ஸ்புட்னிக் V தடுப்பூசிகளை தயாரிக்கும் 6 இந்திய நிறுவனங்கள்

ஆண்டுதோறும் 70 கோடி ஸ்புட்னிக் V தடுப்பூசிகளை 6 இந்திய நிறுவனங்கள் தயாரிக்கவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உயிரி தொழில்நுட்பத் துறை செயலா் ரேணு ஸ்வருப்  கூறுகையில்,

“தற்போது 3 கொரோனா தடுப்பூசிகள் இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. இவை தவிர பாரத் பயோடெக்கின் மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்து, ஸைடஸ் கெடிலா, பயோஇ, ஜெனோவா நிறுவனங்களின் தடுப்பூசிகள் பல்வேறு கட்ட பரிசோதனைகளில் உள்ளன.

அவற்றை உருவாக்கும் ஆரம்பகட்டப் பணிகளின் போது அந்த நிறுவனங்களுக்கு மத்திய உயிரி தொழில்நுட்பத் துறை ஆலோசனைகள், தொழில்நுட்பம் மற்றும் நிதியுதவி வழங்கியது. அந்தத் தடுப்பூசிகளை உருவாக்கும் பணிகளுக்கு சுமார் ரூ.400 கோடி நிதியுதவியை மத்திய அரசு வழங்குகிறது.

அந்தத் தடுப்பூசிகளை மாதந்தோறும் 1.5 கோடி முதல் 2 கோடி அளவில் தயாரிக்கும் விதமாக ஏற்கெனவே உற்பத்தித் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது. அவற்றுக்கு ஒப்புதல் கிடைத்தவுடன், அந்தத் தடுப்பூசிகளை பயன்பாட்டுக்கு கொண்டுவர முடியும்.

ரஷ்யா உருவாக்கியுள்ள ஸ்புட்னிக்-V கொரோனா தடுப்பூசியை ஆண்டுதோறும் 70 கோடி அளவில் 6 இந்திய நிறுவனங்கள் தயாரிக்கவுள்ளன”  என்றார்.