சவுதி வானூர்தி நிலையம் மீது ஏவுகணைத் தாக்குதல் – 26 பேர் காயம்

சவுதி அரேபியாவின் வானூர்தி நிலையத்தின் மீது யேமன் ஆயுதக்குழுவினர் இன்று (12) மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதுடன், வானூர்தி நிலையமும் சேதமடைந்ததாக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணியினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

யேமன் நாட்டில் உள்ள கூதீஸ் ஆயுதக்குழுவினர் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராட்சியத்தின் படைகளுக்கு எதிராக தமது போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இன்று அவர்கள் சவுதியின் அபா வானூர்தி நிலையத்தின் மீது மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலில் 26 பேர் காயமடைந்துள்ளனர். பயணிகள் வந்து இறங்கும் இடத்தில் ஏவுகணை வீழ்ந்த வெடித்ததனால் அந்தப் பகுதியும் சேதமடைந்துள்ளது.

காயமடைந்தவர்களில் 8 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், ஏனையவர்களுக்கு சம்பவ இடத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

ஈரான் வழங்கிய ஏவுகணை மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் ஒரு போர்க்குற்றமாகும் என அது மேலும் தெரிவித்துள்ளது. எனினும் ஈரான் கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.

கூதீஸ் படையினரால் பதவியில் இருந்து துரத்தப்பட்ட தமது ஆதரவு அரச தலைவரை மீண்டும் பதவிக்கு கொண்டுவரும் பொருட்டு சவுதி அரேபியா தலைமையில் ஐக்கிய அரபு இராட்சியம் யேமன் மீது 2015 ஆம் ஆண்டில் இருந்து வான் தாக்குதல்களையும் படை நடவடிக்கையையும் மேற்கொண்டு வருகின்றது. இந்த நடவடிக்கையினால் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட பல ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.