என் குழந்தைகளை பிரிந்து 11 ஆண்டுகள் ஆகிவிட்டன: ஆப்கான் அகதி

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரிலிருந்து நான்கு மணிநேர பயணத் தூரத்தில் உள்ள ஸ்வான் ஹில் அவுஸ்திரேலியாவின் உணவுக் கிண்ணமாக வர்ணிக்கப்படுகிறது. பெருமளவிலான பாதாம் பருப்பும் திராட்சைகளும் தயாரிக்கக்கூடிய பகுதியாக இது இருக்கின்றது.

இப்பகுதியில் பெரும் உற்பத்தி நடக்கக்கூடிய காலங்களில், பல அகதிகள் உள்பட சுமார் 10 ஆயிரம் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வேலைவாய்ப்புகள், பாதுகாப்பான சமூக வாழ்க்கையை தேடி வருகின்றனர்.

இப்பகுதியில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பல அகதிகள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் ஒருவரான ‘அலி’ கடந்த 2009ம் ஆண்டு ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த பொழுது, அவரது 6 குழந்தைகளையும் கர்ப்பிணி மனைவியையும் பிரிந்து வரவேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகும் அந்த நிலை மாறவில்லை. அவரது குழந்தைகளையும் மனைவியையும் இத்தனை ஆண்டுகளாக காணாமல் இருப்பது ஆப்கான் அகதியான அலியை மனதளவில் பெரிதும் பாதித்துள்ளது.

“என் குழந்தைகளை பிரிந்து 11 ஆண்டுகள் ஆகிவிட்டன. தொலைப்பேசி வழியாக மட்டுமே அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறேன்,” என்கிறார் அலி.