170 ஆண்டுகளுக்கு பின்,புகழ் பெற்ற செய்தி நிறுவனத்தில் பெண் ஒருவர் தலைமை ஆசிரியராக நியமனம்

உலக புகழ் பெற்ற ராய்ட்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனம், கடந்த 170 ஆண்டுகால இதழியியல் வரலாற்றில் முதன் முதலில் அலெக்ஸான்ட்ரா கல்லோனி என்பவரை முதல் பெண் தலைமை பத்திரிக்கை ஆசிரியராக நியமித்துள்ளது.

உலக நாடுகளில் 2,450 செய்தியாளர்களுடன் பணியாற்றிவரும் ராய்ட்டர்ஸ் நிறுவனம் பல இடங்களில் தன்னுடைய கிளை அலுவலகங்களை அமைத்துள்ளது. ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் தற்போதைய ஆசிரியராக உள்ள ஜே. அட்லர் இந்த மாதத்துடன் முதன்மை ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வுபெறுகிறார்.

இவருடைய காலகட்டத்தில் ராய்ட்டர்ஸ் நிறுவனம் ஏராளமான இதழியல் விருதுகளைப் பெற்றுள்ளது. குறிப்பாக ஏழு புலிட்சர் விருதுகளை ஜே. அட்லர் ஆசிரியராக இருந்தபோது ராய்ட்டர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

இந்நிலையில் ரோம் நாட்டில் பிறந்தவரான 47 வயதான அலெஸாண்ட்ரா கல்லோனியை ராய்ட்டர்ஸ் நிறுவனம் முதன்மை ஆசிரியராக நியமித்துள்ளது.

அலெஸாண்ட்ரா வரும் 19-ம் திகதி முதல் ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் முதன்மை ஆசிரியராக தன்னுடைய பணிகளை அதிகாரபூர்மாக தொடங்கவுள்ளார்.

இவர் ஹார்வேர்டு பல்கலைக்கழகம் மற்றும் இலண்டன் பொருளாதார பள்ளியில் பட்டம் பெற்றவர். ஆங்கிலம், இத்தாலி உள்ளிட்ட நான்கு மொழிகளில் பேசும் திறமை கொண்டவர். தற்போது ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக ஆசிரியராக பணியாற்றிவரும் அலெஸாண்ட்ரா, உலகளவில் உள்ள 200 ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் அவரின் கீழ் பணிபுரிந்து வருகிறார்கள்.

அலெஸாண்டரா தொடக்கத்தில் ராய்ட்டர்ஸ் நிறுவனத்தில் இத்தாலி செய்தி பிரிவில் செய்தியாளராக தன்னுடைய பணியை கடந்த 2000-ம் ஆண்டு தொடங்கினார்.

“டிஜிட்டல் மற்றும் வணிகத்தில் ராய்ட்டர்ஸ்  நிறுவனத்துப் பங்குகளை ஊக்குவிப்பதே என்னுடைய முதன்மை நோக்கம். நிறுவனத்தின் 170 ஆண்டுக்கால வரலாற்றில் ராய்ட்டர் நிறுவனம் உண்மையான மற்றும் தெளிவான செய்திகளை வழங்குவதில் மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. உலகத்தரம் வாய்ந்த செய்தி அலுவலகத்தில் ஏராளமான திறமைகள், அர்ப்பணிப்பு மற்றும் ஊக்கமளிக்கும் பத்திரிகையாளர்களுடன் பணியாற்றுவது எனக்கு பெருமையாக உள்ளது” என ராய்ட்டர்ஸ் நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட பதவி அறிவிப்பு நிகழ்ச்சியில் அலெஸாண்டரா தெரிவித்துள்ளார்.