முல்லை மக்களை, கோவிட் தொற்று அபாயத்திற்குள்ளும் தள்ளிவிடாதீர் – ரவிகரன்

26
47 Views

யுத்தத்தின் வடுக்களைச் சுமந்தபடி பெரும் போராட்டத்திற்கு மத்தியில் தமது அன்றாட வாழ்வினை நகர்த்திச்செல்லும் முல்லைத்தீவு மாவட்டமக்களை கொவிட் தொற்று என்னும் அபாயத்திற்குள் தள்ளிவிடாமல், அவர்களுக்கான தடுப்புசிகளை வழங்குவதற்கு உரியவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது கொவிட் -19 தொற்று அதிகரித்துள்ளதுடன், அண்மையில் கொவிட் தொற்றாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இருப்பினும் இதுவரையில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தடுப்பூசிகள் எவையும் வழங்கப்படவில்லை. இந் நிலையிலேயே ரவிகரன் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

இந்த கொவிட் – 19 தடுப்பூசி விடயத்தினைப் பொறுத்தவரை, நமது நாட்டு அரசு வெளிநாடுகளிலிருந்து குறிப்பிட்டளவு தடுப்பூசிகளைப் பெற்றுள்ளதாக அறியக்கூடியதாகவிருக்கின்றது.

அதிலே குறிப்பாக 31 லட்சம் சைனோ போர்ம் தடுப்பூசிகளையும், 9 லட்சம் அஸ்ராசெனெகா தடுப்பூசிகளையும், 65 ஆயிரம் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளையும் இலங்கை அரசு வெளிநாடுகளில் இருந்து பெற்றுக்கொண்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

இதிலே வடக்குக்கு மாகாணத்திற்கு 50ஆயிரம் சைனோபோர்ம் தடுப்பூசிகளும், 14 ஆயிரம் அஸ்ரெசெனெகா தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
அதிலே குறிப்பாக 48 ஆயிரம் சைனோபோர்ம் தடுப்பூசிகள் யாழ்மாவட்டத்திற்கென வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறாக இந்த தடுப்பூசி விடயத்தில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப் பட்டுவருகின்றன. இந் நிலையில் வடக்கின் முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய வன்னி மாவட்டங்களுக்கான தடுப்பூசிகள் எவையும் இதுவரை வழங்கப்படவில்லை.
அத்தோடு கிளிநொச்சி மாவட்டத்திற்கும் தடுப்பூசிகள் வழங்கப்படவில்லை.

எனவே உரியவர்கள் இந்த வன்னிப் பகுதிகளுக்கும், கிளிநொச்சி மாவட்டத்திற்கும் தடுப்பூசிகளை வழங்குவது தொடர்பிலும் கூடிய கவனஞ்செலுத்தவேண்டும்.
அதிலும் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தடுப்பூசிகளை வழங்க உரியவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மிகவேகமாக அதிகரித்துவருகின்றது. அண்மையில் கொவிட் தொற்றாளர் ஒருவர் மரணித்த சம்பவம் ஒன்றும் பதிவாகியுள்ளது.

மேலும் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது முல்லைத்தீவு மாவட்ட மக்களே அதிகம் பாதிக்கப்பட்டனர். அவ்வாறு பாதிக்கப்பட்ட மக்கள் தற்போதும் யுத்தத்தின் வடுக்களைச் சுமந்து தமது அன்றாட வாழ்க்கையை பெரும் போராட்டங்களுக்கு மத்தியில் நகர்த்திவருகின்றனர்.

அவ்வாறாக பெரும் போராட்டங்களுக்கு மத்தியில் தமது வாழ்வை நகர்த்திச் செல்லும் எமது முல்லைத்தீவு மாவட்ட மக்களை, தொடர்ந்தும் கொவிட் தொற்று என்னும் ஒரு அபாயகரமான சூழலுக்குள் தள்ளாமல் அவர்களுக்கான தடுப்பூசிகளை வழங்குவதற்கு உரியவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் – என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here