வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் குறித்து ஏனைய கட்சிகளுடன் பேசியே முடிவு – மாவை

வடக்கு முதலமைச்சர் வேட்பாளராக யாரை நியமிப் பது என்பது தொடர்பில், தற்போதைய நிலையில் பல கட்சிகள், தற்போதைய அரசாங்கத்தின் நிலைமை போன்றவற்றைப் பரிசீலித்து ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடி அதற்கு தகுந்த முடிவை நாங்கள் எடுப்போம் என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சி யின் தலைவர் மாவை. சேனாதிராசா தெரிவித்தார்.

வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் பதவிக்கு மாவை சேனாதிராசா தகுதியற்றவர் என்று விக்னேஸ்வரன் எம்.பி. தெரிவித்த கருத்துத் தொடர்பில் ஊடகங்களிடம் மாவை சேனாதிராசாவிடம் நேற்று கேள்வி எழுப்பின. இதற்கு பதிலளித்தபோதே அவர் மேற்கண்ட வாறு தெரிவித்தார்.

இதன்போது, அவர் மேலும் கூறியவை வருமாறு:

“விக்னேஸ்வரன் கூறியதைப் பற்றி நான் பெரிதாகக் கவலைப்படவில்லை. ஏனென்றால், கடந்த காலங்களில்கூட 2013ஆம் ஆண்டில் மாகாண சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தலுக்கான திகதி குறிப்பிடப்படும் முன்னரே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாவட்ட கிளைகள் தோறும் மாவை சேனாதிராசா தான் அந்த பொறுப்புக்கு வர வேண்டும் எனத் தீர்மானம் எடுத்திருந்தார்கள். எனக்கும் கூறினார்கள்

அதைவிட, அந்தக் காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் நான்கு கட்சிகள் இருந்தன. அந்த நான்கு கட்சிகளும் மாவை சேனாதிராசாதான் முதலமைச்சர் வேட்பாளராக வர வேண்டும் எனத் தீர்மானித்திருந்தார்கள். இன்னுமொரு சந்தர்ப்பத்தில் விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தலாம் எனப் பொதுவானவர்கள் பேசினார்கள்.

நான் அவர்களுக்கு சொல்லியிருந்தேன். நான் நிச்சயமாக இந்த விடயத்தில் போட்டியிடுவதா இல்லையா என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானிக்கும் என்று. ஆனால், என்னுடைய நிலைப்பாடு பதவிகளை பறித்துக்கொள்வதல்ல. போராட்ட வழிகளில் இருந்து வந்த நான், 2009 ஆம் ஆண்டுக்குப் பின், போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு – அரசு, இராணுவத்தால் போர் குற்றங்கள் இழைக்கப்பட்ட காரணத்தால் அந்த அரசாங்கம் இனப் பிரச்னைக்கான தீர்வை முன்வைக்கவில்லை. போர் காலத்தில் இடம்பெற்ற குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கவில்லை எனவே அந்த விடயங்களில் கூடிய கரிசனை செலுத்தி, வழக்குகளைத் தாக்கல் செய்து மக்களுக்கான நீதியை பெற்றுக்கொடுக்கும் வேலைத் திட்டங்களில் நான் ஈடுபட்டிருந்தேன்.

விக்னேஸ்வரனை தேர்தலில் நிறுத்துவது தொடர்பில் எமது மத்திய குழுவில் விவாதித்தபோது, அதிக நேரம் நான்தான் விவாதித்திருந்தேன் அவரை வேட்பாளராக நிறுத்துவோம் என்று. அவர் அந்தத் தேர்தலில் போட்டியிட்டு ஒரு இலட்சத்து 32 ஆயிரம் வாக்குகளைப் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றார். ஆனால், இந்தமுறை பாராளுமன்ற தேர்தலில் 21 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார்.

அவர் தனிக்கட்சி ஆரம்பித்து அதன் மூலம் குறைந்தளவு வாக்குகள் பெற்று இருக்கின்றார். எனவே அதனை வைத்தே நாங்கள் பார்க்க முடியும் அவருக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கை. அவர் ஒரு கட்சியின் தலைவர் இன்னொரு கட்சியின் தலைவரை விமர்சிப்பது அவ்வளவு நாகரிகமாக விடயம் அல்ல என்பதே எனது கருத்தாகும். அவர் அதனை மாற்றிக்கொள்ள வேண்டும்.

2013ஆம் ஆண்டு நாங்கள் என்னை வேட்பாளராக நிறுத்தி இருந்தால் நான் விக்னேஸ்வரனை போல் வெற்றியடைந்திருப்பேன். எனினும், தற்போதைய நிலைமையில் என்னை வேட்பாளராக நிறுத்தினால் நான் அந்தப் பொறுப்பை ஏற்க தயாராக உள்ளேன். எனினும், தற்போதைய நிலையில் பல கட்சிகள், தற்போதைய அரசாங்கத்தின் நிலைமை போன்றவற்றைப் பரிசீலித்து ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடி அதற்கு தகுந்த முடிவை நாங்கள் எடுப்போம்” என்றார்.