரிப் பேட்டி மீளவும் நிரூபிக்கிறது.

இந்நிலையில் இலங்கையில் தமிழர்கள் தங்களின் தொன்மையும் தொடர்ச்சியுமான இருப்புநிலையான தாயகம், தேசியம், தன்னாட்சி என்பதனைத் தக்கவைப்பதற்கான அரசியல் விழிப்புணர்வைத் தங்களின் பாதிப்புற்றுள்ள குரலை எவ்வாறு ஒலிக்கச் செய்வதற்குத் தேர்தல் களத்தில் ஒற்றுமையுடனும் ஒருமைப்பாட்டுடனும் செயற்படலாம் எனச் சிந்திக்க வேண்டிய நேரமாக அமைகிறது.

உலகநாடுகளில் அந்த அந்த நாடுகளின் சிறுபான்மையினமாகவும் புலம்பெயர் மக்களாகவும் உள்ள தமிழர்கள் உடனடியாகவும் உறுதியாகவும் தாங்கள் வாழும் நாடுகளின் மக்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் கட்சிகளின் தலைவர்களுக்கும், மனிதஉரிமை மற்றும் மனிதநல அமைப்புக்களுக்கும் இலங்கையின் சனாதிபதி தேர்தல் நடைபெறலாமென்ற உத்தேச நிலையிலேயே தமிழர்களுக்கு நடைபெற்ற மனித உரிமை மீறல்களும் யுத்தக் குற்றச் செயல்களும் குறித்த அனைத்துலக அக்கறைகளை கேலிபண்ணும் சிறிலங்கா அரசியல்வாதிகளின் பொறுப்பற்ற இனவெறி மதவெறிப் பேச்சுக்களையும் வெளிப்படுத்தித், தொடருகின்ற இனக்காணக்கூடிய  அச்சங்களைக், குறித்த தகவல்களையும் புள்ளிவிபரங்களையும் சான்றாதாரங்களுடன் செய்திப்படுத்தி இவை குறித்த அனைத்துலக விசாரணைகளை வேகப்படுத்துமாறும், எதிர்காலத்தில் இலங்கையில் தமிழரின் மனித உரிமைக்கு எதிரானவன் முறைச் செயற்பாடுகள் நடைபெறாதவாறு அனைத்துலக அழுத்தங்களையும் தலையீடுகளையும் மேற்கொள்ளுமாறும் கேட்க வேண்டும்.  இதற்கான புலம்பெயர் தமிழர்களின் மனித மூலவளம் சிதறிப் போகாதவாறு புலம்பெயர் தமிழர்களின் மனித உரிமை மற்றும் அமைதிக்காக இதுவரை உழைத்து வரும் அனைத்துத் தமிழர்களையும் ஒருங்குபடுத்தி அவற்றின் தனித்துவங்களைப் பேணிய நிலையில் ஒரு பொதுக்கொள்கைக்குக் கீழ் வழிப்படுத்தும் ஈழத்தமிழர்களின் மக்கள் அமைப்பு ஒன்று விரைவாகவும் அறிவார்ந்த நிலையில் உணர்ச்சிகளைக் கடந்து உணர்வுடன் சனநாயக வழிகளிலும் அனைத்துலக நாடுகள் மற்றும் அமைப்புக்களுடனான உரிய தொடர்புகளுடனும் செயற்படுத்தப்பட வேண்டும்.

இந்நோக்கங்கள் உடன் கடந்த ஒருஆண்டாக ஆரம்பநிலையில் முயன்று வரும் ஈழத்தமிழர் உரிமைப் பாதுகாப்பு மையம் இவ்விடயத்தில் சரியானதைச் சரியாகச் செய்து தமிழர்களின் வினைத் திறனையும் விளை திறனையும் பெருக்க வேண்டிய நேரமிது. இன்று அனைத்துலக விவகாரமாக இலங்கை சனாதிபதி தேர்தல் மாறியுள்ள நிலையில் வேகமுடனும் விவேகமுடனும் ஒற்றுமையுடனும் செயற்பட்டு இனஅழிப்புக்கான நீதியையும், காணாமல் போனவர்களுக்கான பொறுப்புக் கூறலையும், தாயக மக்களுக்குக் பெற்றுக் கொடுக்க வேண்டியது புலம்பெயர் தமிழர் வரலாற்றுக்கடமையாக உள்ளது.