மாகாண சபைத் தேர்தல்களை 6 மாதத்துக்குள் நடத்த முடியும் – அமைச்சர் பீரிஸ்

“மாகாண சபைகளுக்கான தேர்தல் முறை என்ன என்பதை அனைத்துக் கட்சிகளிடமும் நாங்கள் கோரவுள்ளோம். அதன் பின்னரே வரைபாக பாராளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளோம். அந்த வகையில் இன்னும் 06 மாதங்களிற்குள் இந்த தேர்தலை நடத்த எதிர்பார்க்கின்றோம்” எனத் தெரிவித்திருக்கின்றார் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்.

சிறிலங்கா பொதுஜன முன் னணியின் ஊடகவியலாளர் மாநாடு நேற்று பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் உள்ள தலைமையகத்தில் நடந்தபோது இத்தத் தகவல்களை அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார். இங்கு மாகாண சபைத் தேர்தல் குறித்து அவர் மேலும் தெரி வித்ததாவது:

“தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்து குறித்து நாங்கள் ஆச்சரியடைகின்றோம். மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தும்படி அவர்கள் கூறுகின்றார்கள். ஆனாலும் தேர்தலுக்கான தாமதத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒரு காரணமாகும். மிகவும் பிழையான முறையில் முறையற்றதாக நல்லாட்சிக்காலத்தில் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட சட்டம் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

அமுலில் இருந்த தேர்தல் முறையும் நீக்கப்பட்டது. அதற்கு மாற்றீடானமுறையும் அறிமுகஞ்செய்யப்படவில்லை. அந்த அனைத்து படிமுறைகளையும் பூரணப்படுத்தியதன் பின்னரே எம்மால் தேர்தலை நடத்தமுடியும். மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் முறை பற்றிய புதிய சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்ற வியாக்கியானத்தை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது. தற்போது அந்த சட்டமூலத்தை தயாரிக்கின்ற பணி இடம்பெற்று வருகிறது. சம்பந்தப்பட்ட அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன், அமைச் சரவைப் பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார். மாற்றீடு வழியை அவர் யோசனையாக சமர்பித்துள்ளார்.

தேர்தல் முறை என்ன என்பதை அனைத்துக் கட்சிகளிடமும் நாங்கள் கோரவுள்ளோம். அதன் பின்னரே வரைவாக பாராளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளோம். அந்த வகையில் இன்னும் 06 மாதங்களுக்குள் இந்தத் தேர்தலை நடத்த எதிர்பார்க்கின்றோம்” என்றார்.