போர்க் குற்றங்களை விசாரிக்க வெளிநாட்டு நீதிபதிகள்

சிறிலங்காவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டு வரும் யுத்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக வெளிநாட்டு நீதிபதிகள் அடங்கிய நீதிமன்ற பொறிமுறை ஒன்று விரைவில் உருவாக்கப்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

2015ஆம் ஆண்டு ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் வெளிநாட்டு நீதிபதிகளை சிறிலங்காவிற்கு வரவழைக்கும் உடன்படிக்கையில் ரணில் அரசாங்கம் கையெழுத்திட்டது. இந்த உடன்படிக்கை அப்போதைய அரசிற்கோ, ஜனாதிபதிக்கோ தெரியப்படுத்தப்படவில்லை. ஆனால் இந்த நீதிப் பொறிமுறை இன்னும் உருவாக்கப்படவில்லை.

அவ்வாறான ஒரு நீதிமன்றக் கட்டமைப்பை உருவாக்க முடியுமென அந்த உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு நீதிபதிகளை அழைத்துவர முடியுமென்பதே அதன் அர்த்தம். வெளிநாட்டு நீதிபதிகளை அழைத்து வந்து வழக்கு விசாரணைகளை நடத்துவதற்கு முழுமையான இணக்கத்தை ஏற்கனவே சர்வதேச சமூகத்திடம் தெரிவித்து விட்டது.

அமெரிக்காவுடன் சிறிலங்கா மேற்கொள்ளவுள்ள சோபா மிலேனியம் உட்பட 3 பாதுகாப்பு ஒப்பந்தங்களால் நாட்டின் இறைமையும், சுதந்திரமும் பாதிக்கப்படும் ஆபத்து இருப்பதாகவும் சுதந்திரக்கட்சி பொதுச் செயலாளர் எச்சரிக்கின்றார்.

எனவே அமெரிக்காவுடனான இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்வது பற்றி சற்று சிந்திக்குமாறு ரணில் அரசாங்கத்திடம் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.